“பேரறிவாளனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதால், ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள மற்றவர்களுக்கும் பிணை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது” என, பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் பிரபு தெரிவித்துள்ளார். 1991 ஜூன் மாதம், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைக்கு சென்ற பேரறிவாளனுக்கு, 30-க்கும் மேற்பட்ட வருட சிறைதண்டனைக்குப்பிறகு முதன்முறையாக ஜாமீன் வழங்கி இன்று உத்தரவிட்டிருந்தது உச்சநீதிமன்றம்.

உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பிலிருந்து கருத்துகள் பதிவாகிவரும் நிலையில், இதுகுறித்து பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் பிரபு புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அவர் பேசுகையில், “இந்த வழக்கு, பேரறிவாளனின் விடுதலைக்காக தொடுக்கப்பட்டிருந்த வழக்காகும். ஆகவே நீதிமன்றம் சந்தித்த வேறு சில வழக்குகளின் தீர்ப்புகளை சுட்டிக்காட்டி, பேரறிவாளனுக்கு விடுதலை வழங்க மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் கடுமையான எதிர்ப்பை பதிவுசெய்தார். குறிப்பாக பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றக்கூட மத்திய அரசுக்கே அனுமதி இருப்பதாகவும், இவ்வழக்கு தேசிய பாதுகாப்பு தொடர்பானது என்பதால் மாநில அரசுக்கு இதில் தொடர்பில்லை என்றும் வாதிட்டப்பட்டது.

image

அவை அனைத்தையும் முழுமையாக கேட்டபின்னர், எங்கள் தரப்பில் `இந்த வழக்கில் முன்மொழிய மாநில அரசுக்கு அனுமதியுள்ளது. அதுதொடர்பான உத்தரவே நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுவிட்டது. பேரறிவாளன் 31 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தபோதிலும், அவர்மீது குற்றச்செயல் தொடர்பான எவ்வித வழக்கும் இல்லை. பரோலில் அவர் வெளிவந்த நேரத்திலும், எவ்வித மோசமான செயலிலும் அவர் ஈடுபடவில்லை. இதுபோன்ற அவரது நற்பண்புகளை கணக்கில் கொண்டு, அவருக்கு விடுதலை வழங்கலாம்’ என வாதிட்டோம். இருதரப்பையும் கேட்டபிறகு, உச்சநீதிமன்றம் பேரறிவாளனுக்கு பிணை தருவதற்கு முடிவுசெய்தது.

இதற்கிடையில் தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞரும், `இந்த நாட்டின் தேசப்பிதா என சொல்லப்படும் மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கொலைகுற்றத்தில் கைதான கோபால் கோட்சேவே (நாதுராம் கோட்சேவின் சகோதரர்), 14 ஆண்டுகளில் வெளியே வந்துவிட்டார். ஆனால் இவர்கள் 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலேயே இருக்கிறார்கள். முன்னாள் பிரதமரின் வழக்கு என்பதற்காக மட்டுமே, இவர்களை இந்தளவுக்கு பலிகொடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை. இவ்விஷயத்தில் மாநில அரசின் தீர்மானத்தையே கணக்கில் கொள்ள வேண்டும்’ என்று கூறினார்.

image

இவை அனைத்தையும் கேட்டபிறகு, உச்சநீதிமன்றம் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பை வழங்கியது. விடுதலை வழங்குவது குறித்துதான் வழக்கு என்றபோதிலும்கூட, விடுதலை வழங்குவதில் ஆளுநர் – குடியரசு தலைவர் என பலரின் முடிவுக்காக காத்திருக்க வேண்டியுள்ளதாலும்; அவர்கள் இதை தள்ளிவைத்துக்கொண்டே இருப்பதாலும் இப்போது பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஜாமின் இல்லாமல், பரோல் வழங்கினால் அவருக்கு அதிக கெடுபிடிகள் இருப்பதை கணக்கில்கொண்டு, இந்த ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மாதத்தில் ஒருநாள், மீண்டும் விடுதலை வழக்கு விசாரணைக்கு வருமென சொல்லப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய இன்னபிற 6 பேரும், தனித்தனியாக மனு செய்தால் அவர்களுக்கும் பிணை கிடைக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் அவர்கள் மீதும் எவ்வித குற்றச்சாட்டுகளும் இல்லை. கடந்த 1991 ஜூன் முதல் இவர்கள் அனைவரின் சட்டபோராட்டமும் ஒவ்வொரு கட்டமாக நகர்ந்துவந்திருக்கிறது. இந்த 31 வருடங்களில், இந்த ஏழு பேருக்கும் ஒரு சலுகையுமே கொடுக்கப்படவில்லை. இப்போதுதான் முதல் முறையாக ஜாமீன் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இப்போதுதான் பாதி வழியை நாங்கள் தாண்டியுள்ளோம். அனைவருக்கும் முழுமையான விடுதலை கிடைக்கும்போதுதான், இந்த வழக்கு முடிவுக்கு வரும். அந்த நாளும் வருமென எதிர்ப்பார்க்கிறோம்” என்றார்.

image

தொடர்ந்து புதிய தலைமுறையிடம் பேசிய பேரறிவாளன் தரப்பு மற்றொரு வழக்கறிஞர் சிவக்குமார், “விரைவில் பேரறிவாளனுக்கு நீதிமன்றம் விடுதலை வழங்கக்கூடும். அதற்குமுன் முதற்கட்டமாக முதலில் அவருக்கு ஜாமீன் வழங்கிவிடலாம் என்றுதான் நாங்களும் வாதிட்டோம். நீதிமன்றமும் அதை முழுமையாக ஏற்றது. இந்த எழுவர் விடுதலையில் ஆளுநரோ, குடியரசு தலைவரோ முடிவு எடுக்கும்வரையில், பேரறிவாளன் ஜாமீனில் சில நிபந்தணைகளுடன் வெளியே இருக்கலாம் என்பதையே இந்த தீர்ப்பு கூறியுள்ளது.

இது பேரறிவாளன் வழக்கு மட்டுமல்ல. `ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றிக் கொள்ளலாம்’ என்ற மாநில அரசின் அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கான வழக்கும்தான். அந்தவகையில் இந்த தீர்ப்பின்மூலம் மாநில அரசு தீர்மானம் நிறைவேற்ற எல்லா அதிகாரமும் உள்ளதென உறுதியாகியுள்ளது. ” என்றுள்ளது.

சமீபத்திய செய்தி: 30 வருட சிறைவாசத்தில் முதன்முறையாக பேரறிவாளனுக்கு ஜாமீன் – உச்சநீதிமன்றம் உத்தரவு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.