சென்னை, கோபாலபுரத்தில் உள்ள தனியார்ப் பள்ளி அருகே கடந்த 15.6.2022-ம் தேதி மாலை, பெண் ஒருவர் நடந்துச் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இரண்டு பேர், அந்தப் பெண்ணின் செல்போனை பறித்துவிட்டு தப்பிச் சென்றனர். இதையடுத்து கடந்த 19.6.2022-ம் தேதி அதே பகுதியில் நடந்துச் சென்ற 62 வயதான ஓய்வுப்பெற்ற அரசு ஊழியர் ஒருவரின் செல்போனையும் பைக்கில் வந்த இரண்டு பேர் பறித்துச் சென்றனர். இந்த இரண்டு சம்பவங்கள் குறித்து ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விவேக்

இந்தச் சூழலில் கடந்த 18.6.2022-ம் தேதி அபிராமபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனியார் மருத்துவமனை அருகே நடந்துச் சென்ற ஒருவரிடம் பைக்கில் வந்த இரண்டு பேர் செல்போனை பறித்து விட்டு தப்பிச் சென்றனர். இந்த மூன்று சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே கும்பல் என்பதை சிசிடிவி மூலம் போலீஸார் கண்டறிந்தனர். ஆனால் சிசிடிவி-யில் அவர்களின் முகம், வாகனத்தின் பதிவு நம்பர் சரியாக தெரியவில்லை. அதனால் செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களைப் பிடிப்பதில் போலீஸாருக்கு சிக்கல் ஏற்பட்டது.

அதையடுத்து, செல்போன் பறிப்பில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க 42 சிசிடிவி கேமராப் பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது செல்போன் பறிப்பில் ஈடுபட்டவர்கள் வந்த பைக் குறித்து விசாரித்தனர். அப்போது பைக்கில் வந்தவர்கள், சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்தத் தகவலையடுத்து பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராப் பதிவை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது அந்த பைக்கில் இளம்பெண் ஒருவரும் இளைஞர் ஒருவரும் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பைக் குறித்து போலீஸார் விசாரித்தபோது அதன் உரிமையாளர் திருத்தணியில் இருப்பது தெரியவந்தது.

ஜெகன்

இதையடுத்து செல்போன் திருடர்கள் குறித்த தகவல்களை சேகரிக்க chennai city crime என்ற வாட்ஸ்அப் குரூப்பில் சிசிடிவி பதிவுகளை போலீஸார் பதிவு செய்தனர். செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட இளம்பெண், இன்ஸ்ட்டாவில் நண்பர்களுக்கு ரகசிய குறியீடுகள் மூலம் குறுஞ்செய்திகளை அனுப்பி செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தன. அதைத் தொடர்ந்து அந்த இளம்பெண்ணின் செல்போன் நம்பரை கண்டறிந்த போலீஸார் அவர் குறித்த விவரங்களை சேகரித்தனர். அப்போது அந்த இளம்பெண், திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்தது தெரியவந்தது.

உடனடியாக அங்கு சென்ற போலீஸார் இளம்பெண்ணைப் பிடித்து விசாரித்தனர். அப்போது திருவல்லிக்கேணி ஆதாம் மார்க்கெட் பகுதியில் உள்ள லாட்ஜில் செல்போன் பறிப்பு சம்பவத்துக்குப் பயன்படுத்திய பைக்கை மறைத்து வைத்த தகவல் தெரியவந்தது. அங்கு விரைந்த போலீஸார் பைக்கை பறிமுதல் செய்தனர். லாட்ஜில் தங்கியிருந்த இளம்பெண், சிறுமி என்ற தகவலும் தெரிந்தது. அவர் அளித்த தகவலின்படி ஒரே அறையில் தங்கியிருந்த 4 ஆண்களையும் போலீஸார் கைதுசெய்தனர்.

ஜெகதீசன்

விசாரணையில் அவர்களின் பெயர் தேனாம்பேட்டையைச் சேர்ந்த விவேக் என்கிற குள்ளா (26), சென்னை காமராஜர் சாலையைச் சேர்ந்த ஜெகன் (26), கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த ஜெகதீசன் (24), தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சரவணபெருமாள் (19) எனத் தெரியவந்தது. இவர்களுடன், 16 வயது சிறுமி இன்ஸ்ட்ராகிராம் மூலம் பழகியிருக்கிறார். பின்னர் அனைவரும் சேர்ந்து செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர். இவர்கள் ராயப்பேட்டை, அபிராமபுரம், ஆயிரம் விளக்கு, கிண்டி, கோட்டூர்புரம், வேளச்சேரி, எழும்பூர், நுங்கம்பாக்கம், அண்ணாசாலை ஆகிய பகுதிகளில் செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இவர்களிடமிருந்து ஏழு செல்போன்கள், ஒரு ஆப்பிள் ஐ பேட், இரண்டு பைக்குகள், 15,000 ரூபாய் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், “இந்த வழக்கில் சிக்கிய 16 வயது சிறுமி, இன்ஸ்ட்ராகிராம் மூலம்தான் செல்போன் பறிப்பு சம்பவங்களுக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார். அவர் எப்படி தகவல் தெரிவித்தார் போன்ற விவரங்களை சேகரித்து வருகிறோம்.”

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.