தன்னுடைய 40வது பிறந்த நாளில் ரசிகர் மன்றத்தை கலைத்து நடிகர் அஜித் குமார் வெளியிட்ட அறிக்கையை ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர். 

சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர்களுக்கு பிறந்தநாள் என்றால் ஒரு வாரத்திற்கு முன்பே அவரது ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலைக்கு வந்துவிடுவார்கள். தமிழ் சினிமா ரசிகர்களின் நெஞ்சங்களில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் திரை நட்சத்திரங்களில் முக்கியமானவர் அஜித்குமார். நாளை மே ஒன்றாம் தேதி அஜித் தனது 51வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். 11 வருடங்களுக்கு முன்பு இதேபோன்றதொரு பிறந்தநாள் கொண்டாட்ட மனநிலையில்தான் அஜித் ரசிகர்களும் இருந்தனர். மே ஒன்றாம் தேதி பிறந்தநாள் என்றால் இரண்டு தினங்களுக்கு முன்பு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் அஜித்திடம் இருந்து அறிக்கை ஒன்று வெளியானது. நிச்சயம் அவரது ரசிகர்கள் அந்த அறிக்கையை எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். அந்த அறிக்கை என்ன?, தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கும், உச்சநட்சத்திர நடிகர்களின் வளர்ச்சிக்குமான உறவு என்ன என்பது குறித்து இந்த கட்டுரை தொகுப்பில் காணலாம்.

image

பாகவதர் காலம் காதல் தொட்டு..

கருப்பு வெள்ளை காலம் தொட்டு, கலர் ஃபுல்லான கனவுகளோடு ஊரை, உறவை, நண்பர்களை விட்டு விலகி, சாதிக்க வேண்டும். அதுவும் திரைத் துறையில் சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கோலிவுட் என்றழைக்கப்படும் கோடம்பாக்கம் நோக்கி படையெடுத்தோர் எராளம் ஏராளம். சிறிய மேன்சன் அறையில் திரும்பிக்கூட படுக்க முடியாத இடத்தில் பசியோடும், பட்டினியோடும் காலத்தை கழித்தோர் ஏராளம் ஏராளம். சினிமா ஸ்டுடியோ வாசல் வாசலாக அலைந்து திரிந்து, கதை சொல்லி, நடித்துக் காட்டி கடைசியில் சாதித்தவர்களை விட தோல்வியுற்றவர்களே அதிகம்.

image

விடாமுயற்சியால் கோடம்பாக்கத்தில் வெற்றிக்கொடி நாட்டிய நடிகர்கள்

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என பலமுறை முயன்று அதில் வெற்றி பெற்று புகழின் உச்சத்திற்குச் சென்றவர்களும் இருக்கிறார். இதில் நடிகைகளும் விதிவிலக்கல்ல. நடிகர் நாகேஷ், கவிஞர் வாலி, சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் முதல் இன்றைய திரை நட்சத்திரங்கள் பலரும் இதில் அடக்கம். இப்படியாக பல இன்னல்களுக்கிடையில் நடிகர்களாக உருமாறியவர்களின் வளர்ச்சி அவர்களது ரசிகர்களாலேயே சாத்தியமாயிற்று என்றால் அது மிகையில்லை.

தமிழ் சினிமா உலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதர் முதல் இன்றைய நகைச்சுவை நடிகர் யோகிபாபு வரை அனைவரும் தங்களது நடிப்பால் ரசிகர்களின் ஆதரவோடுதான் வளர்ந்திருப்பார்கள், வளர்ந்திருக்கிறார்கள். நாளடைவில் ரசிகர்களால் உருவாக்கப்பட்ட ரசிகர் மன்றங்கள்தான் நடிகனின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

image

ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக மாற்றிய கமல்ஹாசன் 

புரட்சித் தலைவர் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் எம்ஜிஆர், நடிகராக அரசியல்வாதியாக ஏன் தமிழக முதல்வராக இருந்தார் என்றால் அதற்கு முக்கிய காரணங்களில் அவரது ரசிகர்களுக்கும் நிச்சயம் இடமுண்டு. இப்படியாக சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், முத்துராமன், ரவிச்சந்திரன், எஸ்.எஸ்ஆர், ரஜினிகாந்த் என பலருக்கும் ரசிகர் மன்றம் இருந்தாலும், தனது ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக மாற்றிய பெருமை கமல்ஹாசனையே சேரும். இதற்கெல்லாம் ஒருபடி மேலே போய் நடிகை குஷ்புவிற்கு கோவில் கட்டிய ரசிகர்களும் உண்டு. இப்படியாக தனது வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய ரசிகர் மன்றத்தை 11 வருடங்களுக்கு முன்பு நடிகர் அஜித்குமார் கலைத்தார். ஏன் என்ன காரணம் அது குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.

ஆரம்ப காலத்தில் அல்டிமேட் ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட நடிகர் அஜித்குமார் அமராவதி என்ற படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி ஆசை, காதல் கோட்டை, அவள் வருவாளா, வாலி, அமர்க்களம், தீனா, சிட்டிசன், ரெட், வில்லன், ஆழ்வார், வரலாறு, விஸ்வாசம், வலிமை உள்ளிட்ட 60 படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக ஜெலிக்கிறார்.

image

2011ல் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அஜித்தின் அறிக்கை

கிரீடம், பில்லா, ஏகன், அசல் போன்ற பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகராக இருந்த நேரத்தில் தனது 40வது பிறந்த நாளில் ரசிகர்களுக்கு ஒரு கடிதத்தை வெளியிட்டார். (29.04.2011) தேதியிட்டு, பிறந்த நாள் அறிக்கை அஜித்குமார் என்ற தலைப்பில் வெளிவந்த அந்த கடித்தத்தில்… ”நீண்ட நாட்களாகவே என்னை சிந்திக்க வைத்த ஒரு கருத்தை சொல்ல இன்றே உகந்த நேரம் என கருதி இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்,

நான் என்றுமே ரசிகர்களை எனது சுயநலத்திற்காக பயன்படுத்தியதில்லை. எனது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்காக அவர்களை கேடயமாக பயன்படுத்திக் கொண்டதும் இல்லை, நான் நடித்த படங்கள் நன்றாக இருந்தால் அதற்கு ஆதரவு தரவும், சரியாக இல்லாவிட்டால் விமர்சிக்கவும் ரசிகர்களுக்கு உரிமை உண்டு. எனது ரசிகர்கள் சமுதாய நல பணிகளில் ஈடுபடுவது கூட யாருக்கும் இடையூறு இல்லாமல் செய்ய வேண்டும் என்பதையே நான் வலியுறுத்தி வருகிறேன்,

வருகிற மே 1ஆம் தேதி என்னுடைய 40வது பிறந்த நாளில் எனது கருத்தை, எனது முடிவாக அறிவிக்கிறேன், இன்று முதல் எனது தலைமையின் கீழ் கட்டுப்பட்டு வந்த அஜித்குமார் நற்பணி இயக்கத்தை கலைக்கிறேன்” என்று குறிப்பிட்டு இருந்தார். இப்படியாக வளர்ந்து வரும் ஒரு நடிகர் தனது ரசிகர் மன்றத்தை கலைப்பதன் மூலம் அவருக்கு நேரும் இழப்புகளை கருத்தில் கொள்ளாமல் ரசிகர்களின் குடும்ப நலனை கருத்தில் கொண்டு இப்படி ஒரு முடிவை அவர் தனது ரசிகர்களுக்குச் சொன்னார். அஜித்தின் இந்த செயலை இன்றளவும் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

image

அஜித்குமார் ரசிகர் மன்றங்களை கலைப்பதாக சொன்னாலும் கூட இன்று வரை அவரது ரசிகர் பட்டாளம் குறைந்த பாடில்லை. நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டுதான் செல்கிறது. அவரது படங்களின் முதல் நாள் காட்சிகளின் போது கிடைக்கும் வரவேறு அதனை உறுதி செய்கிறது. 

ரசிகர்களை கண்டிக்க தவறான அஜித்

தனது ரசிகர்கள் பலத்தால்தான் தன்னுடைய படங்களுக்கு வசூல் மழை கொட்டுகிறது என்பதால், ரசிகர்கள் செய்யும் அத்துமீறல்களை நடிகர்கள் பலரும் கண்டிக்க தயங்குவார்கள். ஆனால், பல முறை தனது ரசிகர்கள் அத்துமீறி செல்லும் அதனை கண்டித்து அஜித் அறிக்கை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். குறிப்பாக சமீபத்தில் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு அவரது ரசிகர்கள் அத்துமீறி பல இடங்களில் நடந்து கொண்டதை கண்டித்து அவர் அறிக்கை வெளியிட்டு இருந்தார். 

அந்த அறிக்கையில், “உங்களுக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமே. எனக்கு சினிமா ஒரு தொழில். நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில் மற்றும் சமூக நலன் சார்ந்தவை. நம் செயல்களே சமூகத்தில் நம் மீது மரியாதையை கூட்டும். இதை மனதில் கொண்டு ரசிகர்கள் பொது வெளியிலும், சமூக வலைதளங்களிலும் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

image

அதேபோல், ”என்னை தல என்றோ வேறு ஏதேனும் பட்டப்பெயர்களை குறிப்பிட்டோ அழைக்க வேண்டாம்” என்று கடந்த டிசம்பர் மாதம் அஜித் அறிக்கை வெளியிட்டு இருந்தார். 

image

இப்படி ரசிகர்களை பொறுத்தவரை அஜித் குமார் எடுத்து வரும் நடவடிக்கைகள் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற தரப்பினர் மத்தியிலும் அவர் மீதான மரியாதையை கூட்டி வருகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.