ராமேஸ்வரம் அருகே வடகாடு மீனவ கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் மீன்பிடித் தொழி்லை பிரதானமாகச் செய்து வருவதோடு, பெண்களும் கடலுக்குச் சென்று கடல் பாசி சேகரித்து அதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து தங்களுடைய குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.

இந்த மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் மீனா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது (45). இவர் கணவர் மீன்பிடித் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு 3 மகள் இருக்கின்றனர். கணவர் மீன்பிடித் தொழிலுக்குச் சென்று விடுவதால், வீட்டிலிருந்த சந்திரா குடும்ப வறுமையை போக்குவதற்காகக் கடல் பாசி எடுக்கும் தொழிலுக்குச் சென்றுவந்தார்.

கதறி அழும் சந்திராவின் உறவினர்கள்

நேற்று முன் தினம் கடல் பாசி சேகரிக்கச் சென்றபோது அந்தப் பகுதியில் இறால் பண்ணையில் வேலைப் பார்க்கும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஆறு இளைஞர்கள் சந்திராவைக் கேலி, கிண்டல் செய்ததாகவும், அவர்களைப் பண்ணை பணியாளர்கள் முன் சந்திரா கடுமையாகத் திட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று காலை 7 மணிக்கு வழக்கம்போல கடல் பாசி சேகரிக்கச் சென்ற சந்திரா, மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்திராவின் கணவர், அவர் உறவினர்கள் கடற்கரை ஓரங்களில் தீவிரமாகத் தேடிப் பார்த்தனர்.

நள்ளிரவு சம்பவ இடத்தில் எஸ்.பி கார்த்திக் விசாரணை

பின்னர் ராமேஸ்வரம் நகர் போலீஸில் புகார் அளித்து, அவர்கள் உதவியுடன் இரவு முழுவதும் தேடினர். அப்போது வடகாடு கடற்கரையோர காட்டுப்பகுதியில் சந்திராவின் சாப்பாட்டு பாத்திரம், கடல்பாசி சேகரிக்க கொண்டு சென்ற கண்ணாடி, அவரின் புடவை துணிகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்திருக்கின்றன. தொடர்ந்து காட்டுப்பகுதியில் தீவிரமாக தேடியபோது முக்கால்வாசி எரிக்கப்பட்டு நிர்வாணநிலையில் சந்திரா பிணமாக கிடந்திருக்கிறார்.

இதையடுத்து சந்திராவுடன் கடல்பாசி எடுக்கச் செல்லும் மீனவ பெண்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, நேற்று முன் தினம் இறால் பண்ணையில் பணியாற்றும் வடமாநில இளைஞர்கள் சந்திராவை கேலி, கிண்டல் செய்ததாகவும், அவர்களை சந்திரா சத்தம் போட்டது குறித்தும் தெரிவித்தனர்.

அதனைக் கேட்டு ஆத்திரமடைந்த சந்திராவின் உறவினர்கள், மீனவ கிராம மக்கள் ஒன்றுசேர்ந்து நள்ளிரவு இறால் பண்ணைக்குச் சென்று பண்ணையை அடித்து நொறுக்கியதுடன், அந்த ஆறு வடமாநில இளைஞர்கள்தான் சந்திராவை கூட்டுப் பாலியல் வன்கொடுமைசெய்து கொலை செய்திருக்கக் கூடும் என சந்தேகப்பட்டு ஆறு பேரை சரமாரியாகத் தாக்கினர். மேலும், அவர்கள் பயன்படுத்திவந்த மோட்டார் சைக்கிளையும் தீ வைத்து எரித்தனர்.

கிராம மக்களால் தாக்கப்பட்ட வடமாநில வாலிபர்கள்

கிராம மக்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய ராமேஸ்வரம் போலீஸார், இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக்குக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி 100-க்கும் மேற்பட்ட போலீஸார், துப்பாக்கி ஏந்திய அதிரடிப்படையினருடன் நள்ளிரவு அங்குவந்த எஸ்.பி கார்த்திக் கிராம மக்களிடமிருந்து வடமாநில இளைஞர்கள் ஆறு பேரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தார்‌.

அதனைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சந்திராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்‌.

போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர் கிராமத்தினர்

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக்கிடம் கேட்டபோது, “சந்தேகத்தின் அடிப்படையில் இந்த ஆறு வடமாநில இளைஞர்களைப் பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். இவர்கள்தான் குற்றவாளிகளா? சந்திரா கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுதான் எரித்துக் கொல்லப்பட்டிருக்கிறாரா? என்பது பிரேத பரிசோதனை முடிவில் தெரியவரும்” என்றார்.

மீனவ பெண் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தால் அந்த கிராமம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.