தி.மு.க ஆட்சியில், சொத்துவரி உயர்வைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க., சார்பில் நேற்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. மாநிலம் முழுவதும் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தை அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் வழி நடத்தினர்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டதுக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு சேலத்தில் அ.தி.மு.க., மாநகர், புறநகர் மாவட்டத்தின் மூலம் செய்தித்தாள்கள், போஸ்டர்களில் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. அதில் எடப்பாடி பழனிசாமி சேலம் நாட்டாண்மைக் கட்டடம் அருகே நடைபெற இருக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்று கண்டன பேரூரை வழங்குவார் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் கடைசியில் சேலத்தில் நடக்க இருக்கும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளாமல் எடப்பாடி பழனிசாமி திருச்சி கிளம்பி சென்றுவிட்டார். இந்த விஷயம் சேலம் அ.தி.மு.க., தொண்டர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

எடப்பாடி பழனிசாமி, திருச்சி ஆர்ப்பாட்டத்திற்கு திடீர் விசிட் அடித்ததற்கான காரணங்களை குறித்து சேலம் அ.தி.மு.க-வினரிடையே விசாரித்தோம், “சேலத்தில் நடைபெற இருக்கும் ஆர்ப்பாட்டத்துக்கு தான் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்வதாக இருந்தது. சொந்த மாவட்டத்தில் நடைபெறுவதால் சுமார் 5,000 பேரையாவது திரட்டிட வேண்டும் என்று ஒவ்வொரு தொகுதி நிர்வாகியிடமும் பெருந்திரளாக மக்கள் கூட்டம் திரட்டிவருமாறு அறிவுருத்தப்பட்டிருந்தது.

edappadi palanisamy

ஆனால் ஆர்ப்பாட்டத்துக்கு முதல் நாள் அ.தி.மு.க- வைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கூட்டத்திற்கு பெரிய அளவில் கூட்டம் சேர்க்கவில்லை என்ற தகவல் வெளியாக, சொந்த மாவட்டத்தில், ஒரு முன்னாள் முதல்வர் தலைமையில் நடக்கவிருக்கும் கூட்டத்தில் பெரும் திரளான மக்கள் கூட்டம் இல்லையென்றால் எப்படி என்று கடுப்பாகி திருச்சிக்கு கிளம்பி போய்விட்டார் எடப்பாடி” என்று கூறினர்.

கட்சி நிர்வாகிகள் பெரிய அளவில் ஆர்வம் காட்டாதது குறித்து கேட்டபோது, “முதலமைச்சராக இருந்த வரைக்கும் யாருக்கு என்ன செஞ்சிருக்காரு… ஒன்னும் இல்ல, இவரால ஒவ்வொரு நிர்வாகியும் கடனாளியானது தான் மிச்சம். அதனால செலவு செஞ்சி மக்கள அழைச்சிட்டு வர அளவுக்கு பணம் இல்ல. அதும் இல்லாம சசிகலா அடுத்த வாரம் சேலம் வர இருக்குறதனால, நிர்வாகிகள் குழப்பத்தில் இருக்கிறாங்க. கட்சி வருங்காலத்தில் யார் கட்டுப்பாட்டில் இருக்கும் என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. இந்த குழப்பங்களினால் அதிமுக ஆர்ப்பாட்டத்தில் சேலம் நிர்வாகிகள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை” என்கிறார்கள்.

Sasikala

மேலும் நேற்று நடந்த கூட்டாமானது சேலத்தில் அ.தி.மு.க., வரலாற்றில் இந்த அளவுக்கு குறைந்த கூட்டமாக ஒரு போதும் இருந்தது கிடையாது என்கிறார்கள். தொகுதிக்கு 500 பேர்னு வச்சிக்கிட்டா கூட எங்கயோ மக்கள் கூட்டம் போயிருக்கும். இத்தனைக்கும் சேலம் மாவட்டத்தில் பெருபாலான சட்டமன்ற தொகுதிகள் அதிமுக வசம் தான். ஆனா மாநகர், மாவட்ட ஆர்ப்பாட்டத்துக்கு இப்படி கட்சி நிர்வாகிகளே ஆர்வம் காட்டாத சம்பவம் கட்சிகுள்ளேயும் பெரும் பேச்சாக இருக்கிறது.

இதனிடையே, `எல்லாத்துக்கும் காரணம் சசிகலா வருகைதான்’ என்று அ.தி.மு.க., ரர-க்கள் பழனிசாமியிடம் கூறி ஆதங்கபடுகின்றதாக கூறப்படுகிறது.

இதனிடையே, பழனிசாமி தரப்பில் பேசிய போது, `எடப்பாடி பழனிசாமி திருச்சி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வது முன்னரே தீர்மானம் செய்யப்பட்டது தான். மாவட்ட அளவிலான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளும் அளவில் மக்கள் கலந்து கொண்டனர். பல நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி திருச்சி சென்றதால், அங்கு கலந்து கொள்ள சென்றனர். மற்றப்படி மாவட்டத்தில் எந்த குழப்பமும் இல்லை’ என்கிறார்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.