“மதத்திற்கும் அரசுக்கும் பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் இருக்கிறது. மனிதம் தான் இருந்து அரசு ஆள வேண்டும். அது இங்கு இல்லை. இது பேராபத்தில் தான் கொண்டு போய் நிறுத்தும்” என்கிற, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பேரறிவாளன் விடுதலை; பெரியார் எதிர்ப்பு போன்ற விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்…

“பேரறிவாளன் விடுதலை சொல்லும் செய்தி…”

“31 ஆண்டுகள். முழுக்க முழுக்க ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டிருக்கிறார். ஒரு குற்றத்திற்கு மரணம், ஆயுள் என இரண்டு தண்டனைகள். எந்த நிமிடமும் மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என்கிற வலி கொடுமையானது. அதிலேயே தங்கள் காலத்தைக் கழித்துள்ளனர். அம்மா அற்புதம்மாள் அவர்களின் நீண்ட கால பயணம், கவலையும், கண்ணீருமாக ஒவ்வொரு தலைவரையும், அவர்கள் வீட்டுக்கேச் சென்று பேசி பேசி தன் நியாயத்தை எடுத்துச் சொல்லிச் செய்த அறப்போராட்டத்திற்கு இன்று வெற்றி கிடைத்திருக்கிறது”

சீமான் பேரறிவாளன்

“திமுக, அதிமுக என இரு கட்சிகளும் தங்களால் தான் இந்த விடுதலை சாத்தியம் என்று போட்டிப் போடுகிறார்களே?”

“இதில் எந்த கட்சி விடுதலைக்கு, முன் முடிவு எடுத்தது. குறிப்பாக திமுக. சட்ட போராட்டம் நடக்கிறது. நாங்கள் அரசியலாக அழுத்தம் கொடுக்கிறோம். சிறையில் அடைத்துவிட்டார்கள் நம் வாழ்க்கை அவ்வளவு தான் எனத் தம்பி அறிவு சோர்ந்து விட வில்லை. சட்டம் படித்து, இந்த மாதிரி சிக்கலான வழக்குகளில் நாடெங்கும் என்னென்ன தீர்ப்புகள் வழங்கப்பட்டிருக்கிறது என்பதைக் கவனிக்கிறான். பெரிய பெரிய சட்ட வல்லுநர்கள் தன்னை பார்க்க வரும்போதோ அல்லது தம்பி பிரபு, பாரி மூலமாக அவர்களிடம் கடிதம் வழியாகவோ நுணுக்கங்களை வாங்கி குழுவாக வேலை செய்ய ஆரம்பித்தான். அறிவு தானே சட்ட போராட்டம் நேரடியாக நடத்துகிறான். எங்களின் அழுத்தம் காரணமாகச் சட்டமன்றத்தில் தீர்மானம் கூட அதிமுக தானே முன்னெடுத்தது. விதி 142-ஐ பயன்படுத்தி தனது அதிகாரத்தின் மூலம் உச்ச நீதிமன்றம் விடுதலை என்கிற தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு அறிவுக்கு மட்டுமல்ல மற்று ஆறு பேருக்கும் பொருந்தும் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. அதைக் கவனத்தில் கொண்டு தமிழக அரசு விடுதலை செய்ய முன் வர வேண்டும்”

“உங்கள் கருத்துக்கள், பேச்சுக்கள் எல்லாம் அதீதமாக உள்ளதாக விமர்சனங்கள் முன் வைக்கப்படுகிறதே?”

“ஒரு புதிய செய்தி அதீதமாகத் தான் தெரியும். சாத்தியமில்லாததைப் பேசுகிறார் என்கிறார்கள். சாத்தியமில்லாததைச் சாத்தியப்படுத்துவதற்குப் பேர் தான் புரட்சி. ‘நாங்கள் சாதாரணமானவர்கள். அசாதாரணமான ஒன்றைக் கனவு காண்பவர்கள்’ என்கிறார் சேகுவரா. அப்படி தான் நாங்கள் கனவு காண்கிறோம். அப்படி அதீதமாகப் பேசுகிறேன் என்றால், பனை விதையிலிருந்து வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட் வரை நாங்கள் பேசிய பல விஷயங்களைத் தானே இன்று ஆட்சியில் இருக்கும் அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது”

சீமான்

“தொடக்கக் காலத்தில் பெரியாரிய மேடைகளில் அறிமுகமான சீமான் எதன் காரணமாகப் பெரியாரை எதிர்க்க நேர்ந்தது?”

“பெரியார் எதிர்ப்பு கோட்பாடு இல்லை. பெரியாரைத் தமிழ்த் தேசியத்தின் தலைவராக ஏற்கவில்லை. அதே நேரம் தமிழ்த் தேசியத்தின் எதிரியாகவும் பார்க்கவில்லை. அண்ணல் அம்பேத்கர், மார்க்ஸ், லெனின், ஏங்கல்ஸ், ஸ்டாலின், பிளேட்டோ, அரிஸ்டாட்டில், சாக்கர்டீஸ், புத்தர், பூலே… போன்றோரை எப்படி ஏற்கிறோமோ, அது போல் பெரியாரும் பெருமைக்குரிய வழிகாட்டியாக இருக்கலாம். திராவிட கருத்தியலாளர்கள் போல் அதுவே ஒரு வேதம், கேள்வியே கேட்கக் கூடாது என்றிருக்க முடியாது. ஏனென்றால் எதை ஒன்றையும் சந்தேகி, எல்லாத்தையும் கேள்வி கேள், ஆய்வுக்கு உட்படுத்து என்று சொன்னவரையே ஆய்வுக்கு உட்படுத்தக் கூடாது என்றால் எப்படி? பெரியாரும் சில விஷயங்களுக்குப் போராடினார். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் பெரியார் தான் போராடினார் என்பதை ஏற்க முடியாது. என் இனத்திற்கு எந்த பெருமையும் இருக்கக் கூடாது என்பதற்காக எல்லாமே நான் தான் செய்தேன் என்றால் எப்படி ஏற்க முடியும்? என் பாட்டன் அயோத்தி தாசரிடமிருந்து பகுத்தறிவும், தோழர் சிங்கார வேலனிடமிருந்து பொதுவுடைமை சிந்தனையும் கற்றுக் கொண்டதாகப் பெரியாரே சொல்லி இருக்கிறார்”

“சமீபத்தில் இலங்கை சென்ற தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ‘இந்து தமிழர்’ என்கிற கருத்தியலை முன் வைத்துள்ளாரே…”

“இது எங்கள் அண்ணன் இருக்கும் போது சொல்லி இருக்க வேண்டும். நாங்கள் இந்துக்களே இல்லை என்கிறோம். நீங்கள் எப்படி இந்து என்று சொல்வீர்கள். ‘சிங்களர்கள் ராமனின் வாரிசுகள். தமிழர்கள் ராவணனின் வாரிசுகள்’ என்று அத்வானி நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டத்தில் பேசியது இவருக்கு நினைவில்லையா? இந்து அகதிகளாக அங்கு அடிக்கப்பட்டு விரட்டி வரும் போது திபெத்தியனுக்குக் கொடுத்த குடியுரிமை எங்களுக்கு ஏன் தரவில்லை? திபெத்தியனுக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இருக்கிறதா? ஆனால், எனக்கும் இந்த நாட்டிற்கும் சம்பந்தம் இருக்கிறது. ஏன் என்றால் இந்த நாடே எந்நாடு. அதைத் தான் அண்ணல் அம்பேத்கரும் சொல்கிறார். பல அறிஞரும் சொல்கிறார்கள். அப்படி எங்களை இந்துவாகப் பார்த்திருந்தால் குடியுரிமை தந்திருக்கவேண்டுமல்லவா? என் சிவனை, முருகனை எடுத்துக் கொண்டவர்கள் இப்போது கடைசியாக வள்ளுவனையும் எடுத்து அரசியல் செய்கிறார்கள். பகவத்கீதைக்கு பதிலாக உலக மக்களுக்கான எல்லா விஷயங்களைப் பேசி இருக்கும் திருக்குறளை வேத நூல் ஆக்க முன் வருவார்களா?”

இலங்கை – அண்ணாமலை

“இனம், மதம், சாதி வைத்துப் பேசுகிற அரசியல் ஆரோக்கியமானதா?”

“இது நீண்ட காலம் நிற்காது. இலங்கையில் மதம் வைத்துத் தான் அரசியல் செய்தார்கள். இனமாக ஒடுக்கினார்கள். இப்போது என்னவாயிற்று? அதனால் நடந்த பொருளாதார நெருக்கடி இங்கு நடக்காமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மதத்திற்கும் அரசுக்கும் பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் இருக்கிறது. மனிதம் தான் இருந்து அரசு ஆள வேண்டும். அது இங்கு இல்லை. இது பேராபத்தில் கொண்டு போய் தான் நிறுத்தும்”

“தமிழர் கலை பண்பாட்டிற்கு எவை எதிரியாக உள்ளன? அவற்றை எப்படிக் களைவது?”

“தன்னிடத்தில் இருப்பதை விடப் பிறர் இடத்தில் இருப்பது தான் உயர்ந்தது என்கிற இழி சிந்தனை. வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்பது போல் ஒரு மாயை. நுகர்வு கலாசாரம் இந்தியாவில் அதிகம். அதில் தமிழ்நாட்டில் கூடுதல். அளவுக்கு மீறிய திரை கவர்ச்சி. எந்த உடை உடுத்தினால் என்ன? என்ன பெயர் வைத்தால் என்ன? என்ன பாட்டு பாடுனா என்ன? என்பதில் சிதைகிறது. கிரிக்கெட் என்கிற ஒற்றை விளையாட்டு எல்லா தனித்தன்மை விளையாட்டையும் விழுங்கி ஏப்பம் விட்டது போல் திரை கலை என்கிற பூதம் எல்லா தமிழர் தொன்மை கலைகளையும் விழுங்கிவிட்டது.

தமிழர் கலைகளை மீட்க வேண்டும் என்றால் அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசு விழாக்களில், கலாசார நிகழ்வுகளில் பண்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்தி மீட்க வேண்டும். நாம் தமிழர் வந்த பிறகு தான் தமிழர் தொன்மை கலைகள் மேடையேறின. பொது நிகழ்வுகளில் பறை இசை வந்தது. ‘இது சாவு பறை அல்ல, சாதி பறை அல்ல ஆதி பறை. இது ஆதி தமிழ் பறையடா அதை அடித்துப் பகை முகத்தில் அறையடா’ என்கிற முழக்கத்தை வைத்துக் கொண்டு வந்தோம். குறிப்பிட்ட சமூகம் தான் பறை இசைக்க வேண்டும் என்றில்லாமல் எல்லோரும் இசைக்க முன் வந்துள்ளனர். குறிப்பாகக் கல்லூரி மாணவர்கள் ஆர்வமாக கற்றுக் கொள்கிறார்கள்”

பேரறிவாளன்

“திரைப்படம் இயக்கும் யோசனை இருக்கிறதா?”

“பேச்சும், திரைக் கலையும் ராணுவத்தின் வலிமையான படைப் பிரிவுகள் என்று அண்ணன் சொல்வார். அரசியலுக்கு வந்ததிலிருந்து நடிக்க பயப்படுகிறார்கள். துணிந்து வந்தாலும் தயாரிக்க பயப்படுகிறார்கள். தம்பி சிலம்பரசன் மட்டும் தான் நடிக்கிறேன் என்கிறார். இதையும் தாண்டி நேரமும் வேண்டும்”

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.