கட்சியில் களப்பணி; சமூக ஆதரவு – வேலூர் மேயர், துணை மேயர் பின்னணி!

மேயர், துணை மேயர் பதவிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை தி.மு.க தலைமை இன்று வெளியிட்டிருக்கிறது. வேலூர் மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக சுஜாதாவும், துணை மேயர் வேட்பாளராக சுனில்குமாரும் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

யார் இவர்கள்? இவர்களின் பின்னணி என்னவென்று பார்க்கலாம்!

மேயர்!

31-வது வார்டில் வெற்றி பெற்ற சுஜாதா, தி.மு.க-வில் வேலூர் மாநகர மகளிரணி அமைப்பாளராக கட்சிப் பதவி வகிக்கிறார். எம்.ஏ., பி.எட் படித்தவர் என்பது அவர் கிராப்பை உயர்த்திக் காட்டுகிறது. முதலியார் சமூகத்தைச் சேர்ந்த சுஜாதாவை ‘மேயர்’ வேட்பாளராக தலைமையிடத்தில் முன்மொழிந்ததே இரண்டு ஆளுமைகள்தான். ஒருவர் மாவட்டச் செயலாளரும் அணைக்கட்டுத் தொகுதி எம்.எல்.ஏ-வுமான நந்தகுமார். மற்றொருவர் வேலூர் எம்.எல்.ஏ கார்த்திகேயன். வேலூர் எம்.எல்.ஏ கார்த்திகேயனும், மேயர் வேட்பாளர் சுஜாதாவும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுஜாதா

2001-ல் திமுக-வில் அடிப்படை உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்ட சுஜாதாவுக்கு 10 ஆண்டுகள் கழித்து, 2011-ல் மாநகர மகளிரணி அமைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை இயக்கத்துக்கான பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் சமயங்களில் பெண்களைத் திரட்டி வாக்குச் சேகரிப்பது, தி.மு.க-வின் கொள்கைகளை வீதி, வீதியாகக் கொண்டு சென்று வீடுதோறும் சேர்ப்பது போன்ற செயல்களிலும் தீவிரம் காட்டியதால் சுஜாதா ‘மேயர்’ பதவிக்குப் பொறுத்தமானவர் என்ற முடிவை எடுத்திருக்கிறதாம் தி.மு.க தலைமை.

வேலூர் மாநகராட்சி

துணை மேயர்!

8-வது வார்டில் போட்டியின்றி வெற்றி பெற்ற சுனில்குமார், நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர். மாவட்டச் செயலாளர் நந்தகுமார் அதே சமூகம் என்பதும் அவர் துணை மேயராக நிறுத்தப்படுவதற்கு முக்கியக் காரணம் என்கிறார்கள். கடந்த முறையும் கவுன்சிலராக இருந்த சுனில்குமார், 15 வார்டுகளை உள்ளடக்கிய மாநகராட்சியின் முதலாவது மண்டலக் குழுத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். 1998-ல் திமுக-வின் அடிப்படை உறுப்பினராக சேர்ந்த சுனில்குமார், அந்தக் கட்சியில் மாவட்ட பிரதிநிதி, 2012-ல் வேலூர் மாநகர தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளர், 2015-ல் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர், 2020 முதல் காட்பாடி தெற்கு பகுதிச் செயலாளராகவும் கட்சிப் பொறுப்புகளை வகித்துவருகிறார்.

சுனில்குமார்

அதோடு, 2001 முதல் 2004 வரை தாராபடவேடு பேரூராட்சியின் 15-வது வார்டு கவுன்சிலராகவும், 2004 டு 2006 வரை தரம் உயர்த்தப்பட்ட தாராபடவேடு நகராட்சியின் 15-வது வார்டு கவுன்சிலராகவும் பதவி வகித்துள்ளார். இதையடுத்து, 2011 முதல் 2016 வரை வேலூர் மாநகராட்சியின் 7-வது வார்டு கவுன்சிலராகவும், அதே காலக்கட்டத்தில்தான் ஒன்றாவது மண்டலக் குழுவின் தலைவராகவும் பதவி வகித்தார். தற்போது, சுனில்குமாரின் ‘கிராப்’ உயர்ந்து, துணை மேயராக உச்சம் தொட்டிருக்கிறார்.

அதுமட்டுமின்றி, கஸ்தூரிபாய் வீதியின் இளைஞர் நற்பணி மன்றத் தலைவர், ஸ்ரீபவானி அம்மன் கோயிலின் தர்மகர்த்தா, காட்பாடி ரயில் நிலையம் மற்றும் வி.ஐ.டி ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கத்தின் கௌரவத் தலைவர், பாரதி நகர் விரிவு குடியிருப்போர் நலச்சங்கத்தின் கௌரவத் தலைவர் உள்ளிட்டப் பொறுப்புகளிலும் சுனில்குமார் இருக்கிறார்.