”அமைச்சராக பதவியேற்றபோது சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தேன். வார்த்தைகளால் விவரிக்க முடியாத உணர்வு அது. ‘கட்சிக்காக ரோஜா கஷ்டப்பட்டிருக்காங்க. அவங்களுக்கு மக்கள்கிட்ட நல்ல பேர் இருக்கு. அமைச்சராக வாய்ப்புக் கொடுத்தால் இன்னும் சிறப்பாக செயலாற்றுவார்’ என்று ஜெகன் சார் எனது மக்கள் பணியை கவனித்து வாய்ப்பு கொடுத்துள்ளார். அவரது நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவேன்” என்று உற்சாகத்தோடும் புத்துணர்வோடும் பேசுகிறார், ஆந்திர மாநிலத்தில் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள ரோஜா.

பெயரில் ரோஜா என்று இருந்தாலும் இவரது அரசியல்பாதை என்னவோ முட்கள் நிறைந்ததுதான். அரசியலில் முற்பாதைகளை கடந்து, ரோஜாக்களில் கால்பதித்திருக்கிறார் ரோஜா. தற்போது அமைச்சராகி ஆந்திரா மட்டுமல்ல தமிழர்களையும் பெருமிதம் கொள்ள வைத்துக்கொண்டிருக்கிறார். வாழ்த்துகளுடன் பேசினோம். புதிய தலைமுறை டிஜிட்டலுக்காக எக்ஸ்குளுசிவாக பேசியவரிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்,

தமிழ் நடிகைகளில் ஜெயலலிதாவுக்கு அடுத்து சட்டமன்றம் சென்ற பவர்ஃபுல்லான அரசியல்வாதியாக மாறியிருக்கிறீர்கள். உங்கள் இன்ஸ்பிரேஷனான ஜெயலலிதாவிடம் கற்றுக்கொண்டது என்ன?

”இப்படி சொல்றது ரொம்பப் பெருமையா இருக்கு. நடிகையாகவும் அரசியல்வாதியாகவும் சக்சஸ்ஃபுல்லா பயணிப்பது சாதாரண விஷயமில்லை. அதுவும், ஆணாதிக்க சமூகத்தில் ஜெயலலிதா அம்மா சாதித்துக் காட்டினார். நான் அரசியலுக்கு வரும்போதே அம்மாவிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டுத்தான் வந்தேன். அந்தளவுக்கு அவங்களைப் பிடிக்கும். அரசியலில் எவ்ளோவோ கஷ்டங்களை சந்தித்தேன். தெலுங்கு தேசம் கட்சி ஒரு வருடம் சஸ்பெண்ட் செய்து ரொம்பவே அவமானப்படுத்தினார்கள். பெண் எம்.எல்.ஏக்களை வைத்தே காயப்படுத்தினார்கள். அப்போல்லாம், நான் அம்மாவைத்தான் மனதில் நினைத்துக்கொள்வேன்.

’எந்தக் கஷ்டம் வந்தாலும் நமக்கு மக்களின் அன்பு இருக்கு. அது இருந்தால் எந்தப் பிரச்சனையையும் சந்திக்கலாம். கஷ்டம் கொடுக்க 10 பேர் இருந்தாலும் சப்போர்ட் செய்ய 1000 பேர் இருக்காங்க. இந்தப் பத்து பேர் கொடுக்கும் கஷ்டம் கொஞ்சநாளைக்குத்தான்’ என்ற நம்பிக்கையில் அம்மாவின் மன உறுதியையே பின்பற்றி சோர்வடையாமல் இருந்தேன். சினிமாவில் வால் இருக்க மாதிரியான ஜாலியான பொண்ணு நான். இவ்வளவு கஷ்டங்களைத் தாண்டி வந்திருக்கேன்னா, அதுக்கு அம்மாவும் காரணம்”.

அமைச்சரானதும் தமிழகத்தில் இருந்து வாழ்த்தியவர்கள்?

”என் நம்பர் நிறையப் பேருக்குத் தெரியாது. ஆனால், அப்படி வாங்கி ‘நம்ம துறையில் இருந்து அமைச்சர் ஆனது ரொம்ப பெருமையா இருக்கு’ என்று சரோஜாதேவி அம்மா பாராட்டியது ஆசிர்வாதமாக இருந்தது. அதேபோல், சாரதா ஆன்ட்டி, ரம்யா கிருஷ்ணன், ராதிகா அக்கா, மீனா, பாரதிராஜா சார், உதயகுமார் சார் என பலர் வாழ்த்தினார்கள். சூப்பர் ஸ்டாரிடம் இருந்து இந்த மாதத்திற்குள் வாழ்த்து வந்துடும்னு நினைக்கிறேன்.

”நடிகையாக இருப்பது கொஞ்சம் சொகுசாக இருப்பது போன்றது. ஆனால், அரசியல் அப்படி இல்லை. கல் மேல்தான் நடக்கணும். நடத்தைப் பற்றியெல்லாம் பேசுவார்கள். இப்படியொரு ஃபீல்டில் இரண்டுமுறை தோற்று மீண்டும் இரண்டு முறை ஜெயிப்பது சாதாரண விஷயமே இல்லை. நிறைய கட்ஸும் தன்னம்பிக்கையும் வேண்டும்” என்று பாராட்டுவது பூஸ்டப் ஏற்றியதுபோல் உள்ளது. இன்னும் மக்களுக்காக களத்தில் சுழலவேண்டும் என்ற ஊக்கத்தைக் கொடுத்திருக்கிறது”.

image

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோதே உங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். இது தாமதமாக கிடைத்தது என்று எடுத்துக்கொள்ளலாமா?

“எனக்கு முன்கூட்டியே ரெட்டி சமூகத்தில் ராமச்சந்திரா ரெட்டி ஒய்.எஸ்.ஆர் காலத்தில் அமைச்சராக இருந்தவர். அதுவும், சீனியர். ஒரு மாவட்டத்தில் இரண்டு ரெட்டி சமூகத்தினருக்குக் கொடுக்க முடியாது என்பதால் அவருக்கு முதலில் கொடுத்தார்கள். அப்படிக் கொடுத்தாலும் தொழில்துறை கட்டமைப்பு சேர்மனாக எனக்கும் பதவி கொடுத்தார் ஜெகன் சார். அதுவும் அமைச்சருக்கு இணையான ரேங்க்தான். இரண்டு வருடங்கள் அதிலும் சிறப்பாக செயலாற்றினேன்.

ஒய்.எஸ்.ஆர் இறந்தபிறகு காங்கிரஸில் இணைய விருப்பமில்லாமல் மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தினேன். எட்டு மாதங்கள் கழித்து, “அப்பா இருக்கும்போது உங்களுக்கு நியாயம் செய்யமுடியவில்லை. நீங்கள் எங்களுடன் இருங்கள். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்” என்றார் ஜெகன் சார். அந்த நம்பிக்கையுடன் மீண்டும் அரசியலுக்கு வந்தேன். எங்கள் கட்சியின் கெளரவ பிரசிடெண்ட் விஜயம்மாவும் ஜெகன் சாரும் இப்போது வரை என்னை சகோதரியாகவே பார்த்து மரியாதையாக நடத்துவதோடு சப்போர்ட்டிவாவும் இருக்கிறார்கள். எனக்கு எனது பெற்றோர்கள் கொடுத்த அண்ணன் இருவர் என்றால், கடவுள் கொடுத்த ஒரே அண்ணன் ஜெகர் சார்.

கட்சியில் சேரும்போதுகூட, ’எனக்கு ராஜ்யசபா போஸ்ட் எல்லாம் வேண்டாம். சட்டமன்ற உறுப்பினராகி மக்களுக்கு நேரடியாக சேவை செய்யவே விரும்புகிறேன்’ என்றேன். நான் கேட்டபடியே, என்னை எம்.எல்.ஏவா நிறுத்தி வெற்றிபெற வைத்தார். தற்போது அமைச்சர் பதவியும் கொடுத்திருக்கிறார். அதனால், இதனை நான் தாமதமாக நினைக்கவில்லை. எம்.எல்.ஏவாக இருக்கும்போதே கொரோனா சூழலில் என் தொகுதியின் எல்லா மருத்துவமனையிலும் ஆக்சிஜன் சிலிண்டர்கள், படுக்கைகள், மருந்துகள் என என்னவெல்லாம் தேவையோ உடனுக்குடன் ஏற்பாடு செய்துகொடுத்தேன். இப்போது, அமைச்சர் பதவி மூலம் இன்னும் மக்கள் பணியை செய்வேன்”.

ஆங்கிலமும் இந்தியும் படிக்கணும்னு சொல்லியிருக்கீங்க. அதுவே, வட இந்தியர்கள் தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளை படிப்பதில்லையே… நாம ஏன் இந்தி படிக்க வேண்டும்?

“நம் தாய் மொழியைக் கற்றுக்கொள்வது ரொம்ப முக்கியம். இன்னும் பெரிய இடத்துக்கு செல்லவேண்டுமென்றால் ஆங்கிலமும் இந்தியும் கற்றுக்கொள்ளவேண்டும். சக்சஸ் ஆகணும்னு நினைத்தால் கத்துக்கலாம். பிடிக்கவில்லையென்றால் வேண்டாம். மற்ற மொழிகளைக் கற்றுக்கொள்வதன் மூலம் தன்னம்பிக்கை கிடைக்கும்.

வட மாநிலங்களில் இருந்து வருபவர்களை ’தமிழ் கத்துக்கிட்டாத்தான் வேலைத் தருவேன், தெலுங்கு கற்றுக்கொண்டால்தான் வேலை தருவேன், இல்லையென்றால் கொடுக்கமாட்டேன்’ என்று நம் மாநில அரசுகள் கண்டிப்புடன் இருந்தால் தமிழ், தெலுங்கைக் கற்றுக்கொள்வார்கள். அரசுகள் ஏன் இதனை செய்யவில்லை? இது நம் தவறுதானே? இதில் யாரைக்குறை சொல்லமுடியும்? அவர்களைப் போல நாமும் உறுதியுடன் நம் மொழியைக் கற்றால்தான் இங்கு வசிக்க முடியும்; வேலை கிடைக்கும் என்ற சூழலை உருவாக்கினால் எல்லாமே மாறிவிடும்”.

image

இந்தி இணைப்பு மொழி என்று அமித்ஷா சொன்னது குறித்து உங்கள் கருத்து?

“மத்தியில் பாஜக ஆள்கிறது என்பதால் அவர்கள் எது வேண்டுமென்றாலும் பேசலாம். ஒவ்வொரு மாநிலத்திற்கும் அவங்க மொழிதான் பெரியது. அதில் சந்தேகமில்லை. ஆனால், இந்தப் போட்டிப்போடும் உலகத்தில் நல்ல நிலமைக்கு வரவேண்டும் என்றால் ஆங்கிலம், இந்தி கற்றுக்கொள்ளவேண்டும். ஆனால், கட்டாயம் என்று சொல்லமாட்டேன். தாய்மொழியான தமிழ் படிக்கத்தெரியாது, எழுதத்தெரியாது. தெலுங்கு படிக்கத் தெரியாது, எழுதத்தெரியாது என்று பலர் இருக்கிறார்கள். நம்ம தாய்மொழி வரவில்லை என்றால்தான் அவமானப்படவேண்டும். அதுவே, ’ஆங்கிலம் தெரியாதா?’ என்பார்கள். அதற்குதான் நாம் ஃபீல் பண்ணக்கூடாது. என் பிள்ளைகளுக்கு தமிழ், தெலுங்கு இரண்டையுமே எழுதப் படிக்க கற்றுக்கொடுத்துள்ளோம்”.

சமீபத்தில் அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணைய, தமிழக முதல்வர் முன்னெடுப்பு நடத்தி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் உள்ளிட்டப் பல கட்சிகளுக்கு கடிதம் எழுதினார்.  அதற்கு உங்கள் கட்சித் தலைவரின் நிலைப்பாடு என்ன?

“ஜெகன் சார் அதிகம் பேசமாட்டார். அவரின் மக்கள்நலத் திட்டங்கள்தான் பேசும். எங்கள் அமைச்சரவையிலும் நியமிக்கப்பட்ட பதவிகளிலும்  70 சதவீதம் பட்டியலினத்தவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினருக்குத்தான் அதிகம் வாய்ப்பு கொடுத்திருக்கிறார். முதல் அமைச்சரவையின்போது 60 சதவீதம் கொடுத்திருந்தார். தற்போது, நடந்த அமைச்சரவை மாற்றத்தில் 70 சதவீதமாகக் கொடுத்து மாற்றியுள்ளார். அதேபோல மாநகராட்சி சேர்மன் பதவிகளிலும் இதையே பின்பற்றியுள்ளார். குறிப்பாக, பெண்களுக்கே அதிகப் பதவிகளைக் கொடுத்துள்ளார். அதனால், சட்டமேதை அம்பேத்கரை உண்மையாக பின்பற்றுபவர் ஜெகன் சார்தான். செயலில் சமூக நீதியைக் கடைப்பிடிப்பவர்.

பல அரசியல்வாதிகள் அம்பேத்கர் பற்றி பெருமையாக பேசுவார்கள்.  அரசியலமைப்புச் சட்டத்தைக் கொண்டாடுவார்கள். இதையெல்லாம் செய்துவிட்டு அம்பேத்கரை பின்பற்றமாட்டார்கள்.  ஆனால், அம்பேத்கரை பின்பற்றும் ஒரே ஒரு முதல்வர் ஜெகன் சார்தான். ஏனென்றால், ஆட்சிக்கு வந்த மூன்று வருடத்தில் சமூகத்தில் பின்தங்கியவர்களின் வளர்ச்சிக்காகத்தான் பாடுபடுகிறார்”. 

image

ஆனால், தமிழகம், கேரளா, தெலங்கானா முதல்வர்கள் பாஜகவை தீவிரமாக எதிர்க்கிறார்கள். அந்த அளவுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி எதிர்க்கவில்லை என்ற விமர்சனம் வருகிறதே?

“ஜெகன் சார் யாரையும் குறை சொல்லமாட்டார். முதல்வராக்கிய மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்று நினைப்பவர். சந்திரபாபு நாயுடு ஆந்திர வளங்களை சுரண்டிய ஒரு சுயலநவாதி. நாங்கள் ஆட்சி அமைக்கும்போது மாநிலம் அதள பாதாளத்தில் இருந்தது. அதனை, ஜெகன் சார் முன்னேற்றி வருகிறார். கொரோனா, மழை, வெள்ளம் என பல பிரச்சனைகள் வந்தபோதும் மக்களுக்கு எந்த கஷ்டமும் வராமல் பார்த்துக்கிட்டார். அதனால், யாரையும் பகைத்துக்கொள்ள அவருக்கு நேரம் கிடையாது. மக்களுக்கு கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றவேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக உள்ளார்.

அதோடு, மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கிறார். யாரையும் விமர்சிக்க நேரமில்லை. அதைவைத்து, அவர் பேசவில்லை. சப்போர்ட் பண்ணலை என்றெல்லாம் கூறுவது தேவையற்றது. அவர் எடுக்கும் முடிவுகள் எப்போதும் சரியாகத்தான் இருக்கும். பாஜகவுக்கு சப்போர்ட்டும் பண்ணலை. அவங்களுக்கு எதிராகவும் பேசத் தேவையில்லை. மக்களுக்காகத்தான் வேலைப் பார்ப்பார். அரசியலுக்காக யார் காலையும் பிடிக்கமாட்டார்”.

மதவெறி தாக்குதல்கள் அதிகமாகிவிட்டதே? பிரதமர் எந்த ஒரு கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட 13 கட்சிகள் இணைந்து கூட்டறிக்கையில் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ளார்கள். ஆனால், அந்தமாதிரியான சூழலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பங்கெடுக்காதது என்ன காரணம்?

”அனைவரும் அதிகாரத்தில் இருக்கும்போது என்ன பண்ணார்கள், அதிகாரத்தில் இல்லாதபோது என்ன பண்ணார்கள் என்பதை யோசித்தால் அனைத்தும் புரியும். ஜெகன் சார் அனைத்து மதத்தினருக்கும் முக்கியத்துவம் கொடுத்து சமமாகப் பார்க்கிறார். எல்லா கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களுக்கு நிதி ஒதுக்குகிறார். அவர் பேசமாட்டார். அவர் வேலைதான் பேசும். எப்போதும் மக்களுக்காக சேவை செய்பவர்கள் நிறைய பேசமாட்டார்கள். எதையும் செய்யாதவர்கள் பேசிக்கொண்டே இருப்பார்கள்”.

திராவிட மொழிக்குடும்பத்தின் மூத்த மொழிகளாக தமிழும் தெலுங்கும் உள்ளன. ஒரு பண்பாட்டு ரீதியான மரபு ரீதியான இந்தத் தொடர்ச்சியை இங்குள்ள அரசும் அங்குள்ள அரசும் மரபு ரீதியாக எப்படி கையாளவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

“இரண்டு மாநில அரசுகளும் ரத்த உறவுகள் மாதிரி இருக்கவேண்டும். நான் இரண்டு மாநிலத்தையும் சேர்ந்தவள் என்பதால் இந்த உறவை கண்டிப்பாக நல்லமுறையில் கொண்டு செல்ல முடியும் என்று நினைக்கிறேன். நான் தமிழகத்திற்கு வந்தால் ஆந்திர அமைச்சர் மாதிரி பார்ப்பதில்லை. தமிழக அமைச்சர் மாதிரியே நினைத்து வாழ்த்துகிறார்கள். என்மீது எப்போதும் தமிழக மக்களுக்கு பெரிய பாசம் இருக்கிறது. அமைச்சரானதற்கு எல்லோரும் வாழ்த்திக்கொண்டிருக்கிறார்கள். இந்த சந்தோஷத்தில் இருந்து இன்னும் மீளவில்லை”.

பான் இந்திய படங்கள் குறித்து?

“தயாரிப்பாளருக்கு இது ஆரோக்கியமான விஷயம்தானே? தியேட்டருக்கு மக்கள் வந்து படங்கள் பார்ப்பது குறைவாகிவிட்டது. இப்படி கொண்டுவந்தால்தான் தயாரிப்பாளர்களால் செலவு செய்ததை திருப்பி எடுக்க முடியும். தயாரிப்பாளர்கள் நல்லா இருந்தாதான் சினிமாத்துறை நல்லாருக்கும். அதனால், பான் இந்தியா படங்கள் வரவேற்புக்குரியதே”.

’வலிமை’, ’பீஸ்ட்’ பார்த்தீர்களா?

“இன்னும் எந்தப் படமும் பார்க்கவில்லை. முன்பு ஒவ்வொரு சனிக்கிழமையும் மகனுக்காக படம் பார்ப்பேன். தற்போது, அவனுக்குத் தேர்வுகள் இருப்பதால் படங்கள் பார்த்து ரொம்ப நாளாச்சு”.

image

உங்கள் அரசியல் பயணங்களுக்கு உங்களுடைய கணவர் எந்தளவுக்குத் துணையாக இருந்தார்?

”நான் இவ்வளவு சக்சஸ்ஃபுல்லாகவும் சந்தோஷமாகவும் இருப்பதற்கு முழுக்காரணமும் என் கணவர்தான். காதலிக்கும்போது “நீ என்ன சொன்னாலும் கேட்டுக்குவேன். உனக்கு சப்போர்ட்டிவா இருப்பேன்” என்று நிறைய பேர் சொல்வார்கள். ஆனால், திருமணமானதும் பொசஸிவ் ஆகிடுவாங்க. இவங்க மீண்டும் நடிக்கப் போனால் நம்முடன் இருக்கமாட்டார்கள், கையைவிட்டுப் போய்விடுவார்கள் என்றெல்லாம் நினைப்பார்கள். ஆனால், என் செல்வா அப்படிப்பட்டவர் கிடையாது.

காதலிக்கும்போது எப்படி இருந்தாரோ இப்போதும் அப்படியேத்தான் இருக்கிறார். அவர் வீட்டிலும் சரி, என்னிடமும் பெண்கள் என்றாலே ரொம்ப மரியாதைக் கொடுப்பார். பெரியார் கொள்கைகளைப் பின்பற்றி வருபவர். அதனால், பெண்கள் முன்னேற்றத்தில் அக்கறைக் கொண்டவர். ’பெண்களை சமூகம் மிதித்து விடுகிறது. ஆனால், மதித்து சப்போர்ட் செய்தால் திறமையை நிரூபிப்பார்கள்’ என்பதில் எப்போதும் உறுதியாக இருப்பவர். அவரை, நான் ரொம்ப லவ் பண்ண இதுதான் காரணம். அவர், பெரியார் கொள்கைகளைப் பின்பற்றியதால்தான் என்னால் அரசியலில் தொடர்ந்து இயங்க முடிந்தது; அமைச்சர் வரை சாதிக்க வைத்தது. 

நான் முன்னணி நடிகையாக இருக்கும்போதும், தயாரிப்பாளராகி கடனில் சிக்கியபோதும், தேர்தலில் நின்று இரண்டுமுறை தோற்றபோதும் நம்பிக்கையளித்து தேற்றியவர் செல்வாதான். என் எல்லா எமோஷன்களையும் அவர் பார்த்திருக்கார். நான் அமைச்சரானபோது அவரது முகத்தைப் பார்த்திருந்தால் தெரியும். பயங்கர சந்தோஷமாக இருந்தார்.  

image

எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்து பிஸியாகிவிட்டதால் பிள்ளைகளை சென்னையில்தான் படிக்க வைத்து வருகிறேன். மகள் அன்ஷுமாளிகா அமெரிக்காவில் காலேஜ் படிக்கவிருக்கிறார். மகன் கிருஷ்ண கெளசிக் வேலம்மாள் பள்ளியில் 10 வகுப்புப் படிக்கிறார். இருவரையும் செல்வாவும் என் மாமியாரும்தான் கவனித்துக்கொள்கிறார்கள். எனக்கு எப்படி சப்போர்ட்டிவாக இருக்கிறாரோ, இப்போது என் பிள்ளைகளுக்கும் இருக்கிறார். அவர்களை நான் மிஸ் செய்யாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்கிறார். அம்மா மக்கள் சேவையில் இருக்கிறார் என்று நினைக்குமளவுக்கு பக்குவமாக வளர்த்துள்ளார். பிள்ளைகளுக்கு விடுமுறை என்றால் இங்கு அழைத்து வந்துவிடுவார். எனக்கு நேரம் கிடைக்கும்போது நான் அங்கு வந்துவிடுவேன். செல்வா நல்ல கணவர்; நல்ல அப்பா. எல்லாவற்றையும் விட நல்ல மனிதர்.

ஆந்திர அரசியலைத் தேர்ந்தெடுக்கக் காரணம்?

“நான் அரசியலுக்கு வருவேன் என்று நினைத்ததே இல்லை. 1999 காலகட்டத்தில் எங்க அப்பாவின் நண்பர்தான் என்னை வற்புறுத்தி பிரச்சாரத்துக்கு அழைத்துச் சென்றார். அந்தத் தேர்தல் முழுக்க 28 நாள் ஆந்திரா முழுக்க பிரச்சாரம் செய்தேன். அப்போது, முதன்முறையாக சந்திரபாபு நாயுடு முதல்வரும் ஆனார். அதனால், அப்போதே ஆந்திர அரசியலில் வந்துவிட்டேன். ஆனால்,நான் ஜெயித்தால் எங்கு கட்சியின் முகமாக ஆகிவிடுவேனோ என்று சந்திரபாபு நாயுடுவே சதி செய்து தோற்கடித்தார்”.

உங்கள் 22 வருட அரசியல் பயணத்தில் ஒரு பெண்ணாக எதிர்கொண்ட சவால்கள் என்ன? பெண்களுக்கு சொல்ல விரும்புவது என்ன?

”அரசியல் மட்டுமல்ல. எல்லா துறையுமே பெண்களுக்கு சவாலானதுதான்.பெண் முன்னேறினாலே பலருக்கும் பிடிக்காது. சைலண்டாக ஒன்னும் தெரியாத மாதிரி நடிக்கணும். அப்பதான் சப்போர்ட் பண்ணுவாங்க. மக்களுக்கு இறங்கி உழைத்தாலோ மக்களை உண்மையாக நேசித்தாலோ பிடிக்காது. சுஷ்மா, ஜெயலலிதா, மம்தா பானர்ஜி, நிர்மலா சீதாராமன் என கஷ்டப்பட்ட எத்தனையோ பெண் தலைவர்கள் இருக்கிறார்கள். நிர்மலா சீதாராமனை பலக்கூட்டங்களில் பார்த்திருக்கிறேன். பாஜக தமிழகத்தில் வராது என்று நமக்குத் தெரியும். ஆனாலும், அவர்கள் படும் கஷ்டத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆனாலும், கட்சிக்காக உழைத்து பலர் நல்ல நிலையில் இருக்கிறார்கள். அதிகாரத்தில் இருக்கும் கட்சி என்று ஒவ்வொரு கட்சிக்கும் தாவினால் மதிப்பும் மரியாதையும் இருக்காது”.

– வினி சர்பனா

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.