இந்த ஐபிஎல் சீசனிலிருந்து அதிகாரபூர்வமாக மும்பை அணி நாக் அவுட்டாகி இருக்கிறது. என்ன இப்பத்தானா என்கிறீர்களா? ஆம், அப்படித்தான் சொல்கிறார்கள். இனி கால்குலேட்டரில் என்ன செய்தாலும், மும்பையால் உள்ளே வர முடியாது. பலமுறை கோப்பை வென்ற மூன்று அணிகளும் புள்ளிப் பட்டியலில் பாதாளத்தில் இருக்கின்றன.

‘வாழ்க்கை ஒரு வட்டம்டா, இங்க ஜெயிக்கறவன் தோப்பான், தோக்கறவன் ஜெயிப்பான்’ என சொன்ன இயக்குநர் ரமணா எவ்ளோ பெரிய தீர்க்கதரிசி. அதே சமயம், நேற்றைய முதல் போட்டியின் முடிவில் ஒரு அணி தனக்கான வாய்ப்பை இன்னும் அதிகமாக இறுகப்பிடித்திருக்கிறது. இன்னொரு அணி வெளியே செல்வதற்கான வெளியை இன்னும் எளிதாக்கியிருக்கிறது.

அஷ்வின் | PBKS v RR

போட்டிகளில் வென்று கொண்டிருக்கும் வரை டாஸில் தோற்பது எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. சஞ்சு சாம்சன் இந்த சீசனில் விளையாடிய 11 போட்டிகளில் 10 முறை டாஸில் தோற்றிருக்கிறார். டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால், அணியில் எந்த மாற்றமும் இல்லை என்பதாக பேட்டிங் தேர்வு செய்தார். ராஜஸ்தான் ராயல்ஸில் கருண் நாயருக்குப் பதிலாக யசஸ்வி ஜெய்ஸ்வால் அணியில் சேர்க்கப்பட்டார். மீண்டும் கிடைத்த வாய்ப்பை கிரிப்பாகப் பிடித்துக்கொண்டார் ஜெய்ஸ்வால் என்றுதான் சொல்ல வேண்டும்.

பஞ்சாப் கிங்ஸ் பிளேயிங் XI: ஜானி பேர்ஸ்டோ, தவான், மயாங்க் அகர்வால், பனுகா ராஜபக்சே, லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் ஷர்மா, ரிஷி தவான், ரபாடா, ராகுல் சஹார், அர்ஷதீப் சிங், சந்தீப் ஷர்மா

ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் XI: பட்லர், படிக்கல், சஞ்சு சாம்சன், ஷிரோம் ஹெட்மேயர், யசஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், அஷ்வின், டிரென்ட் போல்ட், பிரசீத் கிருஷ்ணா, சஹால், குல்தீப் சென்

பேர்ஸ்டோவும், தவானும் ஓப்பனிங் இறங்க, முதல் ஓவரை வீசினார் போல்ட். ஓவர் தி விக்கெட்டில், போல்ட் வீசிய ஸ்விங் பந்தை மிட்விக்கெட் திசையில் பவுண்டரி ஆக்கினார் பேர்ஸ்டோ. மூன்று பந்துகளுக்குப் பிறகு அரௌண்ட் தி விக்கெட் எடுத்தார் போல்ட். இந்தப் பக்கம் வந்தா மட்டும் விட்டுடுவனா என்பதாக, மீண்டும் லெக் சைடில் ஒரு பவுண்டரி. முதல் ஓவரில் பத்து ரன்கள். அதே சமயம், ஆட்டத்தின் மூன்றாவது ஓவரை அட்டகாசமாக வீசினார் போல்ட். தவானால் அந்த ஓவரில் எதுவுமே செய்ய முடியவில்லை. மெய்டன் ஓவர்.

PBKS v RR

மெய்டன் எல்லாம் போட்டிருக்காரே என நம்பி, பவர் பிளேவுக்குள்ளாகவே மூன்றாவது ஓவரையும் கொடுத்ததுதான் ஆபத்தாக முடிந்துவிட்டது. இரண்டு பவுண்டரி, டீப் மிட்விக்கெட்டில் ஒரு சிக்ஸ் என அமர்க்களப்படுத்தினார்கள் ஓப்பனர்கள். இந்த சீசனில் பேர்ஸ்டோ அடிக்கும் முதல் சிக்ஸ் இதுதான். பவர்பிளேயின் கடைசி ஓவரை வீசினார் அஷ்வின். அவுட்சைட் ஆஃபாக வீசப்பட்ட பந்தை இறங்கி வந்து ஃபிளிக் செய்ய முயன்றார் தவான். ஆனால், அது பட்லர் முன்பு நின்றுகொண்டிருந்த இடம் நோக்கிச் சென்றது. பந்து வரும் திசையைக் கணித்து, அதற்கேற்ப நகர்ந்து ஒற்றைக் கையில் பந்தைப் பிடித்து அசத்தினார். அட்டகாசமான கேட்ச். பவர்பிளே இறுதில் ஒரு விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்தது பஞ்சாப்.

ராஜபக்சே அடுத்தடுத்து சில பவுண்டரிகளை அடித்துவிட்டு சஹால் பந்தில் போல்டாகி வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் மயாங்க் அகர்வாலின் விக்கெட்டையும் சஹாலே கைப்பற்றினார். சஹாலின் பந்தை லாங்க் ஆனில் அடிக்க முயன்றார் மயாங்க். ஆனால், அங்கு நின்றுகொண்டிருந்த பட்லரிடம் அது எளிதாக தஞ்சம் புகுந்தது. அடுத்த இலக்கை பேர்ஸ்டோவுக்கென முடிவு செய்தார் சஹால். லெக்கில் வீசப்பட்ட பந்தை ஃபிளிக் செய்ய முயன்று, அது மிஸ்ஸாக எல்பிடபுள்யூ என அப்பீல் செய்தார் சஞ்சு சாம்சன். அம்பயர் அவுட் கொடுத்ததற்கு எதிராக அப்பீல் செய்தார் பேர்ஸ்டோ. ஆனாலும், அது அவுட்தான் என முடிவு செய்யப்பட்டது. ஜிதேஷ் ஷர்மாவின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது பஞ்சாப்.

ரபாடா, பட்லர் | PBKS v RR

ஜெய்ஸ்வாலும், பட்லரும் ஓப்பனிங் இறங்கினார்கள். சந்தீப் ஷர்மாவின் ஓவரை ஆரம்பத்திலிருந்தே அடிக்க ஆரம்பித்தார் ஜெய்ஸ்வால். முதல் ஓவரிலேயே இரண்டு பவுண்டரி ஒரு சிக்ஸர் என 14 ரன்கள். ரபாடா வீசிய ஆட்டத்தின் நான்காம் ஓவர், அதிரடி சரவெடியாகச் சென்றது. ஸ்கொயர் லெக்கில் ஒரு ராட்சஸ சிக்ஸ் அடித்து அந்த ஓவரை ஆரம்பித்து வைத்தார் பட்லர். மைதானத்தில் எங்கெல்லாம் கேப் இருக்கிறது என முன்னரே அறிந்து வைத்திருந்தார் பட்லர். அவுட்சைடு ஆஃபாக வந்த பந்தை கவர்ஸில் பவுண்டரிக்கு அனுப்பினார். அடுத்த பந்து இன்னும் சிறப்பு. க்ரீஸில் இருந்து கொஞ்சம் நகர்ந்து வந்து, வந்த பவுன்சரை பின் பக்கமாக லாகவமாகத் திருப்பினார். இன்னொரு பவுண்டரி. அடுத்து வந்த யார்க்கரை மிட் ஆஃபில் பவுண்டரிக்கு அனுப்பினார். ‘என்னப்பா பண்ற நீயி’ என்பதாகவே அந்த ஓவர் முழுக்கச் செய்துகொண்டிருந்தார் பட்லர். ஒய்டு யார்க்கரை, ஸ்கூப் அடிக்க முயன்று, எது எட்ஜாகி ராஜபக்சேவிடம் கேட்ச் ஆனது.

முதல் இன்னிங்ஸில் லிவிங்ஸ்டோன் இப்படித்தான் மூன்று ஸ்டம்புகளையும் பெப்பரெப்பே எனக் காட்டி நின்று போல்டானார். பவர் பிளே இறுதியில் ஒரு விக்கெட் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.

அடுத்து வந்த சஞ்சு சாம்சன் அதிக நேரம் நீடிக்கவில்லை. ஆனால், ஜெய்ஸ்வால் எல்லோருடைய பந்துவீச்சையும் துவம்சம் செய்தார். விக்கெட்டுகள் அதிகம் இருந்தாலும், தனி ஒருவனாக ஆட்டத்தை வென்றுகொடுக்க வேண்டும் என்கிற முடிவில் இருந்தார் ஜெய்ஸ்வால். சஹால், ரிஷி தவான், சந்தீப் என யார் பந்துவீசினாலும், அதை பவுண்டரி ஆக்கினார். இறுதியாக அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் லாங் ஆஃபில் நின்றுகொண்டிருந்த லிவிங்ஸ்டோனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

மூன்று ஓவருக்கு 27 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், தன் கடைசி ஓவரை வீச வந்தார் ரபாடா. முதல் பந்தை டீப் ஸ்கொயர் லெக் திசையில் பௌண்டரி ஆக்கினார் படிக்கல். இன்ஸ்விங்காக வந்த அல்வா ஃபுல் டாஸை, அலேக்காக புல் அடித்து சிக்ஸ் ஆக்கினார் ஹெட்மெயர். அடுத்து டீப் பேக்வேர்டு ஸ்கொயர் லெக்கில் ஒரு பவுண்டரி அடித்தார் படிக்கல். தேவைப்பட்ட ரன்களில் 16 ரன்கள் இதிலேயே கிடைத்துவிட, எளிதாக போட்டியை வென்றது ராஜஸ்தான்.

41 பந்துகளில் 68 ரன்கள் எடுத்த ஜெய்ஸ்வால் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் ஏழு வெற்றிகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கின்றது. லக்னோ, குஜராத், ராஜஸ்தான் அணிகள் பிளே ஆஃப் செல்வது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. நான்காம் இடத்துக்கு மீதியிருக்கும் எல்லா அணிகளுமே போட்டி போட வேண்டியதிருக்கும். ‘மும்பை இந்தியன்ஸ் உங்களைச் சொல்லல.’ கொல்கத்தாவுக்குச் செல்ல தேவையில்லாத முதல் அணி என்கிற பெருமையைப் பெறுகிறது மும்பை இந்தியன்ஸ்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.