இசையமைப்பாளர் இளையராஜா, மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டுப் பேசியது தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் மிகப் பெரிய விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது. புளூ கிராஃப்ட் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் நிறுவனம் வெளியிட்டிருந்த `மோடியும் அம்பேத்கரும்’ என்ற புத்தகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா எழுதியிருந்த முன்னுரையில், “பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. சமூகநீதி தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை மோடி எடுத்துவருகிறார். முஸ்லிம் பெண்களின் வாழ்வில் முத்தலாக் தடை சட்டத்தின் மூலமாகப் பிரதமர் பெரும் மாற்றத்தைச் செய்திருக்கிறார். மோடிக்கும் அம்பேத்கருக்கும் பல விஷயங்களில் ஒற்றுமை இருக்கிறது. இருவருமே ஏழ்மை, ஒடுக்குமுறைகளை அனுபவித்தவர்கள். இருவருமே இந்தியாவின் மீது பெரிய கனவுகளைக் கண்டவர்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இளையராஜா முன்னுரை எழுதிய புத்தகம்.

இளையராஜாவின் இந்த ஒப்பீட்டுக்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. குறிப்பாக ட்விட்டரில் இளையராஜாவுக்கு எதிராக பல பதிவுகள் பகிரப்பட்டன. இதையடுத்து தமிழக பா.ஜ.க சார்பில், “உண்மையைப் பேசத் தயங்கும் தமிழகத்தில், மனதில் பட்ட உண்மையை அப்படியே பேசியிருக்கிறார் இசைஞானி இளையராஜா” என்று அவருக்கு ஆதரவாக வீடியோ வெளியிடப்பட்டது.

இளையராஜாவின் கருத்து குறித்து அவரது சகோதரரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “இந்த விஷயம் குறித்து நான் இளையராஜாவிடம் பேசினேன். அதற்கு அவர், `நான் என்னுடைய கருத்தைக் கூறினேன். அதற்கு எதிராக விமர்சனங்கள் வந்தால் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அந்தக் கருத்தைத் திரும்பப் பெற முடியாது. பதவிக்காக நான் மோடியைப் புகழவில்லை. சொல்லப்போனால் எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம். நான் பா.ஜ.க-விலும் இல்லை. தனிப்பட்ட முறையில் எனக்கு மோடியைப் பிடிக்கும்; அம்பேத்கரையும் பிடிக்கும். அதனால், இருவர் குறித்து ஆராய்ந்து நான் முன்னுரையில் எழுதியிருந்தேன். என் பார்வையில் அம்பேத்கர் சொன்னதை மோடி செய்து வருகிறார்’ என்று என்னிடம் கூறினார்” என்றிருக்கிறார்.

இந்த நிலையில் பா.ஜ.க-வின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, “இளையராஜாவின் கருத்து ஒரு அரசியல் கட்சிக்கும், அதன் கூட்டணிகளுக்கும் பிடிக்கவில்லை என்பதால், இசையின் மேஸ்ட்ரோவான இளையராஜாவை அவமானப்படுத்துவதா? இளையராஜா குறித்த விமர்சனங்களில் ஜனநாயகம் இல்லை” என்று கூறியிருக்கிறார்.

இளையராஜா-கங்கை அமரன் சந்திப்பு

இந்த விவகாரம் தொடர்பாக இளையராஜாவுக்கு நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தோம், “இளையராஜா தனது சொந்தக் கருத்தைச் சொல்வதில் எப்போதும் தயக்கம் காட்டாதவர். அவருக்கு அரசியல், பதவி ஆசைகள் என எதுவும் இல்லை. ராஜ்ய சபா எம்.பி பதவிக்காகதான் இளையராஜா இப்படி எழுதியிருக்கிறார் என்பதெல்லாம் வெறும் புரளிதான். 2018-ம் ஆண்டு பத்மவிபூஷன் விருது பெற்றபோது, `மோடி தலைமையிலான மத்திய அரசு எனக்கு விருது வழங்கியதன் மூலம் தமிழகத்தையும், தமிழக மக்களையும் கௌரவித்துள்ளது’ என்று பேசியிருந்தார் இளையராஜா. எனவே, எப்போதுமே அவருக்குப் பிரதமர் மோடி மீது நன்மதிப்பு உண்டு. திடீரென்றெல்லாம் அவர் இப்படிப் பேசவில்லை” என்றனர்.

2017-ம் ஆண்டு இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன், ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் பா.ஜ.க சார்பாகப் போட்டியிட்டார். அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இளையராஜாவைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் பின்னணியில், பா.ஜ.க சில அரசியல் காய்களை நகர்த்தியிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

“தமிழ் சினிமாவில் நீண்ட காலமாகக் கோலோச்சிவரும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஒரு பிரமாண்ட பாராட்டு விழா நடத்த பா.ஜ.க மேலிடம் திட்டமிட்டுவருகிறது. இந்த விழாவை ஒரு அரசு விழா போல நடத்த வேண்டுமென பா.ஜ.க தலைவர்கள் நினைத்திருக்கிறார்கள். இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க தேசியத் தலைவர் நட்டா உள்ளிட்ட பலரும் கலந்து கொள்வதற்கான திட்டங்களும் இருப்பதாகத் தெரிகிறது. இதற்காகத்தான் கங்கை அமரன் சமீபத்தில் இளையராஜாவை நேரில் சந்தித்தார். தமிழகத்தில் பட்டியல் சமூக மக்களிடையே பா.ஜ.க-வுக்கு பெரிய செல்வாக்கு இல்லை. எனவே, இந்த விழாவின் மூலம் இளையராஜாவின் சமூக வாக்குகளை பா.ஜ.க தங்கள் பக்கம் இழுக்கலாம் என்பது கட்சி மேலிடத்தின் திட்டமாக இருக்கிறது” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

ஏ.ஆர்.ரஹ்மான் – இளையராஜா

கடந்த சில வாரங்களுக்கு முன்னர், இந்தித் திணிப்புக்கு எதிராக மறைமுகமாகக் கருத்துத் தெரிவித்திருந்தார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பா.ஜ.க ஆதரவளித்துவருவது அரசியல் வட்டாரத்தில் பல யூகங்களுக்கு வழிவகுத்திருக்கிறது!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.