கிட்டத்தட்ட 2200 எபிசோடுகளைக் கடந்திருக்கிறது சந்திரலேகா சீரியல். இந்தத் தொடர் சன் டிவியின் மெகாஹிட் என்றே சொல்லலாம். சீரியல் ஒளிபரப்பாக ஆரம்பித்ததில் இருந்து இன்று வரை அதே டைம் ஸ்லாட்… அதே ஆர்ட்டிஸ்ட்!

எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்தத் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த அருண் ராஜன் இந்தத் தொடரில் இருந்து தற்போது விலகியிருக்கிறார். இது குறித்து அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இந்தத் தகவல் அவருடைய ரசிகர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் சூழலில், அருண் ராஜனை தொடர்பு கொண்டு பேசினோம்.

அருண் ராஜன்

“சந்திரலேகா தொடரை பொறுத்தவரையில் தேதி ஒழுங்கா மேனேஜ் பண்ண மாட்டேன்றாங்க. ‘ரோஜா’, ‘அன்பே வா’ தொடருக்குப் பிறகு அவங்க ஃப்ரீயா இருக்கிற டைமை எங்களுக்கு தேதி ஒதுக்குறாங்க. நான் கொடைக்கானலில் இருக்கேன். அங்கே எனக்கென சில கமிட்மென்ட் இருக்கும். திடீர்னு போன் பண்ணி நாளைக்கு ஷூட் இருக்கு கிளம்பி வாங்கன்னு சொல்லுவாங்க. சரின்னு சென்னைக்குக் கிளம்பி வந்தாலும் ரெண்டு, மூணு நாள்தான் நமக்கு ஷூட் இருக்கும். மற்ற எல்லா நாளும் சும்மாவே இருக்கிற மாதிரி இருக்கும். என்னைக்கு நமக்கு ஷூட் இருக்கோ அன்னைக்கு வர சொன்னாங்கன்னா நாம வந்து நடிச்சிட்டு கிளம்பிடலாம். ஆனா, சரியான திட்டமிடல் இல்லாம திடீர், திடீர்னு சொல்லும்போது பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

கிட்டத்தட்ட 8 வருஷமா இந்த புராஜக்ட் பண்றதால இதுக்காக மற்ற புராஜக்ட் எல்லாத்தையும் விட்டுட்டு இதுக்கு மட்டுமே தேதி கொடுத்துட்டு இருந்தேன். ஐந்து நாள் ஷூட் இருக்குன்னு வர சொல்லிட்டு ரெண்டு நாள் மட்டும் எடுத்தாங்க. அடுத்து என்னன்னு அப்டேட் கூட பண்ணலை. போன் பண்ணாலும் யாரும் அட்டெண்ட் பண்ணலை.

அருண் ராஜன்

ஃப்ரெண்ட்லியான சூழல் நம்ம வேலை பார்க்கிற இடத்தில் இருந்தா தாராளமா வேலை பார்க்கலாம். அது இல்லைங்கிற போது வேலை பார்க்கிற ஆர்வமே இல்லாம போயிடும். அதனாலதான் ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே நான் விலகப் போறேன்னு சொல்லிட்டேன். அவங்க வேற ஆள் பார்க்கும் வரைக்கும் நடிச்சுக் கொடுத்துட்டு இருந்தேன். எல்லா இடங்களிலும் பாலிடிக்ஸ் இருக்கும். அப்படித்தான் இந்த இடத்திலும் இருக்கு. கிட்டத்தட்ட 4000க்கும் அதிகமான புராஜக்ட் பண்ணியாச்சு. நான் எப்பவும் காசுக்காக வேலை பார்க்கிறது கிடையாது. அந்தச் சூழல் செட் ஆகாதுன்னு தெரிஞ்சதால சீரியலில் இருந்து விலகிட்டேன்” என்றவரிடம் அடுத்த திட்டம் குறித்து கேட்டோம்.

“தொடர்ந்து நிறைய புராஜக்ட் வந்துட்டு இருக்கு. பர்சனலா ஒரு டிரிப் பிளான் பண்ணியிருக்கேன். அந்த டிரிப் முடிச்சிட்டு சீக்கிரமே நல்ல புராஜக்ட்டில் உங்களைச் சந்திக்கிறேன்!” என்றார்.

அருண் ராஜன் – அஷ்வின்

இந்தத் தொடரில் அருண் ராஜனுக்குப் பதில், சீரியல் நடிகர் அஷ்வின் நடிக்க இருக்கிறார். சமீபமாக, இந்த பிரச்னை தொடர்ந்து சீரியல் உலகில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அடுத்தடுத்து, முக்கியமான தொடர்களில் நடிப்பவர்கள் சில காரணங்களால் சீரியல் இருந்து விலகுவது தொடர்கதையாகி வருகிறது!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.