மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவாலங்காடு கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. ஆனால், இந்தக் கல்லூரிக்கென தனியாக இடம் ஒதுக்கப்படாததால் மாதிரிமங்கலம் கிராம சமுதாயக் கூடம் கட்டடத்தில் கல்லூரி தொடங்கப்பட்டது. இந்தக் கல்லூரியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

சமுதாயக் கூடத்தில் அரசு கல்லூரி

கல்லூரி இயங்கும் கட்டடத்தில் மாணவர்கள் அமர்ந்து பயில்வதற்கு வகுப்பறைகள் போதிய அளவில் இல்லாததால், மாணவர்கள் இட நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர். மேலும், அத்தியாவசியத் தேவையான கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரிவர செய்து தரப்படாததால் மாணவர்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர், உயர்கல்வித் துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நிரந்தர வகுப்பறை கட்டடங்களும், அடிப்படை வசதிகளும் சரிவர செய்து தர எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது

இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் இன்று (16.03.2022)  காலை கல்லூரி வகுப்புகளைப்  புறக்கணித்து இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் தலைமையில் மயிலாடுதுறை – கும்பகோணம் சாலையில் திருவாலங்காடு கிராமத்தில் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மாணவர்கள் போராட்டம்

தகவலறிந்த குத்தாலம் தாசில்தார் பிரான்ஸ்வா, போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதி அளித்ததன் பேரில் தற்காலிகமாக சாலை மறியல் போராட்டத்தை மாணவர்கள் கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.