கடந்த 2012-ம் ஆண்டில் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் `கோஸ்ட்’ எனும் சொகுசு காரை வாங்கும்போது, பின்னாளில் அது பெரிய பிரச்னையாக வெடிக்கும் என்பதை விஜய் நிச்சயமாக நினைத்திருக்க மாட்டார். ஏனெனில், அவர் இந்தக் காரை வாங்கி பல ஆண்டுகள் ஆன பிறகும், அதற்கான நுழைவு வரி செலுத்துவதில் இருக்கும் விவகாரம் பூதாகரமாகி, இன்றும் துரத்திக்கொண்டே இருக்கிறது. பல வழக்குகள், பல்வேறு தீர்ப்புகள் என இந்த விவகாரம் இன்னும் நீதிமன்றத்திலேயே சுற்றிக்கொண்டிருக்கிறது.

ரோல்ஸ் ராய்ஸ் காருக்காக இறக்குமதி வரியாக ரூ.1.88 கோடி செலுத்திய பிறகும், `தமிழக அரசுக்கு கட்ட வேண்டிய நுழைவு வரியைத் தனியாகச் செலுத்த முடியாது’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் 2012-ம் ஆண்டே விஜய் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு நீண்டகாலமாக நிலுவையில் இருந்தது.

தீர்ப்பு 1: 20% நுழைவு வரி!

ரோல்ஸ் ராய்ஸ்

இதற்கு இடைப்பட்ட காலத்தில் விஜய் தரப்புக்கு சாதகமாக வழங்கப்பட்ட தீர்ப்பில், `நுழைவு வரியில் 20% செலுத்திவிட்டு காரை பயன்படுத்துங்கள்’ என்று சொல்லப்பட்டிருந்தது. அந்தத் தீர்ப்பை அவர் அப்படியே ஃபாலோ செய்து, இன்னும் சில வரிகளையும் கட்டிவிட்டு காரை இதுவரை பயன்படுத்தி வந்திருக்கிறார். ஆனால், சில மாதங்களுக்கு முன்னர் முழுமையான நுழைவு வரியை விஜய் கட்டியே ஆக வேண்டும் எனத் தமிழக அரசு முரண்டு பிடிக்க, மீண்டும் நீதிமன்ற படியேறியது வழக்கு.

தீர்ப்பு 2: வழக்கு தள்ளுபடி!

அந்த நேரத்தில்தான், விஜய்யின் மேல்முறையீட்டு மனுவையும், வழக்கையும் தள்ளுபடி செய்ததுடன், “சமூக நீதிக்காகப் பாடுபடுவதாக சினிமாவில் பிரதிபலிக்கும் நடிகர்கள், வரி விலக்கு கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது. வரி என்பது நன்கொடையல்ல… கட்டாயப் பங்களிப்பு” என்று கடுமையாகச் சாடிய நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், இரண்டு வார காலத்துக்குள் முழுமையான நுழைவு வரியை விஜய் கட்ட வேண்டும் என்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமாக முதல்வரின் பொது நிவாரண நிதிக்குச் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.

சென்னை உயர் நீதிமன்றம்

இதற்குப் பிறகுதான், ஒன்பது ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் இந்த வழக்கு, மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்தது. விஜய்யின் நடவடிக்கைகளை எதிர்த்தும் ஆமோதித்தும் பல கருத்துகள் விவாதிக்கப்பட்டன.

தீர்ப்பு 3: எதிர்மறை கருத்துகள் நீக்கம்!

சட்டம்

“நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் சொன்ன கருத்துகளைத் திரும்பப் பெற வேண்டும். அபராதமாகக் கட்டச் சொல்லும் ஒரு லட்சம் ரூபாயைக் கட்ட முடியாது”, என விஜய் தரப்பு மேலும் ஒரு வழக்கை தாக்கல் செய்தது. அந்த மனுத்தாக்கலில், “இறக்குமதி காருக்கு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் தனி நீதிபதி தெரிவித்த கருத்துகள் என்னைப் புண்படுத்தின. கஷ்டப்பட்டு உழைத்து கார் வாங்கப்பட்ட நிலையில், அதை நீதிபதி விமர்சித்திருப்பது தேவையற்றது. வழக்கு விவரங்களில் தொழிலைக் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. என்னை தேச விரோதியாக விமர்சித்து கருத்து கூறியதும் தேவையற்றது” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அவர் குறித்த எதிர்மறை கருத்துகளை நீக்க கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, ஹேமலதா ஆகஸ்ட் 27-ல் அபராத தொகை செலுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்கள். மேலும், நுழைவு வரி ரூ.32,30,000-ஐ கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி செலுத்தப்பட்டுவிட்டது என விஜய் தரப்பில் சொல்லப்பட்டிருந்தது. எதிர்மறைக் கருத்துகளை நீக்கக் கோரிய வழக்கு ஜனவரி 25-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, முகமது சபீக் அமர்வு தனி நீதிபதி கூறிய கருத்துகளை நீக்குமாறு உத்தரவிட்டது. அதன் படி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விஜய் பற்றி சொன்ன கருத்துகளும் நீக்கப்பட்டன.

vijay

ஆனால், அபராத தொகை செலுத்துவதற்கு விஜய் முன்வரவில்லை. அதைத் தள்ளுபடி செய்யச் சொல்லி போட்ட வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கை எதிர்த்து தமிழக அரசு மீண்டும் ஒரு வழக்கு போட்டு, விஜய்யின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

தீர்ப்பு 4-க்காக வெயிட்டிங்..!

விஜய் கோடி கோடியாய் சம்பாதிப்பதால், வரி விலக்கு கேட்டு விண்ணப்பிக்கக் கூடாது என்று சொல்வது எந்த விதத்தியில் நியாயம் என அவருடைய ஆதரவாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இறக்குமதி செய்து கார் வாங்கியதும் நுழைவு வரி தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது 2000-ம் ஆண்டுகளில் இருந்தே வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. விஜய் மட்டுமல்ல 2010-ல் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கார்களை இந்தியாவில் வாங்கியவர்கள் பலருமே நீதிமன்றத்தில் கார் வாங்கியதும் `நுழைவு வரியாக இவ்வளவு பெரிய தொகை கட்ட முடியாது’ என வழக்கு தொடுப்பது ஒரு நடைமுறையாகவே இருந்து வந்திருக்கிறது.

`நுழைவு வரி கட்டினால்தான் ரெஜிஸ்ட்ரேஷன் செய்ய முடியும் என்பதால் இப்படி ஒரு வழக்கை தொடுப்பார்கள். நீதிமன்றம் அப்போதைக்கு குறைந்தபட்ச வரியைக் கட்டச்சொல்லி, கார்களைப் பதிவு செய்ய அனுமதியளிக்கும். வழக்கு தொடர்ந்து நடக்கும். விஜய் வழக்கும் அது போல ஒன்றுதான் என்பது விஜய் தரப்பு ஆதரவாளர்களின் வாதம்.

இப்போது விஜய் முழுமையாக அனைத்து வரியையும் செலுத்திவிட்டார். தேவையில்லாத கருத்துகள் நீக்கப்பட்டது போல, ஒரு லட்சம் அபராதம் என்கிற தீர்ப்பும் ரத்து செய்யப்பட வேண்டிய ஒன்றுதான்” என்கின்றனர் விஜய்யின் ஆதரவாளர்கள். அதனால் இந்த வழக்கில் என்ன தீர்ப்பு வரப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சிக்கல் எங்கே இருக்கிறது?

மோட்டார் வாகனச் சட்டம்

ஒரு பிரபல நடிகர் என்பதால், இந்த நுழைவு வரி விவகாரம் மிகப்பெரிய ஒரு விஷயமாகப் பேசப்படுகிறது. இதே போல பலரும் ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கி, நுழைவு வரி கட்டாமல் அவர்களுடைய வழக்கும் நிலுவையில் இருக்கிறதுதானே? இந்த சிக்கல்களுக்கு என்ன காரணம்?

ஆராய்ந்தால், அது அரசின் திட்டங்களில்தான் என்பது தெள்ளத் தெளிவாகப் புரியவரும். `ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’, `ஒரே நாடு; ஒரே பத்திரப் பதிவு’, `ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது பற்றியெல்லாம் பேசும் அரசாங்கம், வாகன பதிவுச் சட்டத்தில் `ஒரே நாடு ஒரே வரி’ என்கிற விஷயத்தை எப்போது கையிலெடுக்கும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஒரு சொகுசு காருக்கு கோடிக்கணக்கில் இறக்குமதி வரியையும் கட்டி விட்டு, சில லட்சங்களில் மாநிலங்களுக்கென்று நுழைவு வரியையும் தனியாகக் கட்டச் சொல்வது நியாயமில்லை என்பதே இத்துறை சார்ந்தவர்களின் வாதமாக இருக்கிறது.

விஜய்

முதலில் அரசு தனது வரி சட்டங்களில் உள்ள இடியாப்ப முடிச்சுகளை அவிழ்க்க வேண்டும். அதற்குப் பிறகு, வரி விலக்கு கேட்டு யார் தாக்கல் செய்தாலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதுதான் நியாயமாக இருக்கும். இந்தச் சிக்கல்கள் சொகுசு கார்களுக்கான வரி விதிப்பில் மட்டுமல்ல, இன்னும் பல்வேறு துறை சார்ந்த வரி செலுத்தும் விஷயங்களிலும் இருக்கிறது. அந்தந்த துறை சார்ந்தவர்கள் அவ்வப்போது வரி விலக்கு கேட்டு வழக்கு தொடுப்பதும், அதற்கு அரசு தரப்பில் எதிர் வழக்குகள் போடப்படுவதும், ஒரு சில நேரங்களில் தொழில்துறையினருக்கு சாதகமான தீர்ப்புகள் வருவதும் வாடிக்கையானதுதான்.

அதே நேரத்தில் அரசுக்கு முதல் வருமானம் என்றால், அது வரி வருமானம்தான். அந்தப் பணத்தைக் கொண்டுதான் நாட்டின் நலத்திட்டங்களுக்கான நிதியை அரசுகள் ஒதுக்குகின்றன. அப்படி பார்க்கும்போது உண்மையாக வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதில் தவறில்லை. நியாயமான வரி விலக்கை கேட்பவர்களுக்கு அதில் என்ன சலுகைகளை வழங்க முடியும் என்பதைப் பார்த்து அரசு செய்து கொடுப்பதும் நியாயமே!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.