உக்ரைன் நாட்டின் மீது உக்கிரமாக படையெடுத்து போரிட்டு வருகிறது ரஷ்யா. இந்த நிலையில், போரை நிறுத்தும்படி பல்வேறு உலக நாடுகள் ரஷ்யாவை கேட்டுக் கொண்டன. தொடர்ந்து அந்த நாடுகள் கண்டனங்களும் தெரிவித்தன. அதோடு பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் தங்களது சேவையை ரஷ்யாவுக்கு வழங்கமால் நிறுத்திக் கொண்டன. இதில் ரஷ்யாவுடன் பல ஆண்டுகளாக பனிப்போரில் ஈடுபட்டு வரும் அமெரிக்காவும் ஒன்று. இந்நிலையில் தங்களது தரப்பில் உலக நாடுகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் வகையில் ஒரு அறிவிப்பை ரஷ்யா கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது.

image

அதாவது ரஷ்யாவின் Propulsion சிஸ்டங்களின் உதவியுடன்தான் சர்வதேச விண்வெளி நிலையத்தின் இயக்கம் அமைந்துள்ளது என்றும். அதை நாங்கள் நிறுத்திக் கொண்டால் வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ள 420 டன் எடை கொண்ட சர்வதேச விண்வெளி நிலையம் பூமியில் ஐரோப்பா, சீனா, இந்தியா அல்லது அமெரிக்காவின் மீது விழும் என ரஷ்ய விண்வெளி முகமையின் இயக்குனர் ரோஸ்கோஸ்மோஸ் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். அதனால் இப்போது ரஷ்யா – உக்ரைன் போர் விவகாரம் பூமியை கடந்து விண்வெளி வரை சென்றுள்ளது. இது என்னவோ நம் ஊர் சினிமாக்களில் புராண கதைகளை (Mythology) அடிப்படையாக கொண்டு அமைக்கப்படும் திரைக்கதைகளில் நாயகனும், வில்லன் தரப்பும் பூலோகம், விண்ணுலகம் மற்றும் பாதாள லோகம் என மாறி மாறி சகலத்திலும் சண்டை போடுவதை போலவே உள்ளது.

image

உலக நாடுகளுடன் விண்வெளி சார்ந்த பணிகளில் உறவை முறித்துக் கொள்ள முடிவு?

ஐரோப்பிய நாடுகளுடனான விண்வெளி உறவை நிறுத்திக் கொள்வதாகவும் ரோஸ்கோஸ்மோஸ் தெரிவித்துள்ளார். அதே போல வெள்ளி கோளுக்கு வரும் 2029 வாக்கில் அமெரிக்காவின் நாசாவுடன் இணைந்து Venera-D என்ற மிஷனை முன்னெடுத்திருந்தது ரஷ்யா. அது இப்போது அப்படியே கைவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் பிரிட்டன் நாட்டு அரசுக்கும் சில டிமாண்டை ரஷ்யா தரப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

உலக அளவில் விண்வெளி சார்ந்த பல்வேறு பணிகளுக்கு ரஷ்யாவின் Soyuz ராக்கெட்டுகள் தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 1966 முதல் இன்று வரை சுமார் 1900-க்கும் மேற்பட்ட முறை இந்த Soyuz குடும்ப ராக்கெட்டுகள் அந்த பணிக்காக ஏவப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டுகளை கொண்டுதான் OneWeb-இன் சேட்டிலைட்கள் பூமியின் தாழ்வான வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது. தற்போது ரஷ்யாவின் முடிவினால் ஒன்வெப் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் எழுந்துள்ளது. அமெரிக்காவுக்கும் இதே சிக்கல் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படியாக சர்வதேச அளவில் விண்வெளி சார்ந்த பங்களிப்பு மற்றும் சப்ளையை நிறுத்திக் கொள்ள உள்ளதாக அச்சுறுத்தி வருகிறது ரஷ்யா.  

image

சர்வதேச விண்வெளி நிலையம்! 

பூமிக்கு மேலே சுமார் 250 மைல் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது சர்வதேச விண்வெளி நிலையம். பகைமை இருந்தாலும் அதை கண்டும் காணாமல் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூட்டாக இணைந்து பணி செய்யும் ஒரே இடம். கடந்த 1998 முதல் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் 16 நாடுகள் கூட்டாக இங்கு விண்வெளி சார்ந்த ஆராய்ச்சி பணிகளை அங்கு மேற்கொண்டு வருகின்றன. 

பொது வெளியில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு இடையே கசப்பான உறவு நீடித்து வந்தாலும் இந்த சர்வதேச விண்வெளி நிலையத்தில் இரு நாடுகளும் கூட்டாக வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது அதில் தான் தனது தலையீட்டை முறித்துக் கொள்ள ரஷ்யா முனைந்துள்ளது. 

சுமார் பல கோடி பொருட்செலவில் இந்த ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. ரஷ்யா தற்போது அதிலிருந்து பின்வாங்கினால் ஆய்வு பணிகள் மற்றும் இதுவரையிலான செலவும் விரயமாகும்.  

image

சொந்தமாக  விண்வெளி நிலையத்தை நிறுவ திட்டமிடும் ரஷ்யா! 

உலகில் வல்லமை பெற்ற முதல் நிலை நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று. அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே தான் ‘ஸ்பேஸ் ரேஸ்’. இதுநாள் வரை அது ஆரோக்கியமான போட்டியாகவே அது இருந்து வருகிறது. ஆனால் இப்போது அதன் முகம் மெல்லமாக மாறத் தொடங்கியுள்ளது என்றும் சொல்லலாம். இத்தகைய சூழலில் கடந்த 2021 வாக்கில் தங்களுக்கென சொந்தமாக விண்வெளி நிலையத்தை நிறுவ ரஷ்யா திட்டமிட்டிருந்தது. இதை ரஷ்ய நாட்டின் மத்திய விண்வெளி நிறுவனம் அப்போது சொல்லியிருந்தது. 

“எங்களது திட்டத்தின்படி அனைத்தும் சரியாக நடந்து அதிபர் புதின் அவர்களும் இதற்கு பச்சைக்கொடி காட்டினால் 2030 வாக்கில் புவி வட்டப்பாதையில் எங்களுக்கென ஒரு விண்வெளி நிலையம் நிறுவப்படும்” என அப்போது உறுதியாக தெரிவித்திருந்தது அந்நிறுவனம். 

image

விண்வெளி பாதுகாப்பை அச்சுறுத்தம் ரஷ்யாவின் DA-ASAT சோதனை!

ஒவ்வொரு நாடும் தங்களது பாதுகாப்பிற்காக ஏவுகணைகளை உருவாக்கி வைத்துள்ளன. இந்த ஏவுகணைகள் நிலம், நீர் மற்றும் ஆகாயம் மாதிரியான இலக்குகளை தான் தாக்கக்கூடும். இத்தகைய சூழலில் ரஷ்யா கடந்த 2021 நவம்பர் வாக்கில் DA-ASAT என்ற ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்திருந்தது. அதோடு அந்த சோதனை வெள்ளோட்டத்தால் ரஷ்யா உலக நாடுகளின் எதிர்ப்பையும் சம்பாதித்திருந்தது. 

செயற்கைக்கோள்களை தகர்க்கக் கூடிய ஏவுகணையான ஆண்டி சேட்டிலைட் மிசைல் சோதனையை தான் அப்போது ரஷ்யா மேற்கொண்டது. செயலிழந்து போன தங்களது சொந்த செயற்கைக்கோளை ரஷ்யா அந்த சோதனையில் தகர்த்ததாக சொல்லப்பட்டது. அதை பார்த்த உலக நாடுகள் தங்களது நாடுகளின் செயற்கைக்கோளுக்கு ஆபத்து ஏற்படும் என சொல்லி அதனை வன்மையாக கண்டித்திருந்தன. அதனால் இந்த ஆயுதங்களை கொண்டு விண்வெளியில் யுத்தம் மூளும் என்றும் சொல்லப்பட்டது. அதோடு இது விண்வெளி பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்றும் வர்ணிக்கப்பட்டது. 

image

அமெரிக்கா, சீனா மாதிரியான நாடுகளும் இதே ஆண்டி சேட்டிலைட் மிசைல் சோதனைகளை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விண்வெளியில் கழிவுகள் அதிகம் இருப்பதாகவும் ஆய்வறிஞர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

இப்போது ரஷ்யா பூமியில் உக்ரைன் உடன் யுத்தம் புரிந்து வருகிறது. ஆனால் மறைமுகமாக தன் வசமுள்ள தொழில்நுட்ப வல்லமையை கொண்டு உலக நாடுகளை அச்சுறுத்துவதோடு விண்வெளியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்த முயல்கிறது.  

வரும் நாட்களில் தேவை இருந்தால் விண்வெளியில் மற்ற நாடுகளுடன் போரிட வாய்ப்பு உள்ளதாகவே தெரிகிறது. அதனால் பாதிப்பு எந்த நாட்டுக்கு என்பதை பார்ப்பதை விட ஒட்டுமொத்தமாக அது மனித குலத்தையே பாதிக்கும். 

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரில் விண்வெளி ஆய்வுகள் மற்றும் சாட்டிலைட்கள் பெருமளவில் உதவி வருகின்றன. கடந்த காலங்களில் ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே கசப்புகள் இருந்த போதிலும் உலக நன்மைக்காக சில முடிவுகளை இருநாடுகளும் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அது போல உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் முடிவுக்கு வந்தால் பூமியிலும், விண்வெளியிலும் அமைதி திரும்பும் என நம்புவோம். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.