உதயநிதி ஸ்டாலின், தன்யா ரவிச்சந்திரன், ஆரி அர்ஜுனன், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் நடித்திருக்கும் சினிமா நெஞ்சுக்கு நீதி. அனுபவ் சின்ஹா இயக்கத்தில் இந்தியில் வெளியான ஆர்டிகிள் 15 என்ற சினிமாவின் தமிழ் ரீமேக்கை அருண் ராஜா காமராஜ் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார்.

பொள்ளாச்சி அருகே சின்ன கிராமத்தில் நடக்கிறது கதை. சத்யா உள்ளிட்ட மூன்று பெண்கள் தாங்கள் வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் கூலி அதிகமாக கேட்டார்கள் என்பதற்காக அவர்களுக்கு நடந்த கொடுமையும். அதற்கு பின்ன இருந்த சாதிய அடக்குமுறைகளுமே கதை. படம் சொல்லும் நீதி ஒன்றுதான். இந்தியர்கள் அனைவரும் சமம்.

image

தமிழகத்தில் நடந்த நிறைய உண்மைச் சம்பவங்கள் படத்தின் திரைக்கதையில் பிரதிபலிக்கிறது. ஒரு பட்டியலின பெண் சத்துணவு சமைத்தார் என்பதற்காக அவர் துன்புறுத்தப்பட்டு, அவர் சமைத்த உணவும் வீணாக்கப்பட்டதில் துவங்கி டாக்டர் அனிதா மற்றும் காவலர்களுக்கு இடையே இருக்கும் சாதிய பாகுபாடு என அனைத்து நிலையிலும் மண்டிக்கிடக்கும் சாதிப் பிரச்னையை, உண்மைச் சம்பவங்களை எல்லோருக்கும் புரியும் வகையில் எளிமையாக கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

படத்தின் முதல் காட்சியில் துவங்கும் விறுவிறுப்பு இறுதிவரை நீள்கிறது. இடண்டாம் பாதியின் துவக்கத்தில் படம் கொஞ்சம் தொய்வடைவதாக உணர்ந்தாலும் மீண்டும் அதனை அடுத்த சில காட்சிகளில் சரி செய்து மிகத் திறமையாக இயக்கியிருக்கிறார் அருண்ராஜா காமராஜ்.

image

பார்ப்பனர்கள் குறித்த விமர்சனங்களை இதுவரை குறியீடுகள் மூலமே பேசிவந்த தமிழ் சினிமா இந்தப் படத்தில் நேரடியாக சுந்தரம் ஐயர் எனும் கதாபாத்திரத்தை ரேப்பிஸ்ட்டாக, கொடூர குற்றவாளியாக காட்டியிருக்கிறது. மேலோட்டமாக ஆதிக்க சாதியினர் பட்டியலினத்தவர்கள் மீது அடக்குமுறை செய்கின்றனர் என்றில்லாமல், சாதிய அடுக்குகளின் அனைத்து நிலையிலும் ஆதிக்க மனோபாவம் இருக்கிறது என பலகாட்சிகளில் பேசியிருக்கும் நேர்மைக்கு பாராட்டுகள்.

ஆரிக்கு மிக முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவருக்கான காட்சிகள் குறைவு. அவருக்கான காட்சி என்பதைவிடவும் அந்த கதாபாத்திரம் முக்கியமானது என்பதால் இன்னுமே கூடுதல் காட்சிகளை வைத்திருக்கலாம். உதயநிதி ஸ்டாலின், ஆரி என எல்லோருமே நடிப்பில் நல்ல முன்னேற்றம் கண்டிருக்கின்றனர். ஆனால் சுரேஷ் சக்கரவர்த்தியின் கதாபாத்திரமும் அவரது நடிப்பும் கூடுதல் வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமில்லை. மலைச்சாமி எனும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த காவலர். சரிக்கும் தவறுக்கும் இடையில் தெளிவான முடிவுகளை எடுக்க முடியாத நிலையில் இருப்பதாக காட்டியிருப்பதும் கதைக்கு முக்கியமானது.

image

படத்தில் பல முக்கியக் காட்சிகளில் இசையமைப்பாளர் திபு நைனன் தாமஸ் அமைதி காத்திருக்கலாம். ஆனால் “செவக்காட்டு சீமையெல்லாம் ஆண்டாரே அரிச்சந்திர ராசா” பாடல் அல்டிமேட்., வாழ்த்துகள் திபி. தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவுக்கும் ரூபனின் படத்தொகுப்புக்கும் பாராட்டுகள். இருவருமே திரைக்கதையின் சுவாரஸ்யத்திற்கு நன்றாக மெனக்கெட்டிருக்கிறார்கள். படத்தின் முக்கிய பலத்தில் ஒன்று வசனம். தமிழரசன் பச்சமுத்துவின் வசனங்கள் பல இடங்களில் சிந்திக்கும்படியாக உள்ளன. “எல்லாருமே சமம்னா யாரு தான் ராஜாவா இருக்குறது…?” “எல்லாரும் சமம்னு நினைக்கிறவன்தான் ராஜாவா இருக்கணும்.” போன்ற வசனங்கள் தியேட்டரில் அப்ளாஸ் அள்ளின.

படத்தில் நிறைய நல்ல காட்சிகள் உண்டு என்றாலும் குறிப்பிட்ட இரண்டு காட்சிகள் குறித்து பார்ப்போம். ஒன்று சத்யாவைத்தேடி சில ஆண்களுடன் உதயநிதியை அவரது வீட்டில் சந்திக்கிறார் ஷிவானி ராஜ் சேகர். உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஷிவானியுடன் வந்திருந்த ஆண்கள் இருக்கையில் அமர்ந்து பேச ஷிவானி கதாபாத்திரம் மட்டும் நின்று கொண்டு பேசுகிறது. அப்பெண்ணுக்கு இருக்கை தர செட்பிராபர்டி ஒன்று கிடைக்கவில்லையா இயக்குநரே.? இது சின்ன விசயம் தானே என்று தோன்றினால் கடந்து போங்கள். சரி எனப் பட்டால் மாற்றிக் கொள்ளுங்கள்.

image

அடுத்த காட்சி விஜயராகவனாக நடித்திருக்கும் உதயநிதி முதன் முறையாக ஊருக்குள் நுழைகிறார். அப்போது போனில் அவருடன் தொடர்பில் இருக்கும் தன்யாவிடம் “இங்க ஒரு அம்பேத்கர் சிலை இருக்கு.” என்கிறார். “ஊருக்குள் வந்தாச்சுனு நினைக்கிறேன்.” என்கிறார். அதற்கு தன்யா “அம்பேத்கர் சிலை கூண்டுக்குள் இருக்கா.?” என கேட்டதற்கு “இல்லை” என பதில் தருகிறார் உதயநிதி. “அப்போ இன்னும் ஊரு வரல” என்கிறார் தன்யா. இது ரொம்ப நுட்பமாக எழுதப்பட்ட காட்சியாக நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. இக்காட்சி மூலம் அம்பேத்கர் சிலையை ஊருக்கு வெளியே வேண்டுமானால் பாதுகாப்புக் கூண்டு இல்லாமல் வைக்க முடியும். ஊருக்குள் அப்படி வைக்கும் நிலைக்கு இன்னும் நாம் வந்து சேரவில்லை. எனக் கூறுகிறார் இயக்குநர். உண்மைதான்.

இப்படியாக படம் நெடுக நிறைய சுடும் உண்மைகளைப் பேசும் நெஞ்சுக்கு நீதி வெல்லும்.

– சத்யா சுப்ரமணி

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.