புதிதாக தொழில் செய்ய நினைப்பவர்கள் தங்கள் குடும்பம் ஏற்கெனவே செய்துவந்த தொழிலைத்தான் செய்ய விரும்புவார்கள். ஆனால், தங்கள் குடும்பத்தினர் செய்யாத ஒரு தொழிலில் நுழைந்து சாதனை படைத்திருக்கிறார் உதய் கோட்டக்.

நிதி சார்ந்த தொழில் என்பது பணத்தைப் போட்டு பணத்தை எடுக்கும் நுணுக்கமான பிசினஸ். குறைந்த வட்டியில் கடன் வாங்கி அதிக வட்டிக்குக் கடன் கொடுத்து, சிலபல சதவிகிதங்களை லாபம் பார்ப்பது. இது சிம்பிளான தொழில் போல தெரிந்தாலும், நினைத்துப் பார்க்க முடியாத சிக்கல்கள் எல்லாம் வந்துகொண்டே இருக்கும். அப்படிப்பட்ட தொழிலில் இன்று இந்தியாவின் மிக முக்கியமான தொழிலதிபராக வளர்ந்திருக்கிறார் உதய் கோட்டக். அவரது கோட்டக் மஹிந்திரா வங்கியின் திருப்புமுனை வரலாற்றைப் பார்ப்போம்.

தடை பல கடந்துவந்த கோட்டக்…

கோட்டக் மஹிந்திரா பேங்க்

இந்தியாவில் தொடங்கப்பட்ட நிதி நிறுவனங்கள் பலவற்றுக்கும் குறைந்த ஆயுள் மட்டுமே இருந்தன. தவறான நிதிக் கொள்கை, பேராசை, அளவு கடந்த விரிவாக்கம் என பல காரணங்களால் பல நிறுவனங்கள் காணாமல் போயுள்ளன. ஒவ்வொரு கட்டத்திலும் காணாமல்போன நிறுவனங்கள் பட்டியல் உயர்ந்துகொண்டே இருக்கும்.

ஆனால், ஹர்ஷத் மேத்தா, டாட்காம் பபுள், 90-களின் நடுப்பகுதியில் ஆசியாவில் ஏற்பட்ட பொருளாதார சிக்கல், 2008-ல் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல் என பல நிதி சார்ந்த சிக்கல்களைக் கடந்து கோட்டக் மஹிந்திரா வங்கி செயல்பட்டு வருகிறது. தனியார் வங்கிகளில் மூன்றாவது பெரிய வங்கியாக (சந்தை மதிப்பு அடிப்படையில்) கோட்டக் மஹிந்திரா வங்கி இருக்கிறது. உதய் கோட்டக் இதனை எப்படி உருவாக்கினார் என்பதை பார்ப்போம்…

கிரிக்கெட் To சொந்தத் தொழில்…

கடந்த வாரம் நாம் பார்த்த முஞ்சலின் குடும்பமும் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்ததுபோல, உதய் கோட்டக்கின் தந்தை பாகிஸ்தான் கராச்சியில் பிறந்தவர். அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் உள்ள பெரிய குடும்பம். மொத்தக் குடும்பமும் டெக்ஸ்டைல் தொழிலில் இருந்தது. பருத்தி உள்ளிட்ட விவசாயப் பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனங்களை நடத்தினார்கள்.

மும்பையில் உள்ள சைடென்ஹம் (Sydenham) கல்லூரியில் பிகாம் முடித்த உதய் கோட்டக். அடுத்து, சி.ஏ படிக்கலாமா? அல்லது எம்.பி.ஏ படிக்கலாமா? என்னும் இரு வாய்ப்புகளில், எம்.பி.ஏ-வைத் தேர்ந்தெடுத்தார். ஜம்னா பஜாஜ் நிர்வாக கல்லூரியில் எம்.பி.ஏ சேர்ந்தார். கிரிக்கெட்டில் ஆர்வம் மிக்கவர் உதய். லீக் போட்டிகளில் ஆடக் கூடியவர். கிரிக்கெட்டில் அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும் என்பதுதான் அவரது இலக்கு. ஆனால், லீக் போட்டியில் விளையாடும்போது பந்து தாக்கியதில் பலத்த காயம்.

கிரிக்கெட்

அறுவை சிகிச்சை, நான்கு மாதங்களுக்குமேல் படுக்கையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால், கிரிக்கெட் மட்டையைத் தொடக் கூடாது என்று வீட்டில் சொல்லிவிட்டார்கள். எனவே, அவரால் கிரிக்கெட் விளையாட முடியவில்லை. அந்தாண்டு செமஸ்டர் தேர்வையும் எழுத முடியவில்லை என்பதால், ஓர் ஆண்டு நஷ்டம்.

அதனால் குடும்பத் தொழிலைக் கவனிக்க சென்றார். அங்கு ஏற்கெனவே பத்துக்கும் மேற்பட்டவர்கள் இருந்தார்கள். அதனால் அந்தத் தொழிலை அவரால் தொடர முடியவில்லை. காரணம், ‘‘தொழிலில் லாஜிக் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும். ஆனால், இங்கு எந்த முடிவும் லாஜிக் அடிப்படையில் எடுக்கப்படுவதில்லை. அதனால் அங்கு என்னால் தொடர முடியாது’’ என வெளியேறிவிட்டார்.

‘‘படித்து முடித்தபிறகு என்ன வேண்டுமானாலும் செய்வேன். ஆனால், குடும்பத் தொழிலிலுக்கு மட்டும் வரமாட்டேன்’’ என உறுதியாக இருந்தார் உதய். அவரின் குடும்பத்துக்குச் சொந்தமான ஒரு குடோனில் சிறிய இடத்தை அவருக்கென ஒதுக்கித் தந்தார்கள். அதில் அவருக்கு விருப்பமான தொழிலை செய்யுமாறு உதய் கோட்டக்கின் அப்பா சொல்லிவிட்டார்.

கடன் வாங்கி, கடன் தந்தால்…

நிதிச் சேவை பிரிவில் ஆர்வமாக இருந்த உதய் நிதி சார்ந்த தொழிலைத் தொடங்கினார். பில் டிஸ்கவுண்டிங்தான் அவர் ஆரம்பித்த முதல் தொழில். உதாரணம், ஒரு நிறுவனத்துக்கு மூலப்பொருள்களை சப்ளை செய்தால், உடனே பணம் தரமாட்டார்கள். இரண்டு மாதம் அல்லது மூன்று மாதம் கழித்து பணம் கிடைக்கிற மாதிரி செக் தருவார்கள். இந்த செக்கை இரண்டு மாதம் கழித்துத்தான் வங்கியில் தந்து, பணம் பெறமுடியும். அதுவரை சிறு தொழில் நிறுவனங்களால் தாக்கு பிடிக்க முடியாது என்பதால், அந்த பில்லினை அடமானமாக வைத்து நிதி திரட்டுவார்கள்.

பிசினஸ்

இதற்கு 90 நாள்களுக்கு 17% வட்டி தரவேண்டும் அப்போது எல்லோரும் பின்பற்றும் வழக்கமாக இருந்தது. யோசித்தார் உதய். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கூடுதல் வட்டி தருவதாக சொல்லி 12% வட்டியில் முதலீட்டைத் திரட்டினார். இதைக் கொண்டு 17% வட்டியில் பில்களுக்குக் கடன் தந்தார்.

டாடா குழுமத்தை சேர்ந்த நெல்கோ நிறுவனத்துக்கு முதல் கடன் கொடுத்தார். இதேபோல, மஹிந்திரா குழுமத்தைச் சேர்ந்த சில நிறுவனங்களுக்கும் கடன் கொடுத்தார். அப்போது மஹிந்திரா குழுமத்தில் உள்ள ஓர் நிறுவனத்தின் பொது மேலாளராக இருக்கும் ஆனந்த் மஹிந்திராவின் நட்பு கிடைத்தது. பிற்பாடு கோட்டக் மஹிந்திரா ஃபைனான்ஸ் என்னும் நிறுவனம் தொடங்கும் அளவுக்கு அந்த நட்பு வளர்ந்தது.

உதய் கோட்டக் தனியாக ஒரு வங்கியைத் தொடங்கியபோது மஹிந்திரா என்னும் பெயரைப் பயன்படுத்திக்கொள்ள ஆனந்த மஹிந்திரா ஒப்புக்கொண்டார். 1985-களில் பெரும்பாலான தொழில்களில் குடும்பப் பெயர்கள் மட்டுமே இருக்கும். டாடா, பிர்லா, பஜாஜ் என்பது குடும்பப் பெயர்கள்தான். சர்வதேச அளவில் எடுத்துக்கொண்டால்கூட ஜேபி மார்கன், மார்கன் ஸ்டான்லி என பலவும் நபர்களின் பெயர்தான். அதனால் மஹிந்திரா என்னும் பெயர் வங்கிக்கு பலம் சேர்க்கும் என உதய் உறுதியாக நம்பினார்.

கார் கடனில் இன்னோவேஷன்…

பில்களைத் தொடர்ந்து கார் கடன்களைக் கொடுக்கத் திட்டமிடப்பட்டது. அந்தக் கடன் பிரிவில் சிட்டி வங்கிதான் பெரிய நிறுவனமாக இருந்தது. கார் கடன் வழங்கத் தயாராக இருந்தாலும் இரு சிக்கல்களை உதய் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. முதலில், பெரிய நிறுவனத்துடன் போட்டி போடவேண்டும். அடுத்து, கார் இருக்க வேண்டும். கடன் கொடுக்கத் தயாராக இருந்தாலும் குறைந்த எண்ணிக்கையிலான கார்கள் மட்டுமே அப்போது இருந்தன.

வங்கிக் கடன்

அதனால் நிறுவனம் மொத்தமாக கார்களை முன்பதிவு செய்துகொள்ளும். வாடிக்கையாளர்கள் நிதி நிறுவனம் காரை வாங்கிக்கொள்ளலாம். ஒரே கண்டிஷன், கார் கடன் வாங்க வேண்டும் என்பதுதான். இந்த ஐடியாவால் கார் கடன் பிரிவிலும் சிறப்பாக செயல்பட்டது. இது தவிர, ஃபோர்டு மற்றும் கோல்ட்மேன் சாக்ஸ் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து நிதிச்சேவை வழங்கியது கோட்டக் மஹிந்திரா குழுமம்.

பேங்க் ஆப் மெஜுராவில் முதலீடு…

சென்னையில் உள்ள டாக்டர் தியாகராஜன் மூலம் பேங்க் ஆப் மெஜுரா (Bank of Madura) முதலீடு செய்வதற்கு வாய்ப்பு உருவானது. பலவிதமான நிதிச் சேவைகளில் ஈடுபட்டு வந்ததால், தனியாக வங்கி தொடங்குவது என்பது அடுத்த பிசினஸ் முடிவாக இருக்கும் என்று நினைத்து, அந்தப் பங்கில் 10% பங்குகளை உதய் கோட்டக் வாங்கினார்.

ஆனால், நிறுவனர்களுக்குள் வங்கியை யார் கட்டுப்படுத்துவது என்னும் போட்டி உருவானது. அதனால் அந்த முதலீட்டைக் கவனிப்பதை விட்டுவிட்டு, சொந்தத் தொழில் நிறுவனத்தை நிர்வகிப்பதில் அதிக கவனம் செலுத்தினார். காப்பீடு, மியூச்சுவல் பண்ட் ஆகிய பிரிவுகளைத் தொடங்கினார் உதய்.

கோட்டக் மஹிந்திரா பேங்க்!

எனினும், பேங்க் ஆப் மெஜுராவில் பங்கு வாங்கி முதலீடு செய்வதற்கான அழைப்பு வந்தது. 1992-ம் ஆண்டு பேங்க் ஆப் மெஜுராவில் 10% பங்குகள் வாங்கப்பட்டது. ஆனால், அதிக பணியாளர்கள் இருந்தது உள்பட சில பிரச்னைகள் அந்த வங்கியில் இருந்ததால், 2001-ஆம் ஆண்டில் பேங்க் ஆஃப் மெஜுராவின் 10% பங்குகளையும் விற்றுவிட்டு வெளியேறினார்.

2002-ம் ஆண்டு வங்கி தொடங்குவதற்காக ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பித்தார் உதய். 2003-ம் ஆண்டு வங்கி தொடங்கும் அனுமதி அவருக்குக் கிடைத்தது. வங்கி அல்லாத நிதி நிறுவனமாக செயல்பட்டு, வங்கியாக மாறிய முதல் நிறுவனம் உதய் கோட்டக்குடையதுதான்.

டிஜிட்டல் பேங்கிங்…

வங்கியாக செயல்படத் தொடங்கியதும் பல முக்கியமான விஷயங்களை செய்தது கோட்டக் மஹிந்திரா வங்கி. தற்போது டிஜிட்டல் பேங்கிங் என்பது குறித்து அனைவரும் பேசுகின்றனர். ஆனால், 2016-ம் ஆண்டே 811 என்னும் புதிய திட்டத்தைத் தொடங்கியது இந்த வங்கி.

பெரும்பாலான வங்கிகளில் குறைந்தபட்ச தொகை இருக்க வேண்டும் என கணிசமான தொகை ஒன்றை தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என வங்கிகள் வற்புறுத்தி வந்தன. ஆனால், ஜீரோ பேலன்ஸ் டிஜிட்டல் கணக்கினை அறிமுகம் செய்து எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தது கோட்டக் வங்கி. தவிர, ஐந்தே நிமிடத்தில் வங்கிக் கணக்கு தொடங்கி அசத்தவும் செய்தது.

உதய் கோட்டக்

அதே போல, சேமிப்புக் கணக்கு 4% வட்டியை மட்டுமே பெரும்பாலான வங்கிகள் வழங்கிவந்தன. ஆனால், கோட்டக் வங்கி 6% வட்டியை வழங்கியது. ‘‘4-கைவிட 6 பெரிதாக இருக்கும்போது, ஏன் 4-கைத் தேர்வு செய்ய வேண்டும்’’ என்னும் வாசகங்களைப் பிரபலப்படுத்தியது. அதனால் வங்கியின் காசா விகிதம் உயர்ந்தது.

அள்ளித் தந்த லாபம்!

2013-ம் ஆண்டு 30% என்னும் அளவில் இருந்த கோட்டக் வங்கியின் காசா (CASA) விகிதம், கடந்த நிதி ஆண்டு முடிவில் எப்போதும் இல்லாத அளவாக 60 சதவிதமாக இருக்கிறது. காசா விகிதம் அதிகமாக இருப்பதால், நிகர லாப வரம்பும் 4.6 சதவிகிதமாக இருக்கிறது. இதுபோல பல நிதி சார்ந்த புள்ளிவிவரங்களில் கோட்டக் மஹிந்திரா வங்கி பலமாகவே இருக்கிறது.

ஏற்கெனவே கடந்த 2014-ம் ஆண்டு ஐ.என்.ஜி வைஸ்யா வங்கியைக் கையகப்படுத்தியது. தற்போது இண்டஸ்இந்த் வங்கியை வாங்கும் திட்டமும் இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

பணம்

நிதிச்சேவை என்பது மாரத்தான் போல. வேகமாக ஓடினால் சீக்கிரம் விழுந்துவிடுவோம். மெதுவாக ஓடினால் வெற்றியடைய முடியாது என்பது உதய் கோட்டக்கின் வாதம். அதனால் நிதிப் பிரிவில் வெற்றியடைய அனைத்து வாய்ப்புகளையும் கோட்டக் குழுமம் பரிசீலித்துவருகிறது.

2024-ம் ஆண்டுக்குப் பிறகு அடுத்த தலைவரையும் கோட்டக் மஹிந்திரா வங்கி தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது அந்த நிறுவனத்தின்முன் தற்போதுள்ள சவால். இந்த சவாலை எப்படி சமாளித்து, திருப்புமுனை ஏற்படுத்தப் போகிறார் உதய் என்பதே இப்போது அனைவரும் கேட்கும் சுவாரஸ்யமான கேள்வி.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.