சமீபகாலமாக சாதராண மனிதர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் நெட்டிசன்களின் கேலி, கிண்டல்களுக்கு ஆளாகும் போக்கு அதிகரித்து காணப்படுகிறது. இதற்கு செல்ஃபோன் மற்றும் சமூகவலைத்தள பயன்பாடுகள் அதிகரித்து வருவது காரணமாக கூறப்பட்டாலும், எதையும் ஆராயாமல், ஒருவரை காயப்படுத்துகிறோம் என்ற சிறு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் மேம்போக்காக நாம் பதிவிடும் கருத்துக்கள், மீம்கள் மற்றவர்களை மனதளவில் மிகப்பெரிய பாதிப்பைதான் ஏற்படுத்தும். இந்த கேலி, கிண்டல் மனப்போக்கு முதலில் நமது குடும்பத்தில் நமது பெரியவர்களால், சிறியவர்களுக்கும் அல்லது சிறியவர்களால் பெரியவர்களுக்கும் சிறிதாக ஆரம்பிக்கும். நாளடைவில் அதுவே அதிகரிக்கும்போது தான், ஒருவர் மனதளவில் பாதிக்கப்படும்போதுதான் அதன் தாக்கம் தெரியவரும். நான்கு முதல் 40 பேர் வரை உள்ள குடும்பத்திலேயே இந்த கேலி, கிண்டல்கள் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில், பொதுவெளியில் பிரபலங்கள் கேலி, கிண்டல்களுக்கு உள்ளாவது எந்த மாதிரியான சிக்கல்களை நாம் உண்டாக்குகிறோம் என நாம் அறிந்து வைப்பதில்லை. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் கேலி, கிண்டல்களுக்கு ஆளான திரைத்துறையினர் பற்றி பார்க்கலாம்.

சமூகவலைத் தளங்களில் தமிழ்த் திரைத்துறையினர் மீதான விமர்சனங்கள் சுமார் 8 ஆண்டுகளாகவே நடைபெற்று வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு ‘அஞ்சான்’ திரைப்படம் வெளியானது. ரஜினிக்கு ஒரு பாட்சா போல், சூர்யாவுக்கு ஒரு ‘அஞ்சான்’ என கூறியிருந்தார் அதன் இயக்குநர் லிங்குசாமி. ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாமல் தோல்வியடைந்தது. இவ்வார்த்தைகள் சமூகவலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டது.

image

‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ என வித்தியாசமான கதைகளை மிகவும் நேர்த்தியாக மக்களிடம் கொண்டு சென்றவர், இயக்குநர் நெல்சன் திலீப்குமார். இவ்விரு படங்களும் மிகப் பெரும் வெற்றியடைந்ததால், சமகால தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களின் வரிசையில் இடம் பிடித்தார், நெல்சன். இதைத் தொடர்ந்து விஜயுடன் கூட்டணி சேர்ந்த நெல்சன், ‘பீஸ்ட்’ படத்தை இயக்கினார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜயின் படம் என்பதால் எதிர்பார்ப்பு வழக்கத்தை விட சற்று அதிகமாகவே இருந்தது. ஆனால், அந்த
எதிர்பார்ப்பை ‘பீஸ்ட்’ திரைப்படம் பூர்த்தி செய்யவில்லை என்றே கருத்துகள் வெளியானது. இதனால், இயக்குநர் நெல்சன் மீது எதிர்மறையான
விமர்சனங்களை முன்வைக்க தொடங்கினர், நெட்டிசன்கள்.

image

‘டாக்டர்’ படத்திற்குப் பிறகு ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இயக்குநர் நெல்சன், ‘பீஸ்ட்’ படத்திற்கு பிறகு கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகினார். தான் விமர்சிக்கப்படுவதை மறைமுகமாகவும் ஒரு விழாவில் நெல்சன் ஒப்புக்கொண்டிருந்தார். இது ஒரு புறம் சென்றுக் கொண்டிருக்க, இயக்குநர் லோகேஷ் கனகராஜின் விக்ரம் படம் திரைக்கு வந்தது. திரைக்கு வந்த 3 நாளிலே 100 கோடிக்கும் மேல் வசூல் சாதனையை ஈட்டியதுடன்
மட்டுமில்லாமல், ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த சூழலில் லோகேஷ் கனகராஜூடன் ஒப்பிட்டு நெல்சனை வறுத்து தள்ளினர், இணைய வாசிகள். குறிப்பாக தனது முதல் இரண்டு படங்கள் வெற்றி அடைந்துவிட்டன. இனி தான் இயக்கும் படங்கள் வெற்றி அடைந்தால், அது தனக்கு போனஸ் தான் என்று நெல்சன் கூறிய வீடியோவை பகிர்ந்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர். அத்துடன் லோகேஷ் கனகராஜின் வீடியோவை பகிர்ந்து கான்பிடென்ஸ் இருக்கலாம், ஆனால், நெல்சனுக்கு ஓவர் கான்பிடென்ஸ் என்று பதிவிட்டனர். படத்தில் வரும் துப்பாக்கிக்காக லோகேஷ் கனகராஜ் இரண்டு மாதங்கள் செலவிட்டதாக கூறிய நிலையில், எந்தவித அடிப்படை விஷயங்களையும் ஆராயாமல் படம் எடுத்ததாக நெல்சனை வச்சு செய்தனர் நெட்டிசன்கள்.

அதுவும் ‘பீஸ்ட்’ படத்தை பார்த்த ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி ஒருவர், அதன் கிளைமாக்ஸ் காட்சியில் உள்ள லாஜிக் மீறல்களை சுட்டிக்காட்டியதும், திடீரென அந்தப் படம் சமூகவலைத்தளத்தில் ட்ரெண்டானது. மேலும் ‘பீஸ்ட்’ படம் வெளிவந்த மறுநாள் ‘கே.ஜி.எஃப்’ படம் வந்தது. அந்தப் படம் 1,200 கோடி ரூபாய்-க்கு மேல் வசூல் சாதனை புரிந்தது.

image

‘வலிமை’, ‘பீஸ்ட்’ ஆகிய இரண்டு படங்கள் தோல்வியடைந்ததால், தமிழ் சினிமாவே முடங்கி விட்டதாக நெட்டிசன்கள் தெரிவிக்க ஆரம்பித்தனர். நம் தமிழ் திரையுலகமும், 1948 முதலே ‘சந்திரலேகா’ போன்ற பிரம்மாண்ட படங்களை எடுத்ததை நாம் மறந்து? நம்மை நாமே ட்ரோல் செய்ய ஆரம்பித்தோம் என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், ரஜினிகாந்தின் 169-வது படத்தை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு கிடைத்தது. ‘பீஸ்ட்’ படத்திற்கு பிறகு கிடைத்த மோசமான விமர்சனங்களால், அப்படம் கைவிடப்படும் என பல வதந்திகள் வெளியாகின. இறுதியில், ரஜினியின் அடுத்த படத்தை நெல்சன் இயக்குவார்
என்பது உறுதி செய்யப்பட்டது. சில திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும், சில படங்களுக்கு எதிர்மறையான விமர்சனங்கள்
கிடைக்கும். அதற்காக இயக்குநரையோ, நடிகரையோ, இந்த அளவிற்கு விமர்சிப்பது தவறானது என்றும் திரைத்துறையினர் கூறுகின்றனர்.

இதனை உறுதி செய்யும் வகையில் உதவி இயக்குநர் புஹாரி ராஜா சமூகவலைத்தளப் பக்கத்தில் பதிவிட்ட பதிவு வைரலானது. “நெல்சனின் தோல்வி சொல்ல வருகிற செய்தி ,ஒருபோதும் உங்கள் வாழ்க்கையில் தோற்றுப்போய்விடாதீர்கள் என்பதாகத்தான் இருக்கிறது. “தோல்வி தான் வெற்றிக்கு முதல்படி, failure is a process” என பள்ளிகளில் நாம் கற்றுணர்ந்த அடிப்படை எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத்துகிறது. ஓட்டப்பந்தயத்தில் ஒருத்தன் மட்டும் தான் ஜெயிக்க முடியும் ,அதுக்காக ஓடுகிற எல்லா வீரனும் திறமையற்றவர்க்ள் என சுருக்கிவிட பார்க்கிறது.

image

தோல்வி என்பது கிண்டலுக்கு உள்ளாகும் பட்சத்தில், எல்லாவற்றிற்குமான அளவுகோல் வெற்றி தான் என்றாகும் பட்சத்தில், எப்போதும் ஒருவித அழுத்தத்துடனேயே பயணிக்க வேண்டிய சூழலை யார் உருவாக்குகிறார்கள்? பரீட்சைல ஃபெயிலாகிட்டா தற்கொலை பண்ணிக்கலாமா? காதல் தோல்வி என்றால் தற்கொலை செய்துகொள்ளலாமா? என எப்போதும் அறிவுரைகளை தூக்கிசுமக்க நமக்கு என்ன தகுதி இருக்கிறது.?

இது நெல்சனுக்காக மட்டுமல்ல, தவறவிட்ட வாய்ப்புகளுக்காக இன்னும் வருந்தி காத்திருக்கிற எல்லா நண்பர்களுக்காகவும் மீண்டு வருவதற்கு துணை நிற்போம், தோல்விகளை ஏற்றுக்கொள்ள பழகுவோம்.. ஒரு வெற்றி எல்லா தோல்விகளையும் மறைத்துவிடும். ஆனால் ஒரு தோல்வி நிறைய பக்குவப்படுத்தும் success is a journey not a destination” என்று தெரிவித்திருந்தார். உண்மை தானே.

இதேபோல் திரைத்துறையில் கடின உழைப்பின் மூலம் வேகமாக வளர்ந்து வரும் நடிகர் விஜய்சேதுபதியின் சமீப காலங்களாக விமர்சன கணைகளையும் எதிர்கொண்டு வருகிறார். இதுகுறித்து பார்க்கலாம்… 

குறிப்பிடத்தக்க பின்னணி ஏதும் இன்றி தமிழ் சினிமாவில் கடுமையான உழைப்பின் மூலம் முன்னணி நடிகராக உயர்ந்தவர் விஜய்
சேதுபதி. ‘பீட்சா‘, ‘நடுவுல கொஞ்ச பக்கத்த காணோம்‘, ‘சூது கவ்வும்’, ‘விக்ரம் வேதா’, ‘96’ போன்ற படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற்றதால் விஜய் சேதுபதி தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்கள் வரிசையில் இடம் பிடித்தார். ஆனால் இதன் பின் வந்த ‘லாபம்’, ‘துக்ளக் தர்பார்’, ‘அனபெல் சேதுபதி’ போன்ற படங்கள் பெரிய வெற்றி பெறாத நிலையில், இணையத்தில் இவரைப்பற்றிய விமர்சனங்களும் தொடங்கின. இந்த சூழலில் முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லன் கதாப்பாத்திரங்களையும் ஏற்று நடிக்க தொடங்கினார் விஜய் சேதுபதி.

image

ரஜினியின் ‘பேட்ட’, விஜயின் ‘மாஸ்டர்’ படங்களில் வில்லனாக நடித்தார் விஜய் சேதுபதி. ஆனால் விஜய் சேதுபதி பாத்திரங்களை  மாற்றிக்கொண்டாலும் ஒரே மாதிரியான உடல் மொழி, ஒரே மாதிரியான நடிப்புதான் திரையில் தெரிவதாக விமர்சனங்கள் வெளியாகின. மேலும் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாவதாக இருந்த ‘800’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருந்தநிலையில், அதன்பின்புதான் அவர் மீதான விமர்சனம் அதிகரிக்கத் துவங்கியது. ஈழத் தமிழர்களின் படுகொலையின்போது, ராஜபக்சே அரசுக்கு துணை நின்றதால் முத்தையா முரளிதரன் மீது தமிழ் சமூகம் எப்போதும் கடும் கோபத்தில் தான் இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் ஒரு கலைஞனாக அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்காக அவர் அதிகளவில் விமர்சனம் செய்யப்பட்டார்.

மேலும், தான் நடிக்க வந்த காலங்களில் உதவி புரிந்த நண்பர்களுக்காக அதிகளவில் ஒத்துக்கொண்ட படங்களினாலும் விஜய் சேதுபதி விமர்சிக்கப்பட்டார். இந்நிலையில் அண்மையில் வெளியான ‘வி்க்ரம்’ படத்தில் தன் மீதான விமர்சனங்களை. களையும் வகையில் தோன்றியிருந்தார் விஜய் சேதுபதி. அதிகப்படியான படங்களில் நடிப்பதை விட தரமான படங்களில் நடிப்பதற்கே விஜய் சேதுபதி முன்னுரிமை தர வேண்டும் என்கின்றனர் அவரது அதிதீவிர ரசிகர்கள்.

நடிகர்கள் மட்டுமின்றி இல்லை, நடிகைகளும் இதற்கு விதிவிலக்கல்ல. நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த ‘சாமி 2’, ‘சண்டக்கோழி 2’, ‘பென்குயின்’,
‘மிஸ் இந்தியா’, ‘குட்லக் சகி’ என்பது போன்ற பல படங்கள் வெற்றிபெறாத நிலையில் அவரை ட்ரோல் செய்து தள்ளினர் ரசிகர்கள். உடல் எடை குறைப்பும் ஒரு காரணம். இதேபோல் நயன்தாரா தனது திருமணத்தின்போது, அவரது சொந்த வாழ்க்கையில் நடந்தவற்றை வைத்ததெல்லாம் ட்ரோல் மற்றும் மீம்ஸ் கிரியேட்டர்கள் கிண்டல் செய்தனர்.

image

இயக்குநர் சமுத்திரக்கனியும் ட்ரோல் செய்யப்படும் திரைப்பிரபலங்களில் முக்கியமானவர். திரைப்படங்களில் அறிவுரை கூறுவது போன்று
சமுத்திரக்கனி நடிக்கும் கதாபாத்திரங்கள்தான் இதற்கு காரணம். அண்மையில் வெளியான ‘டான்’ படத்தில் மகனைக் கண்டிப்புடன் வளர்க்கும் அப்பாவாக நடித்திருந்தார் சமுத்திரக்கனி. ஊருக்கே அட்வைஸ் செய்துவிட்டு, நீங்கள் இதுபோன்ற பாத்திரத்தில் நடிக்கலாமா என நெட்டிசன்கள் கேலி செய்கிறார்கள்.

‘குக்வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஸ்வின் குமார் நடிப்பில் உருவான படம் ‘என்ன சொல்ல போகிறாய்’. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் “இதுவரை நாற்பது கதைகள் கேட்டேன், இந்த கதைதான் பிடித்தது… மற்ற கதைகள் கேட்கும் போது
தூங்கிவிட்டேன்… என அஸ்வின் குமார் சொன்னதும் பாய்ந்து பாய்ந்து கேலி செய்தார்கள் நெட்டிசன்கள்.

image

மேலும் அந்த விழாவில், தான் அழகாக பிறந்ததற்கு எனது பெற்றோருக்கு தான் நீங்கள் நன்றி கூற வேண்டும் என அஸ்வின் சொன்னதுதான் தாமதம். ‘கே.ஜி.எஃப்’ பட நடிகர் யஷ் தனது பட புரமோஷனுக்காக கலந்துகொண்ட போதெல்லாம் தன்னடக்கமாக, தன்மையாக, பண்புடன் நடந்துகொண்டதாகவும், ஆனால் அஸ்வின் தலைக்கணம் கொண்டு பேசியதாகவும் கிண்டல் செய்யப்பட்டார்.

இவை தவிர மஞ்சிமா மோகன், சமீரா ரெட்டி போன்றோர் குண்டாவது காரணமாக உருவக் கேலிகள் செய்யப்படுவதும் சமூக தளங்களில் அதிகம் நடப்பது நமது மக்களின் மனநிலையை சற்று யோசிக்க வைக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.