உலகம் எவ்வளவு வேகமாய் முன்னேறி கொண்டிருந்தாலும், மனித கழிவுகளை மனிதனே அகற்றும் கொடுமை மட்டும் இன்னுமும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இதனால் தூய்மைப் பணியாளர்களுக்கு நோய்கள் ஏற்படுகின்றன; பணியின் போதான இறப்புகளும் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணமே உள்ளன. இதைத் தடுக்கும் விதமாக `HomoSEP’ எனும் புதிய ரோபோ ஒன்றை சென்னை ஐ.ஐ.டி நிறுவனம் உருவாக்கியுள்ளது.

சென்னை ஐஐடி

முதற்கட்டமாக தமிழகத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்களுக்கு 10 ரோபோக்களை வழங்கவுள்ள சென்னை ஐ.ஐ.டி நிறுவனம் அடுத்ததாக குஜராத், மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலும் இக்கருவியை வழங்கத் திட்டமிட்டுள்ளது. மனித கழிவுகளை அகற்றும்போது தம் கணவர்களைப் பறிகொடுத்த நாகம்மா, ரூத் மேரி ஆகிய இரு தூய்மைப் பணியாளர்களுக்கு இக்கருவியை வழங்கியுள்ளது சஃபை கரம்சாரி அந்தோலன் (SKA) என்னும் தன்னார்வல அமைப்பு. இவர்கள் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறைக்கு எதிராக நீண்ட நாள்களாக குரல் கொடுத்து வருகிறார்கள்.

இந்த ரோபோவைச் சென்னை ஐ.ஐ.டியைச் சேர்ந்த பேராசிரியர் பிரபு ராஜகோபால் மற்றும் குழுவினர், சோலினாஸ் இன்டகிரிட்டி லிமிடெட் என்னும் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ளனர்.

இது குறித்து முனைவர் பிரபு ராஜகோபால் பேசுகையில், “மனித கழிவுகளை மனிதர்கள் அகற்றுவதற்கு தடை இருந்தாலும், வேறு வழியின்றி பிழைப்புக்காக பலர் இந்த வேலையை இன்னமும் செய்து வருகின்றனர். இதனால் வருடத்திற்கு குறைந்தபட்சம் 100 இறப்புகளாவது ஏற்படுகின்றன. இதைத் தடுக்கும் வகையில் எங்கள் குழுவினரும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களும், தனியார் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இந்தக் கருவியை பெரும் அளவில் மக்களிடையே கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளோம். இக்கருவியை அடுத்த வருடம் அரசு உதவியுடன் பெருமளவில் உற்பத்தி செய்து, இந்தியா முழுவதும் வழங்க திட்டமிட்டுள்ளோம்” என்று கூறினார்.

HomoSEP

சோலினாஸ் ஸ்டார்ட் அப் பார்ட்னர் பவேஷ் நாராயணி கூறுகையில், “ஒரு கருவியை ஆய்வகத்திலிருந்து களத்திற்கு (லேப் டூ லேண்ட்) கொண்டு வருவது என்பது மிகவும் கடினமான காரியம். இந்தக் கருவியை டிராக்டரில் பொருத்தத் திட்டமிட்டுள்ளோம். அப்போதுதான் பல இடங்களுக்கு இதைக் கொண்டு சென்று எளிதாகப் பயன்படுத்த வசதியாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.