பொதுமக்கள் இணையதளத்தில் கடன் வாங்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் வலியுறுத்தியுள்ளார்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், சைபர் கிரைம் வழக்குகள் தொடர்பாகவும், இணையதளத்தில் கடன் வாங்குவது குறித்தும் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சைபர் கிரைம் பண மோசடி தொடர்பாக 2021-ம் ஆண்டு, 21 வழக்குகளும், 2022.ம் ஆண்டு துவங்கியது முதல் தற்போது வரை 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை புகாரின் பேரில் 18 லட்சத்து 57 ஆயிரத்து 787 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களிடம் திரும்ப கொடுக்கப்பட்டுள்ளது.
பணமோசடி சம்பந்தப்பட்ட புகார்களில் 40 லட்சத்து 81 ஆயிரத்து 113 ரூபாய் பணம் முடக்கம் செய்யப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

image

புகார்கள் துரிதமாக வரும்பொழுது குற்றவாளிகள் விரைவாக கைது செய்ய ஏதுவாக இருக்கும். பொதுமக்கள் பணத்தை இழந்த அந்த நொடியே
1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு, முதலில் தங்களின் தகவலை தெரிவித்து, மேற்கொண்டு பணம் போகாதபடி பத்திரப்படுத்தலாம். பின்னர் சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம்.

நகை பறிப்பு குற்றவாளிகளை விரைந்து பிடிக்க மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து முன்னாள் குற்றவாளிகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சைபர் குற்றத்தில் படித்தவர்கள் அதிகளவில் ஈடுபடுகின்றனர். படிக்காத பொதுமக்கள் சமீப காலத்தில் விழிப்புணர்வு காரணமாக ஓடிபிகளை யாரிடமும் தெரிவிப்பதில்லை.

image

ஆனால் படித்தவர்கள் அதிகளவில் ஏமாறுவதற்கு காரணம் இணையதள கடன். முகவரி இல்லாதவர்களிடம் கடனை வாங்கிக்கொண்டு சிக்கலில் சிக்கிக் கொள்கின்றனர். பொதுமக்கள் இணையதளத்தில் கடன் வாங்கும்போது எச்சரிக்கையாக வேண்டும். கடன் கொடுக்கும் இணையதள ஆப்புகள் தொடர்புகள், கேலரி உள்ளிட்ட தகவல்களை எடுத்துக்கொண்டு மிரட்டுகின்றனர். இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இரண்டு வருடங்களில் சைபர் கிரைம் புகாரில் 25 வழக்குகள் பதிவு செய்துள்ளோம். சைபர் குற்றங்கள் புதுப்புது விதமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. சைபர் குற்றவாளிகள் பொதுமக்களுக்கும் காவல் துறைக்கும் இடையே உள்ள இடைவெளியை பயன்படுத்தி குற்றத்தை தொடர்கின்றனர்.

இணையதளத்தில் கடன் வாங்கும் பொழுது வாங்குவது சரியான இடமா? சரியான நபர்களிடமா? என்பதை பொதுமக்கள் முடிவு செய்ய வேண்டும். கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை சார்பில் பள்ளிகள் கல்லூரிகளில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மேலும் போலீசார் வாகன சோதனை நடத்தும் இடங்களில் பிரச்சினைகள் வருவதை தவிர்க்க கோவை மாவட்ட காவல்துறை சார்பில் சாட் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

image

பொதுமக்களுக்கு தங்களின் மீது என்ன வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது என்பது இதுவரை தெரியாமல் இருந்தது. தற்போது அதை தெரிந்துகொள்ள வாகன சோதனை நடைபெறும் இடங்களில் வாகனத் தணிக்கை செய்யும் அதிகாரிகள் இந்த சாட்டை வைத்திருப்பர். இதில் வழக்கு அபராத தொகை போன்ற முழு விவரம் இருக்கும்.

எளிமையாக அபராதம் விதிக்கவும் வசதிகள் உள்ளது. மேலும் கோவை மாவட்டத்தில் குடிபோதை வழக்குகள் தொடர்ந்து மூன்று வழக்குகள் மேல் பதிவு செய்யப்பட்டால் ஐபிசி வழக்குகள் பதிவு செய்யப்படும்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.