சென்னை சூப்பர் கிங்ஸ் எங்கே கோட்டைவிட்டது? ஏன் இவ்வளவு மோசமாக தோற்றது?

நடப்பு ஐ.பி.எல் தொடரின் லீக் போட்டிகள் அனைத்தும் நேற்றோடு முடிந்திருக்கிறது. முட்டி மோதி தங்களின் திறனை முழுமையாக வெளிக்காட்டிய நான்கு அணிகள் ப்ளே ஆஃப்ஸூக்கு முன்னேறியிருக்கின்றனர். நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரும் சறுக்கல்களை சந்தித்து லீக் சுற்றோடு தொடரை விட்டு வெளியேறியிருக்கிறது. ‘நான் அடுத்த சீசனிலும் உறுதியாக ஆடுவேன்’ என தோனி தீர்க்கமாக பேசியது மட்டுமே இந்த சீசனில் சென்னை அணிக்கு நிகழ்ந்த ஒரே பாசிட்டிவ்வான விஷயம். ஐ.பி.எல் இன் மிகச்சிறந்த அணி, நடப்பு சாம்பியன் என எக்கச்சக்க பெருமைகளோடு தொடங்கிய சென்னை 9-வது இடத்தையே பிடித்திருக்கிறது. சென்னை எங்கே கோட்டைவிட்டது? ஏன் இவ்வளவு மோசமாக தோற்றது?

ஐ.பி.எல் வரலாற்றிலேயே சென்னை அணிக்கு மிக மோசமாக அமைந்தது 2020 சீசன்தான். அந்த சீசனில்தான் முதல் முறையாக சென்னை அணி ப்ளே ஆஃப்ஸிற்கு கூட தகுதிப்பெறாமல் வெளியேறியிருந்தது. ஒப்பிட்டு பார்த்தால் அந்த சீசனை விடவும் சென்னை அணிக்கு இந்த 2022 சீசன்தான் ரொம்பவே மோசமானதாக அமைந்திருக்கிறது. 2020 சீசனில் 6 போட்டிகளை வென்றிருந்த சென்னை இந்த 2022 சீசனில் 4 போட்டிகளை மட்டுமே வென்றிருந்தது. சீசனை தொடர் தோல்விகளுடன் தொடங்கி தொடர் தோல்விகளுடனேயே முடித்திருக்கிறது.

image

காயம் காரணமாக தீபக் சஹார் இந்த சீசனின் முதல் பாதியை ஆடமாட்டார் எனும் செய்தி வெளியானதிலிருந்தே சென்னை அணிக்கான சறுக்கல் தொடங்கிவிட்டது. தீபக் சஹார் மீது சென்னை பெரியளவில் நம்பிக்கை வைத்திருந்தது. அதனை வெளிப்படுத்தும் வகையிலேயே அவர் மீது அதீதமாக 14 கோடி ரூபாயையும் முதலீடு செய்திருந்தது. ஆனால், சீசன் தொடங்குவதற்கு முன்பாகவே அவர் காயமுற்றார். தீபக் சஹாரின் இல்லாமை தொடக்க போட்டிகளில் சென்னை அணிக்கு பெரிய தலைவலியையே கொடுத்தது. தீபக் சஹார் சென்னை அணிக்காக கடந்த 4 சீசன்களில் 58 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். இந்த 58 விக்கெட்டுகளில் பெரும்பாலான விக்கெட்டுகள் பவர் ப்ளேயில் எடுக்கப்பட்டவையே. பவர் ப்ளேயிலேயே எதிரணியின் ஓப்பனிங் விக்கெட்டுகளை வீழ்த்தி சென்னை அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுப்பார்.

இங்கே தீபக் சஹார் இல்லாமல் பவர் ப்ளேயில் சென்னை ரொம்பவே திணறிவிட்டது. சீசனின் தொடக்கத்திலேயே சென்னை அணி தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோற்றிருந்தது. ஐ.பி.எல் வரலாற்றிலேயே சென்னை அணி ஒரு சீசனை இவ்வளவு சுமாராக தொடங்கியதே இல்லை. இந்த 4 போட்டிகளின் தோல்விக்கு பவர் ப்ளேயில் விக்கெட்டுகள் கிடைக்காதது மிக முக்கிய காரணமாக இருந்தது.  இந்த 4 போட்டிகளில் பவர் ப்ளேயில் சென்னை அணி எடுத்திருந்த விக்கெட்டுகள் 2 மட்டுமே. அதிலும் ஒன்று ரன் அவுட் மூலம் வந்தது. ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே முகேஷ் சௌத்ரி வீழ்த்தியிருந்தார்.  தீபக் சஹாரின் இல்லாமையை சென்னை முழுமையாக உணர்ந்தது. கடந்த சீசனில் தீபக் சஹார் மட்டுமில்லை, ஹேசல்வுட்டும் பவர் ப்ளேயில் நன்றாக வீசியிருப்பார். இரண்டாம் பாதி தொடரில் சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய துருப்புச்சீட்டாக இருந்தார். இந்த சீசனில் ஹேசல்வுட் இல்லை. அவருக்கு பதிலாக ஆடம் மில்னேவை சென்னை நம்பியது. ஆனால், அவரும் ஒன்றிரண்டு போட்டிகளுடனேயே காயம் காரணமாக விலகினார்.

சென்னை அணிக்கு எக்கச்சக்க பிரச்சனைகள் இருந்தாலும் அத்தனைக்கும் தொடக்கமாக அமைந்தது தீபக் சஹார் இல்லாததுதான். தீபக் சஹாரின் இடத்தை நிரப்ப காம்பீனேஷனுக்காக டெவன் கான்வேயை ஒரே போட்டியோடு பென்ச்சில் வைத்த அவலமெல்லாம் நடந்திருந்தது. தீபக் சஹார் இல்லாததால் ப்ராவோவை பவர் ப்ளேக்குள்ளேயே பயன்படுத்தியிருப்பார்கள். கடைசியாக 2019 சீசனில்தான் ப்ராவோ பவர் ப்ளேயில் பந்து வீசியிருக்கிறார். கடந்த இரண்டு சீசன்களாக ஒரு ஓவரை கூட அவர் பவர் ப்ளேயில் வீசியதில்லை. ப்ராவோ பவர் ப்ளேக்குள்ளாகவே வந்ததால் டெத் ஓவரில் ஒரு போட்டியில் சிவம் துபேவின் கையில் பந்தை கொடுத்து வலுவாக வாங்கிக் கட்டிக்கொண்ட சோகமெல்லாம் அரங்கேறியிருந்தது. சிவம் துபேவின் ஓவரினாலயே ஒரு போட்டியை சென்னை இழந்திருந்தது.

image

பவர் ப்ளே ஒரு பிரச்சனை என்றால் டெத் ஓவர் அதைவிட பெரிய பிரச்சனையாக இருந்தது. நம்பி வாங்கப்பட்ட கிறிஸ் ஜோர்டன் ஏமாற்றமளிக்கும் வகையிலேயே வீசினார். ரன்களை வாரி வழங்கினார். தொடக்கத்தில் நம்பிக்கையளித்த ப்ரெட்டோரியஸூம் சீரற்ற பெர்ஃபார்மென்ஸ்களால் சொதப்பினார். டெத் ஓவரிலும் ப்ராவோவை மட்டுமே நம்ப வேண்டிய நிலை. 4 ஓவர்களை மட்டுமே வைத்துக் கொண்டு அவர் எங்கெல்லாம்தான் வீசுவது?

பௌலிங்கிற்கு டஃப் கொடுக்கும் வகையிலேயே சென்னை அணியின் பேட்டிங்கும் இருந்தது. பௌலிங்கில் தீபக் சஹார் எப்படி பெரிய நம்பிக்கையாக இருந்தாரோ அதேபோல பேட்டிங்கில் ருத்துராஜ் கெய்க்வாட் பெரிய நம்பிக்கையாக இருந்தார். கடந்த சீசனில் சென்னையை சாம்பியன் ஆக்கியதே ருத்துராஜூம் டூப்ளெஸ்சிஸூம்தான். டூப்ளெஸ்சிஸ் பெங்களூருவிற்கு சென்றுவிட்டார். ருத்துராஜ் அவருக்கும் சேர்த்து வைத்து அடிப்பார் என எதிர்பார்க்க அவரும் ஏமாற்றத்தையே கொடுத்தார். கடந்த சீசனில் 600 க்கும் அதிகமான ரன்களை எடுத்திருந்த ருத்துராஜ் இந்த சீசனில் மொத்தமாக 368 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். முதல் பாதி முழுவதும் தொடர்ச்சியாக சொதப்பிக் கொண்டே இருந்தார். இரண்டாம் பாதியில் ஓரளவுக்கு ஃபார்முக்கு வந்தாலும் அது காலதாமதமானதாகவே இருந்தது. ருத்துராஜூடன் இன்னொரு முனையில் ஓப்பனிங்கும் சரியாக செட் ஆகவில்லை.

கடந்த சீசனில் ருத்துராஜூம் டூப்ளெஸ்சிஸூம் இணைந்து மட்டுமே 1268 ரன்களை அடித்திருந்தனர். ஆனால், இந்த சீசனில் ஓப்பனிங் இறங்கிய ருத்துராஜ், உத்தப்பா, கான்வே மூவருமே இணைந்தும் 820 ரன்களை மட்டுமே எடுத்திருந்தனர். 4 வெளிநாட்டு வீரர் காம்பீனேஷனில் திணறிய சென்னை முதல் போட்டியுடனே கான்வேயை பென்ச்சில் வைத்தது. இரண்டாம் பாதி சீசனில்தான் அவர் மீண்டும் வந்தார். ஹாட்ரிக் அரைசதங்களை அடித்து கலக்கினார். கான்வே அரைசதம் அடித்த இந்த போட்டிகளில் ருத்துராஜூம் சிறப்பாக ஆடியிருந்தார். இந்த மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் இருவரும் சேர்ந்து கூட்டாக சதத்தை கடந்திருந்தனர். இந்த இரண்டு போட்டிகளிலுமே சென்னை வென்றிருந்தது. ஒருவேளை தொடக்கத்திலேயே கான்வேக்கு தொடர் வாய்ப்புகள் கிடைத்திருந்தால் சென்னை அணிக்கு இந்த பரிதாப நிலையே கூட ஏற்படாமல் போயிருக்கலாம்.

image

ஓப்பனிங் மட்டுமே பிரச்சனையில்லை. அடுத்தடுத்தும் சென்னைக்கு பிரச்சனைதான். கடந்த சீசனில் நம்பர் 3 இல் மொயீன் அலி பட்டையை கிளப்பியிருப்பார். குறிப்பாக, முதல் பாதி தொடரில் சரவெடியாக வெடித்திருப்பார். ருத்துராஜூம் டூப்ளெஸ்சிஸூம் கொடுக்கும் நல்ல தொடக்கத்தை அப்படியே மொமண்டம் குறையாமக் அடுத்தடுத்த வீரர்களுக்கு கை மாற்றிவிடுவார். கடந்த சீசனில் முதல் பாதியில் மட்டும் நம்பர் பொசிசனில் 6 போட்டிகளில் 206 ரன்களை 157 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்திருப்பார். இந்தியாவில் நடந்த முதல் பாதியில் மட்டும் சென்னை அணி 5 போட்டிகளை வென்றதற்கு மொயீன் அலி பிரதான காரணமாக இருந்தார். இந்த சீசனில் நம்பர் 3 இல் மொயீன் அலி, உத்தப்பா, சாண்ட்னர், சிவம் துபே என பல வீரர்கள் இறங்கியிருக்கிறார்கள். ஆனால், யாருமே அவ்வளவாக பெர்ஃபார்ம் செய்யவில்லை. 14 போட்டிகளில் சென்னை அணியின் நம்பர் 3 வீரர்கள் 290 ரன்களை மட்டுமே எடுத்திருக்கின்றனர். கடைசி போட்டியில் மொயீன் அலி அடித்த 93 ரன்களை கழித்துவிட்டு பார்த்தால் முதல் 13 போட்டிகளில் 197 ரன்கள்தான். கடந்த சீசனில் 6 போட்டிகளில் மொயீன் அலி அடித்ததை விட இது குறைவான ஸ்கோரே. மிடில் ஆர்டரும் படு வீக்காகத்தான் இருந்தது.

சிவம் துபே மட்டுமே சில போட்டிகளில் கொஞ்சம் பேட்டை வீசி ஆறுதல் அளித்தார். மற்ற வீரர்களெல்லாம் சீரற்ற மந்தமான பெர்ஃபார்மென்ஸ்களையே கொடுத்திருந்தனர். ராஜஸ்தானுக்கு எதிரான கடைசி போட்டிதான் இதற்கு மிகச்சிறந்த உதாரணம். அந்த போட்டியில் பவர்ப்ளேயின் முடிவில் சென்னையின் ஸ்கோர் 75. 20 ஓவர்கள் முடிவில் சென்னையின் ஸ்கோர் 150. கடைசிக்கு முந்தைய குஜராத்துக்கு எதிரான போட்டியில் டெத் ஓவர்களான கடைசி 5 ஓவர்களில் ஒரு பவுண்டரியை கூட சென்னை பேட்ஸ்மேன்கள் அடித்திருக்கவில்லை.

கான்வே ஆரம்பத்திலிருந்தே ப்ளேயிங் லெவனில் தொடர்ந்து இருந்திருந்தால் சில போட்டிகளை வென்றிருக்கலாம். தீபக் சஹாரின் இடத்தை தொடக்கத்திலேயே வேறு யாராவது நிரப்பியிருந்தால் இன்னும் சில போட்டிகளை வென்றிருக்கலாம். டெத் ஓவர்களில் 20, 30 என வாரி வழங்கிய ஓவர்களில் ஒன்றிரண்டு பவுண்டரி சிக்சர்களை கட்டுப்படுத்தியிருந்தால் கூட சில போட்டிகளை வென்றிருக்கலாம். இப்படி சின்ன சின்னதாக பல இடங்களில் பல போட்டிகளை சென்னை இழந்திருந்தது. இவையெல்லாம் அடுத்த சீசனுக்கான சென்னை அணியின் வழிகாட்டு கையேட்டில் Do’s & Don’t பட்டியலில் இணைய வேண்டும்.

காயங்கள் அதனை தொடர்ந்த காம்பீனேஷன் பிரச்சனைகள், கேப்டன்சி மாற்றம், வீரர்களின் சீரற்ற தன்மை என சென்னையின் தோல்விக்கு ஏகப்பட்ட காரணங்கள் இருக்கின்றது. இத்தனைக்கு பிறகும் சென்னைக்கு இந்த சீசனில் சில பாசிட்டிவ்வான விஷயங்களும் நடந்திருக்கவே செய்கிறது. மஹீஸ் தீக்சனா, முகேஷ் சௌத்ரி, பதிரனா, சொலாங்கி போன்ற இளம் பந்துவீச்சாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். கிடைத்த வாய்ப்புகளில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டு இவர்களும் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்கள். ராஜஸ்தானுக்கு எதிரான கடைசி போட்டி முடிந்த பிறகு கொடுத்த பேட்டியில் தோனி இவர்களை பற்றி அவ்வளவு எனர்ஜியாக பேசியிருந்தார். இவர்கள் மீது பெரும் அவர் நம்பிக்கை வைத்திருக்கிறார். அந்த நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் நீண்டகால அடிப்படையில் பலனளிக்கும் வீரர்களாகவே இவர்களும் இருப்பதால் அடுத்தடுத்த சீசன்கள் சென்னைக்கு சிறப்பாக அமைய அதிக வாய்ப்பிருக்கிறது.

image

இத்தனை சறுக்கல்கள் இத்தனை சொதப்பல்கள் சென்னை ரசிகர்களுக்கே கொஞ்சம் அயர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால், பெரிதாக கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், ஐ.பி.எல் இல் வீழ்ந்து மண்ணோடு மண்ணாக போய்விட்டார்கள் என நினைக்கப்பட்டவர்களெல்லாம் மீண்டு வந்து ஒரு மிரட்டு மிரட்டியிருக்கிறார்கள். ஐ.பி.எல் இன் தொடக்க சீசனில் பெங்களூருவும் டெக்கான் சார்ஜர்ஸ் அணியுமே கடைசி இரண்டு இடங்களை பிடித்திருந்தன. இரண்டு அணிகளுமே ஜோக்கராக பார்க்கப்பட்டது. ஆனால், அடுத்த சீசனிலேயே இரண்டு அணிகளும் மீண்டு வந்தன. 2009 சீசனின் இறுதிப்போட்டி டெக்கான் சார்ஜர்ஸூக்கும் பெங்களூருவுக்கும் இடையேத்தான் நடைபெற்றிருந்தது. டெக்கான் சார்ஜர்ஸ் சாம்பியன் ஆகியிருந்தது. சென்னை ரசிகர்களுக்கு வேறு அணிகளை உதாரணம் காட்ட வேண்டுமா என்ன? 2018 மற்றும் 2021 சீசன்களில் சென்னை எவ்வளவு மகத்தான கம்பேக்குகளை நிகழ்த்திக்காட்டியது?

அதே விஷயம் 2023 லும் நடக்காதா என்ன? ‘Comeback that’s what we know for’ தோனி சொன்ன அதே டயலாக்தான் இந்த கேள்விக்கான பதிலுமே. தோனியும் கம்பேக் கொடுப்பார். சென்னையும் கம்பேக் கொடுக்கும். சேப்பாக்கம் அதிர விசிலடிக்க தயாராகுங்க பாய்ஸ்!

-உ.ஸ்ரீராம்

இதையும் படிக்கலாம்: ”தடுமாற்றங்கள் நடக்கலாம்; அடுத்த சீசனில் மீண்டு வருவார்” – பண்ட் குறித்து ரோகித் கருத்து

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.