முதல் பாதியில், பவர்பிளேயை விந்தையான விஷயங்களின் குவியலாகவே இரு அணிகளும் ஆக்கியிருந்தன. புதுப்பந்தில் நன்றாக ஸ்விங் செய்யும் தீபக் சஹார் இல்லாத குறையை முகேஷ் செளத்ரி ஓரளவு தீர்த்துக் கொண்டுள்ளார். இத்தொடரில் அவர் எடுத்திருந்த 11-ல் 8 விக்கெட்டுகள், பவர் பிளேயிலேயே வந்திருக்கின்றன. இருப்பினும், அவரது சுமையைப் பங்கிட்டுக் கொள்ள இத்தொடரில் பெரும்பாலும் பவர்பிளேயில் இரண்டு ஓவர்களுக்காவது ஸ்பின்னர்களை நாடியிருந்தது சிஎஸ்கே.

கோலி – டு ப்ளெஸ்ஸியின் டிராக் ரெக்கார்டுகளை வைத்து பார்க்கையில் அவர்களுக்கான தூண்டில் ஸ்பின்னர்களால் ஆயத்தம் செய்யப்படும் என உறுதி செய்தது. ஆனால், அதிசயிக்கும் விதமாக ஆறாவது ஓவரில்தான் தீக்ஷனாவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

RCB v CSK

மறுபக்கம், ஆர்சிபி, ‘சபாஷ்’ போட வைத்துக் கொண்டிருந்தது. இந்த சீசனில், இப்போட்டிக்கு முன்னதாக, அவர்களது பவர்பிளே சராசரியும் ரன்ரேட்டும் முறையே 39.50 மற்றும் 6.58 மட்டுமே. அதனைத் திருத்தி எழுதினர் ஆர்சிபி ஓப்பனர்கள். இயற்கைக்கு மாறாக இன்ஸ்விங்கர்கள் கோலியைத் தடுமாறச் செய்யவில்லை, ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே நகர்ந்த பந்துகள் ஆசை காட்டவில்லை.

இந்த சீசனில் முன் எப்போதும் இல்லாத விதமாக வேகப்பந்து வீச்சாளர்களிடம் தன் விக்கெட்டுகளை அதிகமாகக் கொடுத்திருந்தார் டு ப்ளெஸ்ஸி. ஆனால், இந்த ஆட்டத்தில் மஞ்சள் ஜெர்ஸியைக் கண்டதும் பழைய ரிதம் வந்தவராக முகேஷின் ஓவரில் வந்த ஃபுல் லெந்த் பந்துகளை ஃபுல் மீல்ஸாக தனது பேட்டுக்கு விருந்தாக்கிக் கொண்டிருந்தார். அதிர்ஷ்டமும் ஆர்சிபி பக்கம் காற்றைத் திருப்பி விட, எட்ஜான பந்துகள்கூட சேஃப் ஜோனிலேயே தரையிறங்கின. அந்த ஓவரில் வந்த 18 ரன்கள், ஆர்சிபிக்கு 57 ரன்களோடு ஆர்ப்பரிக்கும் தொடக்கத்தைத் தந்தன.

RCB v CSK

எல்லாம் சரிதான். ஆனால், ஆர்சிபியின் ப்ளூ பிரிண்டுக்குள்ளேயே புதைந்து போயிருக்கும் ஸ்பின் பலவீனம், சிஎஸ்கே தரப்பிலிருக்கும் தரமான மூன்று ஸ்பின்னர்களையும் அவர்களது 12 ஓவர்களையும் எப்படித் தாக்குப் பிடிக்கப் போகின்றது என்பது பலரது மனதிலும் எழுந்த கேள்வியாக இருந்திருக்கலாம். உண்மையில் அதற்கான பதில் தெரியாதது போலத்தான் ஆர்சிபியின் பேட்ஸ்மேன்களே ஆட்டமிழந்தனர்.

மொயின் அலியின் பந்தினை சரியாக டைமிங் செய்யாததால் டு ப்ளெஸ்ஸியின் புல் ஷாட் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பை உடைத்தது. இக்கூட்டணி இன்னமும் ஓரிரு ஓவர்கள் நிலைத்திருந்தால்கூட 200+ ஸ்கோர் எளிதாக வந்திருக்கும். ஒன்டவுனில் வந்த மேக்ஸ்வெல்லுக்கு அவரது விக்கெட்டை ஏழு முறை எடுத்துள்ள ஜடேஜாகூட வில்லனாகவில்லை. கோலி மூலம் வந்த ரன்அவுட் வடிவத்தில் அவருக்கு ஆபத்து வந்தது. ‘அடுத்த அதிர்வுகள் சில நொடிகளில்’ என அறிவிப்பு வெளியிடாத குறையாக, மொயின் அலியின் ஆஃப் ஸ்பின் கோலியை முன்வந்து ஆட வைத்து, ஏமாற்றி, ஸ்டம்பை சிதறச் செய்தது. கோலி எல்லா வகையான பார்மெட்டுகளிலும் இதேபோல்தான் போல்ட் ஆகிகொண்டிருக்கிறார். ஸ்பின்னில் ஸ்விப் ஆட விரும்பாத கோலியின் பலவீனத்தை மொயின் அலி போன்ற ஸ்பின்னர்கள் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றார்கள்.

3 விக்கெட்டுகள் விழுந்த இந்த 3 ஓவர்களில், 17 ரன்களை மட்டுமே கொடுத்து ஓட்டுநர் இருக்கையில் திரும்பவும் அமர்ந்தது சிஎஸ்கே. முதல் பாதியில் அங்கிருந்து அவர்களது ஓட்டுநர் உரிமம் கைமாறவே இல்லை.

RCB v CSK

தங்களது திறமையை ஒன்றாகத் திரட்டி, படிதர் – லாம்ரோர் கூட்டணி மட்டுமே, ரன்கள் வந்து கொண்டே இருப்பதை உறுதி செய்து, மிடில் ஓவர்களுக்கான நியாயம் கற்பித்தனர்.

மூன்று ஓவர்களில் விழுந்த மூன்று விக்கெட்டுகள் போட்டியைப் புரட்டிப் போட்டதென்றால், தீக்ஷனாவின் ஒரு ஓவரில் விழுந்த மூன்று விக்கெட்டுகள்தான் போட்டியின் முக்கியத் தருணத்தில் திருப்புமுனையாகின. லாம்ரோர், ஹசரங்காவை அனுப்பியதோடு நிற்காமல் அந்த ஓவரின் இறுதியில், ஷபாஸையும் அவர் அனுப்பியதுதான் அணியை முன்னிலைப்படுத்தியது. ஸ்பின் பந்துகளுக்கு ஆர்சிபி பேட்ஸ்மேன்கள் திணறுவார்கள் என்பது ஏலம் முடிந்த சமயத்திலிருந்து பேசப்பட்டு வரும் விஷயம்தான். ஆனால் அதனைச் சரிசெய்ய அவர்கள் எந்த அளவிலும் முயன்றிருக்கவில்லை. இந்தக் கூற்றைத்தான் இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே ஸ்பின்னர்கள் நெற்றிப் பொட்டில் அடிக்காத குறையாகச் சொல்லிச் சென்றனர்.

தினேஷ் கார்த்திக்கின் கடைசிநிமிட மீட்பு நடவடிக்கைதான் ஆர்சிபியை 170-ஐ தாண்டிப் பயணிக்க வைத்தது. நடப்பு சீசனில் 20-வது ஓவரில் மட்டும் தினேஷ் கார்த்திக்கின் ஸ்ட்ரைக் ரேட் 257.89. அந்த ஓவர்களில் 19 பந்துகளில் 49 ரன்களைக் குவித்துள்ளார்.

RCB v CSK

மொத்தத்தில், ஆர்சிபியின் நிலையற்ற பேட்டிங் லைன் அப், மீண்டும் மீண்டும் வெளிப்பட்டு வருகின்றது. சிஎஸ்கேயின் பக்கமோ ப்ரிடோரியஸ், முகேஷ், சிமர்ஜித் என எல்லோரது எக்கானமியும் 10-ஐ தாண்டியது. அவர்களில் யாருமே தங்களது முழு 4 ஓவர் கோட்டாவை பூர்த்தி செய்யவில்லை. சுழல்பந்து குழு மீட்புக்கு வராதிருந்திருந்தால் மோசமான இடி சிஎஸ்கே பக்கம் இறங்கியிருக்கலாம்.

டிரை பிட்சில் ஸ்பின்னர்களை வெய்டிங் லிஸ்டில் போட்ட சிஎஸ்கேயின் தவற்றைத் தாங்களும் செய்யாமல் ஸ்பின்னோடு தொடங்கியது ஆர்சிபி. ஆனால், தவற்றுக்கு பிராயச்சித்தமாக ஸ்பின் பந்துகளை ஆடுவது எப்படி என்று ஆர்சிபி மொத்தத்துக்கும் தனது ஸ்வீப்பாலும், ரிவர்ஸ் ஸ்வீப்பாலும் கான்வே பதில் தந்து கொண்டிருந்தார்.

டி20-ல் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவரது சராசரி 42 என்றால், ஸ்பின்னுக்கு எதிராக 72. இந்தப் புள்ளிவிவரமும் அந்த சாம்பிள் ஓவருமே டு ப்ளெஸ்ஸியை பின்வாங்க வைத்து வேகத்தின் வழியிலேயே நகர்த்தியது. பவர்பிளேயின் இறுதி ஓவரிலும் ஹசரங்காவின் பந்துகள் சிறப்பாகவே கவனிக்கப்பட, 51/0 என்ற வலிமையான நிலையில் சிஎஸ்கே நின்றது.

RCB v CSK

ரன்கள் கசிந்தாலும் பரவாயில்லை, விக்கெட் விழ சுழலைத் தவிர வேறு வழியில்லை என்பதால் ஷபாஸ், மேக்ஸ்வெல், ஹசரங்காவை வைத்து மும்முனைத் தாக்குதலை டு ப்ளெஸ்ஸி முடுக்கிவிட்டார். பிட்சில் இருந்த எக்ஸ்ட்ரா பவுன்ஸ், களத்தின் இயல்பை மாற்றி ஸ்பின்னுக்குக் கை கொடுத்தது. ஷபாஸ் வீசிய ஷார்ட் லெந்த்தில் வந்த பந்தைக் கணித்து ஆடாமல் புல் ஷாட்டில் ஆட்டமிழந்தார் கெய்க்வாட். போன போட்டியில் மேக்ஸ்வெல்லை நையப் புடைத்த உத்தப்பாவை இம்முறை மேக்ஸ்வெல்லே அனுப்பினார். இந்த இரட்டைத் தாக்குதலை நிகழ்த்தினாலும் கான்வேயே ஆர்சிபியால் அசைக்க முடியவில்லை. அவருக்குக் கேக் வாக்கான சுழல் பந்துகள் தரப்பட அவரது அரைசதம் 33 பந்துகளில் வந்து சேர்ந்தது.

வாய்ப்பளிக்காமல் சிஎஸ்கே வெளியே உட்கார வைத்த வீரரான கான்வேதான் அடுத்தடுத்து இரண்டு அரை சதங்களை அடித்துள்ளார். கெய்க்வாட்டோடு செட்டிலாக ஒரிரு போட்டிகள் கான்வேவுக்குக் கொடுத்திருந்தால் நிச்சயம் அதன்பிறகு சிஸ்கேயின் பவர்பிளேகளில் தீப்பொறி பறந்திருக்கும். இறுதியாக, ஹசரங்கா பந்தில் ஸ்வீப் ஷாட் ஆட முயன்று கான்வே ஆட்டமிழந்த புள்ளிதான், போட்டி 180 டிகிரி திரும்பிய தருணம்.

ஆனாலும், அந்தக் கட்டத்திலேயே ஒரு மாபெரும் தவற்றை சிஎஸ்கே செய்திருந்தது. முதல் 16 ஓவர்களில், 30 டாட் பால்கள் வந்து சேர்ந்தன. அதாவது 16-ல் ஐந்து ஓவர்கள் ரன்களே வராத கணக்கில் சேர்ந்துவிட்டன. டி20-ல் உதிரிகள் எப்படி எதிரிகளோ, ரன்அவுட் எவ்வளவு தவறோ, அதே போல் டாட் பால்கள் என்பதுவும் நடக்கவே கூடாத பெருந்தவறுதான். 51 என்ற பவர்பிளே ஸ்கோர் லீட் தந்திருந்தாலும், ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்யத் தவறிய இடத்தில்தான் சிஎஸ்கே தடுமாறிவிட்டது.

RCB v CSK

கான்வே ஆட்டமிழந்த கட்டத்திலிருந்து 35 பந்துகளில் 64 ரன்கள் என எட்டக்கூடியதாகவே இலக்கு இருந்தது. ஆனால், அங்கிருந்து எல்லாவற்றையும் ஆர்சிபி கனகச்சிதமாக நடத்திச் சென்றது. ரன்களைக் கட்டுப்படுத்துவதிலிருந்து, பௌலர் – ஃபீல்டர் கைகோத்து விக்கெட் வீழ்த்துவது வரை எல்லாமே சரியாகவே நடந்தேறியது.

ஹர்சல் பட்டேல் பந்தில் பேட்ஸ்மேன்கள் சிக்ஸர் அடிக்கும்போது எல்லாம் அசாராமல் அதே ஓவரிலயே அவர்கள் விக்கெட்டையும் வீழ்த்தி அசரவைத்து கொண்டிருந்தார். ஒரு ஸ்பின்னரோ இல்லை மீடியம் பாஸ்ட் பௌலரோ பேட்ஸ்மேன் சிக்ஸ் அடிக்கும்போது கவலைப்படாமல் தொடர்ந்து தங்களது லைனில் பந்தை வீசி பேட்ஸ்மேனை அந்தச் சூழ்ச்சியில் சிக்க வைப்பதே டி20 பார்மெட்டின் அழகு. அதை இன்று அற்புதமாகச் செய்தார் ஹர்சல்.

20வது ஓவர் காஸ்ட்லியாகி இருந்தாலும், கடைசி ஐந்து ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை எடுத்து, மொத்தமே 42 ரன்களை மட்டுமே ஆர்சிபி பௌலர்கள் கொடுத்திருந்தனர். சிஎஸ்கே தரப்பில், பொறுப்பாக நின்று ஆடி ஃபினிஷிங் ரோலை யாரும் முழுமையாகச் செய்யவுமில்லை. இப்படிப்பட்ட சின்னச் சின்ன சறுக்கல்கள்தான் சிஎஸ்கேவே இந்தத் தொடர் முழுவதுமே கீழே விழ வைத்துக் கொண்டே இருந்தன. கடைசியாக கொஞ்சமாக ஒட்டிக் கொண்டிருந்த நம்பிக்கையையும் அடித்து உடைத்துள்ளது இப்போட்டி.

ஸ்பின்னுக்கு நேசக்கரம் நீட்டிய பிட்சில் மூன்று விக்கெட்டுகளை எடுத்த ஹர்சல் படேல், ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.

RCB v CSK

13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு, நான்காவது இடத்திற்கும் முன்னேறியுள்ளது ஆர்சிபி. ஹாட்ரிக் தோல்விகளோடு துவண்டிருந்த ஆர்சிபிக்கு சிஎஸ்கேயுடனான இந்த வெற்றி, நம்பிக்கைச் சாரலில் நனைய வைத்தது மட்டுமில்லாமல், பிளேஆஃப் கனவுக்கும் மறுபடியும் உயிரூட்டியுள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.