பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளதால், 15-வது சீசன் ஐபிஎல் இறுதிப் போட்டியின் நேரத்தை பிசிசிஐ மாற்றி அறிவித்துள்ளது.

கடந்த 2 வருடங்களாக உலகையே புரட்டி போட்ட கொரோனா காரணமாக, இந்தியாவில் முழுமையாக ஐபிஎல் போட்டிகள் நடைபெறாமல் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வந்தது. தற்போது தடுப்பூசி காரணமாக கொரோனா சூழ்நிலை சற்று இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதையடுத்து, இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் இந்தியாவிலேயே நடத்த பிசிசிஐ திட்டமிட்டது.

எனினும் பயோ பபுள் காரணமாக மகராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் புனே நகரங்களில் உள்ள 4 மைதானங்களில் மட்டும் ஐபிஎல் போட்டிகள் ரசிகர்கள் அனுமதியுடன் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்தது. மேலும் புதிதாக இந்த வருடம் லக்னோ மற்றும் குஜராத் ஆகிய 2 அணிகள் சேர்க்கப்பட்டதால், இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு 70 சூப்பர் லீக் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டது.

அதன்படி, கடந்த மார்த் மாதம் 26-ம் தேதி துவங்கிய 15-வது சீசன் ஐபிஎல் போட்டி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 67 சூப்பர் லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளநிலையில், இன்னும் 3 போட்டிகளே எஞ்சியுள்ளன. ஐபிஎல் போட்டியின் சாம்பியன் ஜாம்பவன்களான சென்னை, மும்பையுடன் கொல்கத்தா, பஞ்சாப், ஹைதராபாத் அணிகளும் பிளே ஆஃப் ரேஸிலிருந்து வெளியேறிய நிலையில், அறிமுக அணிகளான குஜராத் மற்றும் லக்னோ அணிகள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற்றுவிட்டன.

image

மீதமுள்ள இரண்டு இடங்களில், 3-வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இன்று நடக்கும் சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தின் வெற்றி, தோல்வியை பொறுத்து ராஜஸ்தான் அணி, 3 அல்லது 4-வது இடத்தை பிடிக்கும். 4-வது இடத்தில் 16 புள்ளிகளுடன் பெங்களூரு அணி இருந்தாலும் ரன்ரேட் குறைந்து காணப்படுவதால், டெல்லி கேப்பிடல்ஸ் அணி, மும்பை அணிக்கு எதிராக நாளை நடைபெறும் ஆட்டத்தில் வெற்றிபெற்றால் பெங்களூரு அணி பிளே ஆஃப் தகுதி சுற்றிலிருந்து வெளியேறிவிடும். மாறாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி தோல்வியுற்றால், பெங்களூரு அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு உறுதியாகிவிடும்.

இதனைத் தொடர்ந்து பிளே ஆஃப் சுற்றுப் போட்டிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திலும், இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கின்றன. இந்நிலையில் 29-ம் தேதி குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கும் இறுதிப்போட்டி துவங்கும் நேரத்தை பிசிசிஐ மாற்றியுள்ளது.

image

அதாவது வழக்கமாக இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்தப் போட்டியை, 8 மணிக்கு பிசிசிஐ மாற்றியுள்ளது. இறுதிப் போட்டிக்கு முன்னதாக சுமார் 6.30 மணியளவில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், இசையமைப்பாள ஏ.ஆர். ரஹ்மான் போன்ற பிரபலங்கள் கலந்து கொள்ளும் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் 75-வது சுதந்திரத் தினத்தை கொண்டாடும் வகையிலும், இந்திய கிரிக்கெட் பயணத்தை குறிக்கும் வகையிலும் இந்த நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளது.

சுமார் 45 நிமிடங்கள் நடக்கும் இந்த கலை நிகழ்ச்சிகள் எல்லாம் முடிந்தப்பின்னர், 7.30 மணிக்கும் டாஸ் போடப்பட உள்ளது. அதன்பிறகு அரை மணிநேரத்திற்குப் பிறகு 8 மணிக்கு இறுதிப் போட்டி துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி நரேந்திர மோடி மைதானத்தில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தற்போதே தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.