ஆப்கானிஸ்தான் நாட்டின் கோஸ்ட், குனார் மாகாணங்களின் மீது பாகிஸ்தான் விமானப்படை கடந்த வெள்ளிக்கிழமை இரவு வான்வழித் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 40-க்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

பத்திரிகையாளரும், ஆப்கானிஸ்தானின் பீஸ் வாட்ச் நிறுவனத்தின் நிறுவனருமான ஹபீப் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, “பாகிஸ்தான் தனது ராணுவ விமானங்களின் மூலம் முதன்முறையாக ஆப்கானிஸ்தான் மண்ணில் குண்டுவீசி 40-க்கும் மேற்பட்ட பொதுமக்களைக் கொன்றுள்ளது. இதற்கு முன்னர் பாகிஸ்தான் தனது பினாமி படைகள்… அதாவது தாலிபன் மற்றும் முஜாகிதீன் மூலம் ஆப்கானிஸ்தான் மீது பல ஆண்டுகளாகத் தாக்குதல்கள் நடத்தி வந்துள்ளது” என்று பதிவிட்டிருக்கிறார்.

தாக்குதலில் பலியானவர்கள்

மேலும், ஹபிப் கான் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் சடலங்களின் படங்களைப் பகிர்ந்து பாகிஸ்தான் செய்த போர்க் குற்றங்கள் குறித்துக் கவனிக்குமாறு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்புக்குக் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மற்றும் குணார் மாகாணங்களில் பணிபுரியும் உள்ளூர் அதிகாரிகள் பாகிஸ்தான் படையினர் வான்வழித் தாக்குதல் நடத்தியதை நேற்றைய தினம் உறுதிப்படுத்தினர். இந்தச் சம்பவத்தின் எதிரொலியாக தாலிபன்கள், பாகிஸ்தான் தூதர் மன்சூர் அஹமத் கானை வரவழைத்து இது குறித்து பாகிஸ்தான் அரசுக்குக் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முட்டாகி மற்றும் துணை பாதுகாப்பு அமைச்சர் அல்ஹாஜ் முல்லா ஷிரின் ஆகியோர் பாகிஸ்தான் படைகளின் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்திருப்பதாக அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

இந்த நிலையில், ஆப்கன் தலைநகர் காபூலுக்கான பாகிஸ்தான் தூதர் இன்று வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்டு, அவரிடம் தாலிபன் அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பாகப் பேசியிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தான்

இந்த விவகாரம் குறித்துப் பேசிய ஆப்கானிஸ்தான் தகவல் தொடர்பு மற்றும் கலாசார துணை அமைச்சர் சபியுல்லாஹ் முஜாஹித், “பாகிஸ்தான் ஆப்கன் மக்களின் பொறுமையைச் சோதிக்கக் கூடாது, இல்லையென்றால் கடும் பின்விளைவுகளைப் பாகிஸ்தான் சந்திக்க நேரிடும். நாங்கள் இந்த பிரச்னையைப் பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க விரும்புகிறோம். இத்தகைய விரும்பத்தகாத நிகழ்வுகளால் இருநாடுகளுக்கிடையே தேவையற்ற வீண் பதற்றம் ஏற்படுகிறது” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.