கடந்த சில போட்டிகளில் நீக்கப்பட்டப்பின் மீண்டும் களமிறங்கி அணியின் வெற்றிக்கு பங்களித்த கொல்கத்தா அணி வீரரான வெங்கடேஷ் ஐயர், போட்டி முடிந்தப்பின் அணிக்கு மீண்டும் திரும்பியது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். 

15-வது சீசன் ஐபிஎல் போட்டியின் சூப்பர் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற இன்னும் ஒருசில போட்டிகளே உள்ளநிலையில், ஒவ்வொரு அணியும் வெற்றிபெறும் முனைப்புடன் விளையாடி வருகிறது. கடந்த சீசனில் பிரகாசித்த பல வீரர்கள் இந்தாண்டு சீசனில் பெரிதாக விளையாடவில்லை.

அந்தவகையில், கடந்த ஆண்டு ஐக்கிய அமீரகத்தில் இரண்டாம் பாதியில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், பின்தங்கிய நிலையில் இருந்த கொல்கத்தா அணியை அதிரடியான தனது ஆட்டத்தின் மூலம் ஆல்ரவுண்டரான வெங்கடேஷ் ஐயர் இறுதிப் போட்டி வரை கொண்டு வந்து, கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதனால் காயம் காரணமாக விளையாட முடியாதநிலையில் இருந்த ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா இடத்தை இந்திய அணியில் வெங்கடேஷ் ஐயர் நிரப்பினார்.

image

இதையடுத்து கொல்கத்தா அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய வெங்கடேஷ் ஐயர் இந்தாண்டு நடைபெற்ற மெகா ஏலத்தின்போது, கொல்கத்தா அணியில் 8 கோடி ரூபாய்க்கு தக்கவைக்கப்பட்டார். ஆனால், இந்தாண்டு சீசனில் பெரிதும் எதிர்பார்த்தநிலையில், வெங்கடேஷ் ஐயரால் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறினார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 10 போட்டிகளில் 4 அரைசதங்கள் உள்பட 370 ரன்கள் குவித்தநிலையில், இந்த சீசனில் 9 ஆட்டங்களில் 132 ரன்களே எடுத்து அணியின் பெரும்பாலான தோல்விக்கு காரணமானார். மேலும் 4 ஓவர்களே பந்துவீசியிருந்தாலும் விக்கெட்டுகளும் எடுக்கவில்லை.

இதனால் பார்மில் இல்லாத வெங்கடேஷ் ஐயரை கொல்கத்தா அணி கடந்த சில போட்டிகளில் நீக்கியது. மேலும் வெங்கடேஷ் ஐயர் மீது முன்னாள் வீரர்கள் உள்பட பலரும் விமர்சனம் வைத்திருந்தனர். இந்நிலையில், நேற்று டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரானப் போட்டியில், மீண்டும் களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர், 24 பந்துகளில், 43 ரன்கள் எடுத்து பவர் பிளேயில் அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார்.

image

இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியை, கொல்கத்தா அணி 52 ரன்களில் வீழ்த்தி வெற்றிபெற்று பிளே ஆஃப் போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழக்காமலும், புள்ளிப்பட்டியலில் முன்னேறியது. இந்நிலையில், போட்டி முடிந்து பேசிய வெங்கடேஷ் ஐயர், களத்திற்கு சென்று அந்தச் சூழலை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ள நினைத்தேன். இது எனக்கு கடினமான காலகட்டம், ஆனாலும் என்ன முடிவு வருகிறது என்பதை விட எனது செயல்பாட்டில் கவனம் செலுத்தி வருகிறேன். களத்தில் என்ன நடக்கிறது, பந்துகளின் எண்ணிக்கை மற்றும் விக்கெட்டுகளின் எண்ணிக்கையை என்னால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் எனது செயல்பாட்டை என்னால் கட்டுப்படுத்த முடியும், அதைத்தான் நான் செய்து வருகிறேன். அணியின் வெற்றிக்கு பங்களித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், “ஓரிரு ஆட்டங்களுக்கு நான் நீக்கப்பட்டேன். தற்போது மீண்டும் இன்னிங்ஸைத் துவக்கியுள்ளது நன்றாக உள்ளது. நாங்கள் வெற்றி பெற்றோம் என்பதே மிக முக்கியமான விஷயம். வெற்றிபெற்ற உணர்வு நன்றாக இருக்கிறது. நாம் என்ன பங்களிக்கிறோம் என்பதைப் பொருட்படுத்தாமல், அணி வெற்றி பெற்றால், இயல்பாகவே நாம் மகிழ்ச்சியாக இருப்போம். நான் பந்து வீசினாலும், பீல்டிங் செய்தாலும் அல்லது பேட்டிங் செய்தாலும், நாம் எந்த திறமையை செய்ய முயற்சித்தாலும், நாம் அணிக்கு பங்களிப்பது முக்கியம்” என கூறியுள்ளார்.

image

பீல்டிங் மற்றும் பந்துவீச்சு எனக்கு மிகவும் முக்கியமானது. துரதிர்ஷ்டவசமாக எனக்கு அதிக ஓவர்கள் பந்துவீச வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், நான் எந்த ஓவர்களை வீசினாலும், கேப்டன் விரும்பும் வேலையை செய்வேன். பேட்டிங் செய்யும்போது அணிக்கு நல்ல தொடக்கத்தை வழங்குவது எனது பணி என நினைக்கிறேன். இன்று நான் அதை செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என தெரிவித்துள்ளார். கொல்கத்தா அணி இதுவரை ஆடிய 12 போட்டிகளில் 5 வெற்றி 7 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகள் எடுத்து 7-வது இடத்தில் உள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.