‘ஒரு தனிமனிதனின் சுய லாபத்திற்காக ஆர்.ஏ.புரம் மக்கள் தூக்கிவீசப்பட்டுள்ளார்கள்’ – அண்ணாமலை

ஆன்மீகத்தை நம்பாத கலைஞர் பெயரை ரத வீதிக்கு வைக்க வேண்டாம் என்பது தான் பாஜகவின் போராட்டத்திற்கு காரணம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஆர்.ஏ. புரம் கோவிந்தசாமி நகரில் தீக்குளித்து மரணமடைந்த கண்ணையன் மனைவி மற்றும் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அண்ணாமலை அந்தப் பகுதியில் வீடு இழந்தவர்களிடம் நேரில் விசாரித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, ஒரு தனி மனிதன், தனது சுய லாபத்திற்காக பொய்யான வழக்குப் பதிவு செய்துள்ளார் என 2016-ல் வீட்டு வசதி வாரிய செயலாளராக இருந்த தர்மேந்திர சிங் பிரசாத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள், கோவிந்தசாமி நகரில் இருந்து தூக்கி வீசப்பட்டுள்ளனர். மக்களை வெளியேற்றிவிட்டு திராவிட மாடல் அரசியல் என்று சொன்னால் நம்ப முடியுமா ?. வேதனையான துரதிர்ஷ்டவசமான சம்பவம் ஆர்.ஏ. புரத்தில் நடைபெற்றுள்ளது. ஒரு தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்காக மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். நீதிமன்றம் கூறியிருந்தாலும் அதை நிறைவேற்றுவதற்கும், முறையாக வெளியேற்றுவதற்கான பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது.

image

குருவிக் கூட்டை கலைத்தால் குருவி சும்மா இருக்காது என கண்ணையன் இறக்கும் முன் எனக்கு அனுப்ப வீடியோ எடுத்துள்ளார். நீதிமன்ற உத்தரவை முறையாக செயல்படுத்த வேண்டும். நேற்று முன்தினம் தான் குடும்பத்தினர் எனக்கு கவனத்தில் கொண்டு வந்தனர். கோவிந்தசாமி நகரில் உள்ள ஒவ்வொரு மக்களுடனும் பாஜக இருக்கும். ஊமை மக்களின் மீது அதிகார பலத்தை காட்ட வேண்டாம். இதுதான் திராவிட மாடல் அரசா என அனைத்து வீடுகளிலும் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

முதல்வர் இந்த விஷயத்தில் நியாயமாக நடந்து கொள்ளாததால், கவர்னரிடம் முறையிட உள்ளோம். நாட்டிற்கே முன்மாதிரியாக மக்களை இங்கிருந்து கண்ணியமுடன் வெளியேற்றி இருக்கலாம். சுய நோக்கத்திற்காக மக்கள் இங்கிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். பிற்படுத்த ஒடுக்கப்பட்ட மக்கள் தான் இங்கு நிறைந்துள்ளனர். முதல்வர் திராவிட மாடல் ஆட்சி என கூறி வருகிறார். கோவிந்தசாமி நகரில் உள்ள வீட்டில் வந்து ஏன் முதல்வர் சாப்பிடவில்லை.

image

கலைஞர் கருணாநிதியின் பெயரை வைக்க வேண்டாம் என சொல்லவில்லை. சாலையே இல்லாத இடத்தில் சாலை அமைத்து கலைஞர் பெயர் வைத்து கொள்ளுங்கள். ஆன்மீகத்தை நம்பாத கலைஞர் பெயரை, ரத வீதிக்கு வைக்க வேண்டாம் என்பது தான் பாஜகவின் போராட்டத்திற்கு காரணம். ரத வீதிக்கு கலைஞர் பெயர் வைக்க மாட்டோம் என கே.என். நேரு சொன்னதற்கு காரணம் என்ன?. கே.என். நேரு இந்த விஷயத்தில் சப்பைக்கட்டு கட்டுகிறார்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM