புலம் பெயர்ந்த ஈழ எழுத்தாளர் அனோஜன் பாலகிருஷ்ணன் ஃபேஸ்புக்கின் துணையால் பாண்டிச்சேரியின் கவிஞர் தமிழ்மொழியை காதல் மணம் புரிந்திருக்கிறார். இளம் ஈழ எழுத்தாளர்களுள் முக்கியமானவரான அனோஜன் நம்மூர் மாப்பிள்ளையாகியிருக்கிறார்.

“இதோ என் கணவர் அனோஜன்” எனத் தமிழ்மொழி அறிமுகப்படுத்தியபோது இருவரின் புன்னகையில் அவர்களின் தீராத நேசம் தெரிந்தது. தன் காதல் மனைவி தமிழ்மொழியின் கைப்பற்றியபடி பேசத் தொடங்குகிறார் அனோஜன்.

“யாழ்ப்பாணத்தில்தான் நான் பிறந்து வளர்ந்தேன். போர்ச்சூழலில் கொஞ்சமும் நிம்மதியில்லாத, நிலையில்லாத வாழ்க்கை. நடுவில் இருந்த சமாதான காலங்களில்தான் நிறைய படிக்க முடிந்தது. அம்மா ஒரு நூலகத்தின் பொறுப்பில் இருந்தார். அதனால் நிறைய சஞ்சிகைகள், புத்தகங்கள் எனக்கு கிடைக்க படிக்க முடிந்தது. பாலகுமாரன் தொடங்கி ஜெயமோகன் வரையென தொடங்கி நீடித்த படிப்பு அது. அப்போதுதான் இணைய உலகத்திற்கு உள்நுழைய ஆரம்பிக்கிறோம். உலகமே ஒரு குடைக்குள் வருது. பிரான்சில் இருந்து வருகிற ஆட்காட்டி பத்திரிக்கையில் எழுத ஆரம்பிக்கிறேன். எழுதுவதன் சூட்சுமம் கைவருகிறது. காலச்சுவடு பத்திரிகையில் கதிர்சிதைவுன்னு ஒரு கதை எழுத அதை தமிழ்மொழி படிச்சுட்டு முகநூலில் வந்து பேசுறாங்க. அப்படித்தான் எங்களின் உறவு ஆரம்பித்தது. பேசிப் பேசிதான் காதல் வளர்த்தோம். அன்பு எல்லா இடத்திலும்தான் இருக்கு. அந்த அன்பை சீராகவும், ப்ரியமாகவும் கொடுக்க முடிகிற பெண்ணாக தமிழ் மொழியைப் பார்க்கிறேன். எனக்கென்று ஒரு ரசனை உண்டு. அவளுக்கென்று தனிப்பட்ட விருப்பங்கள் உண்டு. யாரும் யார்மீதும் விருப்பங்களைத் திணிக்காமல் போய்க்கிட்டு இருந்தோம்.

அனோஜன் பாலகிருஷ்ணன்-தமிழ்மொழி

அவங்கதான் திருமணம் பற்றிய விருப்பத்தை வெளிப்படுத்தினார். “பரஸ்பரம் புரிந்துகொண்டு, நம்பிக்கை வளர்த்து, ஒரே அலைவரிசையில் மனதால் இணைந்தோம். நிச்சயம் நல்ல வழித்துணையாக இருப்பாங்கன்னு மனசு காட்டித்தருது. தமிழ்மொழி வீட்டுப்பக்கம் சிரமங்கள் இருந்தன. தமிழுக்கு அவங்க மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கியிருந்தாங்க. லண்டனில் இருந்த என்னால் நேரத்திற்கு தமிழ்நாட்டுக்கு வர முடியவில்லை. தமிழ் பெற்றோர்களின் உணர்வும் நியாயமானதே. மகளை சரியான நேரத்தில் திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்ற விருப்பத்தில் தவறில்லை. கொரோனா கட்டுப்பாடுகளில் எல்லாமே நிலைகுலைந்து இருந்தது. எனக்காக தமிழ்மொழி அவர் அப்பாவிடம் இரண்டு வருடங்கள் பேசாமல்கூட இருந்திருக்கிறாள். நானும் தமிழ் மொழியும் விசா வேண்டி அரசாங்கங்களிடம் தினமும் மெயில் அனுப்பியது எல்லாம் நடந்தது. அப்புறம் விசா கிடைத்தது. பயணம் ஒழுங்காக வந்து சேர்ந்தேன்.

கல்யாணத்திற்கு பிறகு காதலின் சக்தி புரிகிறது என்பதே உண்மை. நீங்கள் நேசிக்கும் ஒருவர் உங்களுக்காக அன்பு செலுத்துவதும் அதற்கான அன்பை திரும்பப் பெறுவதும் எப்போதும் உங்கள் அன்பை அழகாக்கும். எனக்கு எல்லாவற்றையும்விட முக்கியமானது தமிழ்மொழியின் அன்புதான். அதை உணர்ந்த கணத்திலிருந்து எழுந்தவன்தான் இப்ப நீங்க பார்க்கிற அனோஜன்” என்றவர், நீ பேசுவதில் என்ன தயக்கம் என தன் இணையர் தமிழ்மொழியிடம் சொல்கிறார்.

அனோஜன் பாலகிருஷ்ணன்-தமிழ்மொழி

“அவரோட கதையைப் படிச்சிட்டு அவரிடம் பேசியது தான் முதல் ஆரம்பம். அதனோட முடிவு இப்ப பக்கத்தில் அனோஜன் இருப்பார் என நினைத்து பார்த்ததேயில்லை. இந்த பூமிக்கு கீழே இருக்கிற எல்லாம் பற்றியும் பேசினோம். கவிஞர் ச.துரை என் நண்பர். நாங்க மூணு பேரும் சேர்ந்து வாட்ஸ்சப்பில் நிறைய பேசினோம். அத்தனை உரையாடல்களிலும் அவருடைய தெளிவும் நேர்மையும் தெரிந்தது. எனக்கு எல்லாவற்றையும்விட முக்கியமானது கல்யாணத்திற்கு முன்பு இருந்த ப்ரியம். அந்த ரிலேஷன்ஷிப்பில இருக்கிற அழகு வேறு எதிலும் இல்லை. சோகமோ, சந்தோஷமோ எதுவேண்டுமானாலும் பகிர்ந்துகொள்ளலாம். ஆறுதலாக, துணையாக, உதவியாக இருக்கலாம். சின்னதாக சண்டை போட்டு எந்த ஈகோவும் இல்லாமலே சேரலாம். அதேதான் இப்பவும் கடைப் பிடிக்கப்போறோம்.

ஈழத்தமிழர்களின் பாடு எவ்வளவு துயரம் நிரம்பியதாக இருக்கும். சொந்தங்களை பிரிந்து எங்கெங்கோ தனித்து வாழ்றாங்க. அப்படிப்பட்ட சூழ்நிலையில் போய் படித்து நல்ல படியாக இருக்கிற அனோஜனக்கு நல்ல அன்பைத் தரணும். கல்யாணத்திற்குப் பிறகு எத்தனை வருஷங்கள் ஆனாலும் எங்க காதல் அழகா இருக்கிற மாதிரி பார்த்துக்கணும். இப்ப நானும் லண்டன் போறேன். அங்கே பரீட்சை எழுதி பாஸ் செய்து வேலையும் எனக்கு கிடைச்சிருக்கு. அவர் எழுத்தையும், என் கவிதையையும் விடாமல் பார்த்துக்குவோம். எந்தச் சடங்குகளும் இல்லாமல் எங்கள் திருமணம் நடந்ததும் எனக்குப் பெருமை. கணவன் மனப்பான்மையை தள்ளிவைச்சிட்டு, காதலனாக வாழ்கிற அனோஜனை ரசிக்கிறேன்” என்கிற மனைவியை ஆழ்ந்து பார்க்கிறார் அனோ. அதில் ஆயிரம் அர்த்தங்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.