மதுரை மாநகராட்சி மேயர் வேட்பாளராக இந்திராணி பொன் வசந்தை திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

இந்திராணி

மதுரை மாநகர மேயர் பதவியை குறிவைத்து மதுரை மாநகர திமுக-வுக்குள் முக்கிய நிர்வாகிகள் காய் நகர்த்திய நிலையில், அந்த ரேஸில் கடைசியில் இருந்த இந்திராணி அறிவிக்கப்பட்டது கட்சியினர் மத்தியில் ஆதரவையும், இன்னொரு பக்கம் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

யார் இந்த இந்திராணி? எப்படி வாய்ப்பு கிடைத்தது? என்று கட்சியினரிடம் விசாரித்தோம். “ஆரப்பாளையம் பகுதி திமுக செயலாளராக பொன்.வசந்த் இருக்கிறார். பூர்வீகம் உசிலம்பட்டி பக்கம். ஃபைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இத்தொகுதியின் எம்.எல்.ஏவாகவும் அமைச்சராகவும் உள்ள பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளராக செயல்பட்டார். இந்த நிலையில் 57-வது வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் மனைவி இந்திராணியை நிறுத்தினார். அவர் டிகிரி முடித்திருக்கிறார்.

கணவர் பொன் வசந்துடன் இந்திராணி

இவரைப் போலவே பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளர்கள் மிசா பாண்டியன் மனைவி பாண்டிச்செல்வி, முருகன் மனைவி பாமா ஆகியோர் தங்களைத்தான் சிபாரிசு செய்வார் என்று நம்பி இருந்த நிலையில், மேயர் ரேஸில் கடைசியில் இருந்த இந்திராணியை பழனிவேல் தியாகாராஜன் சிபாரிசு செய்துள்ளதை கட்சித் தலைமை ஏற்று அறிவித்துள்ளது.

முன்னாள் அமைச்சரும், மாநகர செயலாளருமான பொன் முத்துராமலிங்கம் தன் மருமகள் விஜயமௌசுமிக்காகவும், அமைச்சர் பி.மூர்த்தி வாசுகிக்காகவும், மற்றொரு மாநகர செயலாளர் கோ.தளபதி இந்திராகாந்திக்காகவும் கட்சித்தலைமையிடம் முறையிட்டும் பலனில்லை. பழனிவேல் தியாகராஜன் சிபாரிசில் பொன்.வசந்த் மனைவி இந்திராணிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

பிரசாரத்தின்போது

மதுரை மாவட்ட திமுகவில் கட்சி பொறுப்பிலும், மக்கள் பிரதிநிதியாகவும் முக்குலத்தோரில் ஒரு உட்பிரிவான பிரமலைக்கள்ளர் சமூகத்திற்கு பிரதிநிதித்துவம் இல்லாததாலும் இந்த வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது” என்கிறார்கள்.

அதே நேரத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று திமுகவினர் பலர் பொருமிக் கொண்டுள்ளனராம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.