‘Extra அப்டிங்க்றது ரொம்பே பெரிய மந்திரம்ங்க. அதை சரியா பயன்படுத்திக்கிட்டா லைஃப் ரொம்பே நல்லாருக்கும். எக்ஸ்ட்ரா சாப்பிடக்கூடாது. எக்ஸ்ட்ரா பேசக்கூடாது. எக்ஸ்ட்ரா புகழக்கூடாது. எக்ஸ்ட்ரா…’ பேட்ட படத்தின் இசைவெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படி எக்ஸ்ட்ராவை தவிர்த்தலின் மகிமை குறித்து பேசியிருப்பார். அவர் அப்போது பேசியபோது அது அவ்வளவாக புரியவில்லை. எல்லாமே கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக இருந்தால்தான் என்ன என்றே தோன்றியது. ஆனால், இப்போது ஐ.பி.எல்-ஐ பார்க்கும்போதுதான் ரஜினிகாந்த் பேசியதன் வீரியத்தை முழுமையாக உணர முடிகிறது.

எக்ஸ்ட்ராக்கள் இங்கே பிரச்னைதான். மில்லி மீட்டர் அளவு கூடினால் கூட சர்ச்சைதான். இந்த எக்ஸ்ட்ராக்கள்தான் வீரர்களும் அம்பயர்களும் கட்டிப்புரண்டு உருளாத குறையாக விவாதிப்பதற்கும் காரணமாகி இருக்கின்றன. எக்ஸ்ட்ராக்கள் குறித்த கொஞ்சம் எக்ஸ்ட்ரா விரிவான அலசல் இங்கே…

Rishabh Pant

இப்போது ரிஷப் பண்ட்டை நினைத்தால் அவர் ஆடிய அதிரடியான இன்னிங்ஸ் ஒன்று நினைவிற்கு வருவதை விட அவர் பெவிலியனில் நின்று கொண்டு ஆட்டத்தை புறக்கணித்துவிட்டு வாருங்கள் என தன்னுடைய வீரர்களுக்கு சைகை காட்டிய நிகழ்வே ஞாபகம் வரும். நடப்பு சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸூக்கு எதிரான போட்டியில் அந்தச் சம்பவம் நடந்திருந்தது. ரிஷப் பண்ட் அவ்வளவு ஆத்திரப்பட்டதற்கும் அதிருப்தியடைந்ததற்கும் கள நடுவர் அளித்த ஒரு முடிவே காரணமாக அமைந்தது. இடுப்புக்கு மேல் சென்ற ஃபுல் டாஸிற்கு நோ-பால் வழங்கியிருக்க வேண்டும் என்பதே ரிஷப் பண்ட் உட்பட ஒட்டுமொத்த டெல்லி முகாமின் விருப்பமாகவும் இருந்தது. அதற்காகத்தான் அத்தனை களேபரங்களை நிகழ்த்தியிருந்தார்கள்.

நடுவர்களின் முடிவில் வீரர்கள் அதிருப்தியடையும் சம்பவங்கள் இதற்கு முன்பே நிறைய நடந்திருக்கின்றன. ஆனால், இந்த சீசனில் அப்படியான சம்பவங்களின் இன்னும் அதிகரித்திருப்பதாக தெரிகிறது. குறிப்பாக, எக்ஸ்ட்ராக்கள் வழங்குவதில் நடுவர்கள் எடுக்கும் முடிவுகள் தொடர்ந்து சர்ச்சையாகி வருகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய போட்டியில் கூட நடுவரின் முடிவுகள் விவாதத்திற்கு உள்ளாகியிருந்தன. கொல்கத்தா அணி சேஸிங் செய்தது. கடைசி 2 ஓவர்களில் அந்த அணியின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டன. முக்கியமான 19வது ஓவரை பிரசித் கிருஷ்ணா வீசியிருந்தார். ரிங்கு சிங் மற்றும் நிதிஷ் ராணா இருவரும் க்ரீஸில் நின்றனர். இருவருமே இடது கை பேட்ஸ்மேன்கள். மைதானத்தின் ஒரு பக்கம் கொஞ்சம் பெரிதாகவும் இன்னொரு பக்கம் கொஞ்சம் சிறியதாகவும் இருக்கும். பிரசித் கிருஷ்ணா அந்த 19வது ஓவரை வீசும்போது இரண்டு இடது கை பேட்ஸ்மேன்களுக்கும் ஆஃப் சைடில் அந்தப் பெரிய பகுதி இருந்தது. இதனால், ஆஃப் சைடில் மட்டும் டீப்பில் 4 ஃபீல்டர்களை வைத்துவிட்டு ஒயிடு அவுட் சைடு தி ஆஃப் ஸ்டம்ப்பில் வீச வேண்டும் என்பதே பிரசித் கிருஷ்ணாவின் திட்டம். இந்தத் திட்டத்தின் படிதான் அந்த ஓவர் முழுக்கவும் வீசினார். ஆனால், முழுமையான துல்லியத்தோடு வீசவில்லை.

Sanju Samson & Umpire

மூன்று ஒயிடுகளை வீசியிருந்தார். நடுவர் வழங்கிய இந்த மூன்று ஒயிடுகள்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் பிரசித் கிருஷ்ணா இருவரையும் அதிருப்திக்குள்ளாக்கியது.

19வது ஓவரின் மூன்றாவது பந்தில் முதல் ஒயிடை வீசியிருப்பார். கால்களை நகர்த்தாமல் கொஞ்சம் பேட்டை மட்டுமே விட்டு இந்த பந்தை ரிங்கு சிங் அடிக்க பார்த்திருப்பார். பேட்ஸ்மேன் நகராததால் இந்தப் பந்தை ஒயிடு என நடுவர் அறிவித்திருப்பார். இதிலேயே சாம்சனும் பிரசித் கிருஷ்ணாவும் கொஞ்சம் அதிருப்தியாகினர். ஆனால், கமென்ட்ரியில் பேசிக்கொண்டிருந்த சைமன் டூலி மற்றும் சுனில் கவாஸ்கர் போன்றோரெல்லாம் நடுவர் மிகச்சிறப்பாக தீர்ப்பளித்திருப்பதாக பாராட்டியிருந்தனர். இந்த ஒயிடுக்காக வீசப்பட்ட அடுத்த பந்தில் ரிங்கு பவுண்டரி அடித்திருப்பார்.

இப்போது நான்காவது பந்தை பிரசித் கிரிஷ்ணா வீசினார். இந்த பந்தை ரிங்கு சிங் நன்றாகவே நகர்ந்து ஒயிடு லைன் வரை வந்து அடிக்க முயன்று தவறியிருப்பார். சாம்சன் டாட் பால் என மகிழ்ச்சி கொள்ள, இதையும் ஒயிடு என நடுவர் அறிவித்துவிடுவார். மீண்டும் அதிருப்தியடைந்த சாம்சன் ஒயிடு முடிவிற்காக ரிவ்யூ கேட்டிருப்பார். ஆனால், அப்படியெல்லாம் ரிவ்யூ எடுக்க முடியாது என்பதால் சம்பிரதாயத்திற்காக பந்து எட்ஜ் ஆகியிருக்கிறதா என்பதை மட்டும் பார்த்து நாட் – அவுட் என்று சொன்னார்கள்.

ஒயிடாக வீசப்பட்ட இந்தப் பந்திற்காக வீசப்பட்ட எக்ஸ்ட்ரா பந்தில் ரிங்கு சிங் ஒரு ரன் ஓடியிருப்பார்.

கடைசி பந்தில் நிதிஷ் ராணா ஸ்ட்ரைக்கில் இருந்தார். இப்போதும் நல்ல ஒயிடாக ஒரு பந்தை வீசி பிரசித் கிருஷ்ணா ஒயிடு வாங்கினார். இந்தப் பந்திற்கு ஒயிடு வழங்கப்பட்டதிலுமே சாம்சனுக்கும் பிரசித் கிருஷ்ணாவுக்கும் திருப்தியில்லை. இந்த ஒயிடு பந்திலேயே நிதிஷ் ராணா ஒரு ரன் ஓடிவிட, ஒயிடிற்காக வீசப்பட்ட அடுத்த பந்தில் ரிங்கு சிங் ஒரு பவுண்டரி அடித்துவிடுவார். ஏறக்குறைய இந்த ஓவரிலேயே போட்டி முடிந்துவிட்டது. தேவைப்பட்ட 18 ரன்களில் 17 ரன்களை பிரசித் கிருஷ்ணாவே வழங்கிவிட்டார்.

பிரசித் கிருஷ்ணா வீசிய இந்த ஓவரில் ஒயிடு மற்றும் ஒயிடிற்காக வீசப்பட்ட எக்ஸ்ட்ரா டெலிவரிக்களிலேயே 13 ரன்களைக் கொடுத்திருந்தார்.

Rinku Singh

சஞ்சு சாம்சனும் பிரசித் கிருஷ்ணாவும் விரும்பியதை போல மூன்று ஒயிடுகள் வழங்கப்படாமல் இருந்திருந்தால் 13 ரன்களை கடைசி ஓவருக்கு கடத்தியிருக்க முடியும்.

சாம்சனும் பிரசித் கிருஷ்ணாவும் நினைத்ததை போல இந்த மூன்றுமே ஒயிடற்ற சரியான டெலிவரிக்கள்தானா? நடுவர் தவறான முடிவைத்தான் வழங்கினாரா? இல்லவே இல்லை. இந்த மூன்று ஒயிடுகளில் இரண்டு ஒயிடுகள் சரியாக வழங்கப்பட்டதாகவே தெரிகின்றன. முதல் ஒயிடில் ரிங்கு சிங் நகரவே இல்லை, பந்து ஒயிடு லைனுக்கு வெளியேத்தான் சென்றிருந்தது. இந்தப் பந்திற்கு ஒயிடு வழங்கிய நடுவரின் முடிவு சரியே. கடைசி பந்தில் வீசிய ஒயிடு ரொம்பவே ஒயிடாக சென்றிருந்தது. ஒயிடு லைனுக்கும் வெளியே ஒரு கோடு வரையப்பட்டிருக்கும் அல்லவா அந்த லைனையும் தாண்டி சென்றிருக்கும். பேட்ஸ்மேன் எவ்வளவு தூரம் நகர்ந்தாலும் அந்த லைனுக்கு வெளியே சென்றால் அது ஒயிடுதான். இங்கேயும் நடுவர் முடிவு சரியே. சஞ்சு சாம்சன் நடுவரிடம் விளக்கம் கேட்டுக்கொண்டிருந்த போது சங்ககராவே பெவிலியனிலிருந்து ஒயிடு சிக்னலைக் காட்டியிருப்பார்.

இந்த இரண்டு ஒயிடுகளுக்கும் இடையில் ஒரு ஒயிடை பிரசித் கிருஷ்ணா வீசியிருந்தாரே? அதுதான் விவாதத்திற்க்குள்ளானது.

ரிங்கு சிங் அந்தப் பந்தில் நன்றாக நகர்ந்து ஒயிடு லைன் அருகேயே வந்திருப்பார். பேட்ஸ்மேன் இவ்வளவு நகர்ந்து வரும்போது மிக அகலமான அந்த பெரிய ஒயிடு லைனுக்கு உள்ளே பந்து இருந்தாலே அது சரியான டெலிவரிதான். பிரசித் கிருஷ்ணா வீசிய பந்து அப்படித்தான் இருந்தது. ஆனாலும் நடுவர் ஒயிடு கொடுத்தார்.

கடந்த பந்தில் சரியாக ஒயிடு வழங்கிய விதத்திற்காக கமென்ட்ரியில் நடுவரை பாராட்டியிருந்த சைமன் டூலி இந்த முடிவிற்காக நடுவரை விமர்சித்தார்.

என சைமன் டூலி பேசியிருந்தார். கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்த போது சிவம் மவி வீசிய 20வது ஓவரில் ஹெட்மயருக்கும் இதே பாணியில் ஒரு பந்து வீசப்பட்டிருக்கும். ஹெட்மயர் நகர்ந்திருப்பார். பந்து அந்த இரண்டு லைனுக்கும் இடையில் பிட்ச் ஆகி சென்றிருக்கும். ரிங்கு சிங்குக்கு ஒயிடு வழங்கிய அதே நடுவர் ஹெட்மயருக்கு ஒயிடு வழங்கவில்லை.

Hetmayer

இதேமாதிரியான சர்ச்சை பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் மோதிய போட்டியிலும் அரங்கேறியிருந்தது. லக்னோ சேஸிங் செய்து கொண்டிருந்தது. ஆட்டம் பரபரப்பான இறுதி ஓவர்களை எட்டியிருந்தது. கடைசி இரண்டு ஓவர்களில் 34 ரன்களை எடுக்க வேண்டிய சூழலில், ஹேசல்வுட் அந்த 19வது ஓவரை வீசினார். பிரசித் கிருஷ்ணாவின் அதே ஒயிடு அவுட் சைடு தி ஆஃப் ஸ்டம்ப் திட்டம்தான். முதல் பந்தையே நல்ல ஒயிடாக வீசுகிறார். ஸ்டாய்னிஸ் ஒரு அடி எடுத்து வைத்த உடனேயே அது ஒயிடாகத்தான் செல்லும் என்பதை உணர்ந்து ஷாட் ஆடாமல் விட்டுவிட்டார். ஒயிடு வழங்கப்படும் என ஸ்டாய்னிஸ் எதிர்பார்க்க நடுவரோ ‘I had other ideas’ என கையைக் கட்டிக்கொண்டார். ஸ்டாய்னிஸ் அதிருப்தியடைந்தார். அடுத்த பந்தை ஹேசல்வுட் வீசினார். எப்படியும் ஒயிடாகத்தான் வரப்போகிறது அதை விட்டால் ஒயிடும் கொடுக்கமாட்டார்கள் என நினைத்து ஸ்டாய்னிஸ் நன்றாக வெளியே வந்து ஆட, ஹேசல்வுட் கொஞ்சம் சர்ப்ரைஸாக வீசி ஸ்டம்புகளைத் தகர்த்திருப்பார். ஏமாற்றத்தில் ஹை டெசிபலில் கூச்சலிட்டே ஸ்டாய்னிஸ் வெளியேறியிருப்பார். மிக அகலமான அந்தப் பெரிய லைனுக்கு வெளியே சென்றால், பேட்ஸ்மேன் எவ்வளவு தூரம் நகர்ந்திருந்தாலும் ஒயிடு வழங்க வேண்டும்.

இந்த விதியின்படிதான், நிதிஷ் ராணா பேட்டிங் செய்யும்போது அவருக்கு ஒரு ஒயிடு வழங்கப்பட்டது. ஆனால், இந்த நியாயம் ஸ்டாய்னிஸூக்குக் கிடைக்கவில்லை.

ஹேசல்வுட் வீசிய அந்தப் பந்தும் அந்த மிக அகலமான லைனை தாண்டிதான் சென்றிருந்தது. ஆனால், ஒயிடு வழங்கப்படவில்லை. இத்தனைக்கும் ஸ்டாய்னிஸ் முழுமையாக நகரவும் இல்லை. முழுமையாக ஷாட் ஆடவும் முயற்சி செய்யவில்லை.

ஒரே விதிதான். ஆனால், ஒரு அணிக்கு ஒரு மாதிரியாகவும் இன்னொரு அணிக்கு வேறு மாதிரியாகவும் தீர்ப்பு வழங்கப்படுகிறது. இதுதான் வீரர்களையும் அதிருப்தியடைய செய்கிறது. மேலும், இந்தத் தவறுகளெல்லாம் ஆட்டம் ரொம்பவே பரபரப்பான கட்டத்தை எட்டுகிற சமயத்தில்தான் நடந்திருக்கின்றன. ரிஷப் பண்ட்டைக் கோபப்படுத்திய அந்த ஃபுல் டாஸ், சஞ்சு சாம்சனை ரிவியூவ் கேட்க வைத்த ஒயிடுகள், ஸ்டாய்னிஸூக்கு பிபி ஏற்றிய ஒயிடு வழங்காத முடிவு என எல்லாமே போட்டியின் கடைசி மூன்று ஓவருக்குள் நடந்தவை. இவற்றில் 100% சரியான முடிவுகள் வழங்கப்பட்டிருக்குமாயின் போட்டியின் முடிவு எப்படி வேண்டுமானாலும் மாறியிருக்கலாம்.

Hazelwood

ரிஷப் பண்ட் விவகாரத்தின் போது கெவின் பீட்டர்சன் இப்படி பேசியிருந்தார்.

பீட்டர்சன் கூறுவதன் அடிப்படையை வீரர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். இந்த ஆட்டம் யாரோ ஒருவரின் கட்டுப்பாட்டில்தான் ஆடப்பட வேண்டும். கட்டுப்படுத்துபவராக இங்கே நடுவர் இருக்கிறார். நடுவரின் முடிவுகள் அலட்சியப்படுத்தப்படுமாயின் அது எந்த ஒழுங்கும் இல்லாத தங்கள் விருப்பப்படிக்கு ஆடும் முறையற்ற வீடியோ கேம் போன்றே இருக்கும். இதை உணர்ந்ததால்தான் என்னவோ ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் அதிருப்திக்கு மத்தியிலும் ரொம்பவே தன்மையுடன் நடந்துக்கொண்டார்.

Umpire

கடைசி முடிவு நடுவருடையதுதான் என்றாலும் ஒரே விதியை நடுவர்கள் செயல்படுத்திக்காட்டும் விதத்தில் வெவ்வேறு மாதிரியான முடிவுகளையும் தாக்கத்தையும் கொடுக்கும்பட்சத்தில் அந்த விதிகளில் கூடுதல் தெளிவை ஏற்படுத்த வேண்டிய தேவையை அது உணர்த்துவதாகவே புரிந்துக்கொள்ள வேண்டும். தடாலடியான ரிஷப் பண்ட் ஆகட்டும், அமைதியான சஞ்சு சாம்சன் ஆகட்டும் தங்களுக்கு ஒரு தவறான முடிவு வழங்கப்பட்ட சமயத்தில் மூன்றாவது நடுவர் தலையிட வேண்டும் என விரும்பினர். ஆனால், அதற்கான வாய்ப்பே அங்கே இல்லை. முக்கியமான டெத் ஓவர்களிலாவது விவாதத்திற்குரிய விஷயங்களில் மூன்றாவது நடுவரின் தலையீட்டை உறுதி செய்வது நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்.

கோடிக்கணக்கான பார்வையாளர்கள் பார்க்கும் ஐ.பி.எல் தொடரில் நடுவரின் முடிவுகள் போட்டிக்குப் போட்டி மாறுபடுமாயின் அது இந்தப் போட்டியின் மீதான மதிப்பையே குலைத்துவிடும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.