கொரோனா லாக்டௌன் காலத்தில் நடந்த ஊர்த் திருவிழா போல சுவாரஸ்யமே இல்லாத டெட் ரப்பர் மேட்ச்சாக நடந்து முடிந்திருக்கிறது சென்னை – குஜராத் மோதிய 62வது போட்டி. சிஎஸ்கே ஊருக்கு டிக்கெட் போட்டாயிற்று, குஜராத் டேபிள் டாப்பராகி பிளேஆஃப்பிலும் முதல் ஆளாகத் துண்டைப் போட்டுவிட்டதால், இது அவர்களுக்கு ஜாலியான பயிற்சிப் போட்டியாக அமைந்தது.

டாஸ் வென்ற தோனி, பகல் போட்டி என்பதால், முதலில் வெயில் நன்றாக அடிக்கும் என்பதால் பேட்டிங் தேர்ந்தெடுப்பதாகக் கூறினார். ஆனால் அவர் அடுத்துச் சொன்ன விஷயம்தான் அப்போதே மழை வந்துவிடுமோ என்று அஞ்ச வைத்தது. ஆம், பிளேயிங் லெவனில் நிறையவே மாற்றங்கள். உத்தப்பா, பிராவோ, தீக்ஷனா, ராயுடு போன்றவர்களை உட்கார வைத்துவிட்டு இளைஞர்களான ஜகதீசன், சோலாங்கி, சாண்ட்னர் மற்றும் மதீஷா பதிரானா ஆகியோருக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டன.

உள்ளூர் போட்டிகளில் மும்பைக்காக ஆடிவரும் பிரசாந்த் சோலாங்கி 22 வயதான லெக் ஸ்பின்னர், தமிழக வீரரான ஜகதீசன் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன், இலங்கையைச் சேர்ந்த மதீஷா பதிரானாதான் 19 வயதேயான கடைக்குட்டி. மலிங்கா பாணியில் பந்துவீசக் கூடியவர். குஜராத் டைட்டன்ஸ் அணியில் மாற்றங்கள் ஏதுமில்லை.

CSK v GT

எப்போதும் டாடிஸ் ஆர்மி எனக் கலாய்க்கப்படும் சென்னை இப்போது புத்தம் புது ரத்தம் பாய்ச்சிய இளம் அணியாகக் களமிறங்கியது. இழப்பதற்கு இனி எதுவுமில்லை. ருதுராஜ் கெயிக்வாட்டும், கான்வேயும் களமிறங்கினர். எப்படியும் ஃபார்மிலிருக்கும் இவர்களிடம் இந்த முறையும் நல்ல பார்ட்னர்ஷிப் எதிர்பார்க்கலாம் என்று நினைத்தபோது, மூன்றாவது ஓவரிலியே ஷமி தன் மேஜிக்கை நிகழ்த்தினார். இடது கை பேட்ஸ்மேனான கான்வேயுக்கு தன் ஆஸ்தான டெஸ்ட் மேட்ச் டைப் பௌலிங் ஸ்டைலில் ரவுண்ட் தி விக்கெட்டில் வந்து வீசினார். கான்வேயும் கீழே நடந்துவந்து அந்தப் பந்தை எதிர்கொள்கிறேன் என ஷமி விரித்த வலையிலேயே விழுந்தார். விக்கெட் கீப்பர் சாஹாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் கான்வே. அவர் எடுத்த ரன்கள் 5.

முதல் டௌனில் வந்த மொயீன் அலியும் பவர்பிளேயில் அடிப்பதற்கான முனைப்பு எதையும் காட்டவில்லை. பின்னர், என்ன நினைத்தாரோ, 5வது ஓவர் வந்தாயிற்று என கெய்க்வாட் ரிஸ்க் எடுத்து அடிக்க ஆரம்பித்தார். யாஷ் தயால் வீசிய அந்த ஓவரில் 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் வந்து சேர்ந்தன. பவர்பிளேவிற்குள்ளாகவே ரஷீத் கானும் பந்து வீச வந்தார். இந்த முறை மொயீன் அலி சுயநினைவுக்கு வர, 2 சிக்ஸர்கள் பறந்தன. ‘அடேங்கப்பா, முத்துப்பாண்டியவே அடிச்சிட்டானே’ எனச் சென்னை ரசிகர்கள் ‘இனி அதிரடி சரவெடி’ எனக் குதூகலித்தனர். ஆனால் ‘அப்படியெல்லாம் எதிர்பார்க்க வேண்டாம்’ என்பதாக சாய் கிஷோர் வீசிய 9வது ஓவரில் ரஷீத் கானிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார் மொயீன் அலி. உள்ளே வந்தார் ஜெகதீசன். 10 ஓவர்கள் முடிவில் 76/2 எனக் கௌரவமான இடத்தில்தான் சென்னை இருந்தது.

CSK v GT

ஆனால், அதன் பிறகு சென்னை பேட்டர்கள் ஆடிய விதம் இருக்கிறதே! ஒருநாள் போட்டியில்கூட ஓவருக்கு ஒரு ஷாட்டாவது ஆட முயற்சி செய்வார்கள். ஒரு டெட் ரப்பர் மேட்ச்சில் அதிரடி காட்டாமல், எதற்கு விக்கெட்களை வைத்திருக்கிறோம் என்றுகூடத் தெரியாமல் ‘பொறுமையே பெருமை’ மோடில் ரன்களைச் சேகரித்தனர். அதற்கேற்றவாறு சாய் கிஷோரும், அல்சாரி ஜோசப்பும் டைட்டான லைன் அண்டு லெந்திலேயே ஓவர் வீசினர். ஒரே ஓவரில் இரண்டு பவுண்டரிகள் வருவதற்கு 15வது ஓவர் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. 3 ஓவர்களுக்கு 1/18 என எக்கனாமிக்கலாக வீசிவந்த சாய் கிஷோரின் கடைசி ஓவரான அதில், ஜகதீசன் ஒரு பவுண்டரியும் ஒரு சிக்ஸரும் அடித்தார். பழைய சிஎஸ்கே-வின் அதிரடியெல்லாம் கடைசி 5 ஓவரில்தான் அரங்கேறும் என்பதால், இப்போதும் ‘விக்கெட் இருக்கு, அதனால சம்பவம் கன்ஃபார்ம்’ என உற்சாகமானார்கள் ரசிகர்கள்.

ஆனால், சிக்ஸர் வரும் முன்னே விக்கெட் விழும் பின்னே என்பதுபோல, அடுத்த ரஷீத் கான் ஓவரில் அரைசதம் கடந்திருந்த கெய்க்வாட் வெளியேறினார். 49 பந்துகளில் 53 ரன்கள் என ஒருநாள் போட்டி ஃபார்மெட்டில் ஆடியிருந்தார் ருத்து. நான்கே ஓவர்கள் மீதமிருக்கும் நிலையில் தோனி வருவார் என கிரிகாலன் மேஜிக் ஷோ ஆடியன்ஸாக எல்லோரும் டக் அவுட்டைப் பார்க்க, உள்ளே வந்ததோ ஷிவம் துபே. வந்தவர், ‘ஓ, அப்ப நீங்க தோனிக்குதான் வெயிட்டிங்கா. சரி, நான் கிளம்பறேன் அப்ப’ எனப் புரிந்துகொண்டவராகத் தான் சந்தித்த இரண்டாவது பந்திலேயே கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் துபே. அற்புதமாகப் பந்துவீசி வந்த அல்சாரி ஜோசப்புக்குக் கிடைத்த முதல் விக்கெட் இது.

CSK v GT

தோனி உள்ளே வந்தார். ஆனால், அவரிடம் எதிர்பார்த்த அந்த அதிரடி வெளிப்படவே இல்லை. இவ்வளவு ஏன், ஒரு பவுண்டரிக்கூட வரவில்லை. அவரிடம் மட்டுமல்ல, எதிரில் செட்டாகி நின்றுகொண்டிருந்த ஜகதீசனிடமிருந்தும் வரவில்லை. ரஷீத் கான் வீசிய 18வது ஓவரில் எல்லாம் வெறும் 3 ரன்கள்தான் வந்தன. கடைசி ஓவரில் தோனியும் அவுட்டாக, 133/5 என இன்னிங்ஸை முடித்தது சென்னை. டெத் ஓவர்களில் ஒரு பவுண்டரிக்கூட சென்னை அடிக்கவில்லை என்பது மன்னிக்கவே முடியாத குற்றம். அதிலும் விக்கெட்டுகள் கையிலிருந்தும் அடிப்பதற்கான முயற்சிகளைக்கூட அவர்கள் பெரிதாக எடுக்கவில்லை.

`அப்பறம் என்னப்பா, ரெண்டு பாயின்ட், நல்ல நெட் ரன்ரேட்… சீக்கிரம் சேஸ் பண்ணி எடுத்துக்கப்பா’ என சென்னையே குஜராத்தின் வழிக்குவர, `எங்களுக்கு அது தேவையில்லையே’ என குஜராத் தயங்க, `பரவாயில்ல… வளர்ற பிள்ளை. வெச்சுக்கோப்பா’ என `சமுத்திரம்’ முரளி, தன் தம்பியின் சட்டைப் பையில் பணத்தைத் திணிப்பதைப் போல சென்னை இரண்டு பாயின்ட்களை குஜராத்திடம் திணித்தது. சேஸ்ங்கில் நடந்த நிகழ்வுகளின் சாராம்சம் இதுதான்!

சேஸிங்கில் குஜராத் டைட்டன்ஸ் சார்பாக சாஹாவும் கில்லும் களம் கண்டனர். முகேஷ் சௌத்ரி பந்து வீசினார். முதல் ஓவரிலேயே 3 பவுண்டரிகள் சாஹாவிடமிருந்து பறந்தன. அடுத்த சிமர்ஜித் ஓவரிலும் ஒரு பவுண்டரி, அடுத்த முகேஷின் ஓவரிலும் இரண்டு பவுண்டரிகள் என சாஹா குட்டி சேவாக்காக மாறினார். முகேஷின் ஓவரில் சாஹா 21 ரன்கள் அடித்திருந்தபோது ஒரு கேட்ச் டிராப் வேறு! ஒரு சுலபமான கேட்ச்சை சூரியனைக் கைகாட்டி கோட்டைவிட்டார் ருதுராஜ். ‘என்ன அடிக்கிறாங்க’ என தோனி ஸ்பின்னர் சான்ட்னரைக் கொண்டு வந்தார். இந்த முறை அதுவரை ஸ்ட்ரைக்கே கிடைக்காத கில் பவுண்டரி அடித்தார். சிமர்ஜித் மீண்டும் ஓவர் வீசவர, ‘என்ன தைரியம்’ என சாஹா இந்த முறை ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என வெரைட்டி காட்டினார். பவர்பிளேயின் கடைசி ஓவரில் கில் மீண்டும் இரண்டு பவுண்டரிகள் அடிக்க, 6 ஓவருக்கு 53/0 எனப் பலமான இடத்தில் குஜராத் இருந்தது.

CSK v GT

8வது ஓவரை வீச வந்தார் மதீஷா பதிரானா. நம்பர் 99 டிஷர்ட்டில் அவர் ஓடிவந்து வீசிய ஸ்டைல் அப்படியே சற்று மலிங்காவை நினைவூட்டியது. அவர் வீசிய முதல் பாலே விக்கெட்! கில் எதிர்பார்த்திராத வேகத்தில் பந்து வர, அவர் பேட்டைக் கொண்டுவருவதில் தாமதம் ஏற்பட, மிடில் ஸ்டெம்புக்கு முன்னால் அவர் பேடில் பட்டது பந்து. கில் ரிவ்யூ கேட்க, அங்கே மூன்று ரெட்கள் வர, அம்பயர் கொடுத்த அவுட் முடிவு ரீட்டெய்ன் செய்யப்பட்டது. மேத்யூ வேட் உள்ளே நுழைந்தார். வந்தவர், பிரஷரை ஏறவிடாமல், அதே ஓவரில் இரண்டு பவுண்டரிகளை விளாசினார். ஆனால், அதன் பிறகு சாஹா, வேட் இருவருமே ரன்ரேட்தான் இருக்கே எனப் பொறுமையாகவே ரன்குவிப்பில் ஈடுபட்டனர். 20 ரன்கள் அடித்திருந்த போது மொயீன் அலி ஓவரில் துபேவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் வேட். ஆனால், அப்போதே குஜராத்தின் ஸ்கோர் 90 ரன்கள்.

தன் இரண்டாவது ஓவரை வீசவந்த பதிரானாவுக்கு மீண்டும் முதல் பாலே விக்கெட். கேப்டன் ஹர்திக் பாண்டியா வெளியேறினார். ‘அப்படின்னா, தம்பி பதிரானா, நீங்க ஏன் எல்லா பந்தையும் முதல் பாலா வீசக்கூடாது’ என அப்பாவியாகக் கேட்டனர் சென்னை ரசிகர்கள். அப்படி ஏதேனும் அற்புதம் நிகழ்ந்தால் மட்டுமே இந்த மேட்ச் கொஞ்சமேனும் சுவாரஸ்யமாகும் என்னும் நிலைமை! சாஹா ஒரு பக்கம் அரைசதம் எல்லாம் கடந்து நங்கூரமாக நின்றிருந்தாலும் உள்ளே வந்த மில்லர், டெஸ்ட் மேட்ச் மோடில் கொட்டாவி விடவைத்தார். 3வது ஓவரில் சாஹா கொடுத்த கேட்ச்சைப் பிடித்திருந்தால் ஒருவேளை ஆட்டம் இப்போது சுவாரஸ்யமாகி இருக்கலாம். அதற்கும் ‘கண்டிஷன்ஸ் அப்ளை’தான்.

CSK v GT

ஆனால், 133 ரன்களை சேஸ் செய்ய விக்கெட்டுகள் கையிலிருந்தும் குஜராத்தும் பெரிதாக பேட்டை வீசவே இல்லை. ‘ஸ்லோ விக்கெட்தான், ஆனா ஒருநாள் போட்டியைவிட மோசமா ஆடினா எப்படிப்பா பார்க்கறது’என டென்ஷனாகினர் 2கே கிட்ஸ். ஒருவழியாகக் கடைசி ஓவர் முதல் பந்தில் சாஹா பவுண்டரி அடிக்க, வெற்றி பெற்றது குஜராத். சாஹா ஆட்டமிழக்காமல் 67 ரன்கள் அடித்திருந்தார்.

சென்னைக்கு ஒரே ஆறுதலான விஷயம் அவர்கள் வாய்ப்பு கொடுத்த இரண்டு இளம் வீரர்களின் பௌலிங் பர்ஃபாமென்ஸ். விக்கெட் எதுவும் எடுக்கவில்லை என்றாலும் பிரசாந்த சோலாங்கி 4 ஓவர்கள் வீசி 18 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார். பதிரானா 3.1 ஓவர்கள் வீசி 2 விக்கெட்களைக் கைபற்றி 24 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தார். போட்டிக்குப் பின்னர் பேசிய கேப்டன் தோனி, முதலில் பேட்டிங் தேர்ந்தெடுத்தது தவறான முடிவாகிப் போனது என்று கூறினார். வேகப்பந்து வீச்சாளர்களை சமாளிப்பது இந்த பிட்ச்சில் கடினமாக இருந்தது என்றும் தெரிவித்தார். பதிரானாவின் பௌலிங்கை பாராட்டியவர், இளம் வீரர்களுக்கு அடுத்த ஆட்டத்திலும் வாய்ப்புகள் கொடுக்கப்படும் என்று கூறி விடைபெற்றார்.

சென்னையின் பிரச்னையே அதன் பேட்டர்கள் முனைப்பு (இன்டென்ட்) எதுவுமின்றி ஆடிவருவதுதான். அதிரடி என்ற எண்ணமே அவர்கள் மனதில் இல்லை. ரன்ரேட் குறைகிறது, தேவைப்படும் ரன்ரேட் எகிறுகிறது என எதைப் பற்றியும் கவலையின்றி 7 ரன்ரேட்டை மெயின்டெயின் செய்தால் போதும் என்றே ஆடிவருகின்றனர். ஜஸ்ட் பாஸ் செய்ய இது காலேஜல்ல. டி20 என்னும் ரத்த பூமி. இங்கு ரன்ரேட்தான் எல்லாமே! சென்னைக்கு இன்னும் ஒரேயொரு போட்டி மட்டுமே மீதமிருக்கும் நிலையில் அதிலேனும் ஒரு அபாரமான வெற்றியை அணி பெறவேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.

CSK v GT

அதேபோல தோனி, அடுத்த சீசனில் தன்னுடைய திட்டம் என்ன என்பதையும் அப்போது சொல்வார் என எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். “ஏதேனும் ஒரு மஞ்சள் ஜெர்ஸியில் உங்களைச் சந்திப்பேன்” என்று அவர் சொல்லியிருக்கும் நிலையில் அது ஆட்டக்காரர் ஜெர்ஸியா, கோச்சின் ஜெர்ஸியா என்பதற்கான விடை அந்தப் போட்டியின் முடிவில் தெரியவரலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.