2017 ஆம் ஆண்டு முதல் தொடரும் தோல்விகள் காரணமாக தற்போது அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கை வலுப்பெற தொடங்கியுள்ளது. இது பற்றிய விரிவான பார்வை…

2016 ஆம் ஆண்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு, இப்போதுவரை அதிமுகவில் நடக்கும் அதகளங்களுக்கு அளவே இல்லை. ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக இருந்தார், அதன்பின்னர் சசிகலா முதல்வராக முயற்சி செய்தார், அதன்பின்னர் எடப்பாடி பழனிசாமி முதல்வரானார்.

image

ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் முழுமையாக சசிகலா எனும் ஒற்றை நபரின் கட்டுப்பாட்டில் இருந்த அதிமுக, அவர் ஓரங்கட்டப்பட்ட பின்னர் இபிஎஸ் – ஓபிஎஸ் என இரட்டை தலைமையாக மாறியது. பெயருக்கு இரட்டை தலைமை என்றாலும் படிப்படியாக கட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தார் எடப்பாடி பழனிசாமி. ஓபிஎஸ் அவ்வப்போது இருப்பை காட்டிக்கொள்ள சில முன்னெடுப்புகளை செய்து வருகிறார்.

விடாது துரத்தும் தோல்விகள்:

2011 ஐ தொடர்ந்து 2014 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2016யிலும் வெற்றி வாகை சூடிய ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு உள்ளாட்சி தேர்தலை பல்வேறு காரணங்களால் ஒத்திவைத்த வண்ணம் இருந்தது. அதன்பின்னர் திருவாரூர், திருப்பரங்குன்றம் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களின் 18 தொகுதிகளின் தேர்தலும் பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. இந்த கால கட்டத்தில் அதிமுகவை கிட்டத்திட்ட கைப்பற்றியிருந்தார் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

image

அதன்பின்னர் அதிமுக முதன்முதலாக இரட்டை தலைமையுடன் 2019 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, தமாகா ஆகிய கட்சிகளின் கூட்டணியுடன் மொத்தமுள்ள 39 இடங்களில் 1 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது, இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் மட்டும் வெற்றிபெற்று ‘ஜஸ்ட் பாஸ்’ ஆகி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.

இந்த சூழலில் 2019 ஆம் ஆண்டு இறுதியில் நடத்தப்பட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் திமுகவே முன்னிலை பெற்றது. அதனைத்தொடர்ந்து நடந்த 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் தோல்வியடைந்து ஆட்சியை பறிகொடுத்தது அதிமுக. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த ஆண்டு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் படுதோல்வியடைந்த அதிமுக, தற்போது நடந்து முடிந்த தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் மோசமான தோல்வியை தழுவியுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை நீக்கப்பட்டு இரட்டை தலைமை பொறுப்பேற்றப் பின்னர் நடந்த 5 தேர்தல்களிலும் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்துள்ளது.

image

இரட்டை தலைமை வேண்டாம் – ஒற்றைத்தலைமை முழக்கம்

அதிமுகவில் இரட்டை தலைமை இருப்பது மிகவும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது என மூத்த தலைவர் அன்வர் ராஜா உள்ளிட்ட பலரும் தொடர்ச்சியாக கருத்து தெரிவித்து வருகின்றனர், இவ்வாறு கருத்து தெரிவித்த பலரும் கட்சியை விட்டு நீக்கப்பட்டுவிட்டனர். தற்போதைய தோல்விகளுக்கு பின்னர் செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ உள்ளிட்ட பலரும் மீண்டும் ஒற்றை தலைமை முழக்கத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளனர்.

அதிமுகவின் மூன்று முகங்களாக தற்போது இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் உள்ளனர். இதில் ஓபிஎஸ் – இபிஎஸ் இருவரும் கட்சியின் உள்ளே இருக்கிறார்கள், சசிகலா வெளியே இருக்கிறார். மற்றொரு நபரான தினகரன் அமமுக எனும் கட்சியுடன் அதிமுகவுடனான ஆடு புலி ஆட்டத்திலிருந்து விலகிவிட்டார். தற்போது ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா எனும் மூவருக்கும் இடையே நடக்கும் நிழல் யுத்தத்தில் சசிகலா பெரிய ‘மூவ்’கள் எதையும் செய்யாமல் வேடிக்கை மட்டும் பார்த்து வருகிறார். தொடர் தோல்விகளுக்கு பின்னரும் அதிமுகவின் சில முக்கிய தலைவர்கள் வெளிப்படையாக அலட்டிக்கொள்ளாமல் இருந்தாலும், தொண்டர்கள் மிகுந்த மனச்சோர்வில் உள்ளனர் என்பதே உண்மை. அவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா போல வலிமையான தலைமை தங்களை வழிநடத்தவேண்டும் என விரும்புவதே கள நிலவரம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

image

அதிமுகவின் வாக்குவங்கியை கரைக்கிறதா பாஜக?

நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் தொடர்ந்த அதிமுக – பாஜக கூட்டணி தற்போதைய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் உடைந்தது. இந்த தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தாலும், தனித்து போட்டியிட்ட பாஜக கணிசமான இடங்களில் வென்றது அனைவராலும் கவனிக்கப்பட்டது.

தமிழக அரசியல் என்பது திமுக ஆதரவு அரசியல், திமுக எதிர்ப்பு அரசியல் என இருவகைப்படும். எம்ஜிஆர், ஜெயலலிதாவை திமுக எதிர்ப்பு அரசியல் பலம் மிக்க தலைவர்களாக மாற்றியது. ஆனால், இப்போது உள்ள அதிமுகவின் இரட்டை தலைமை திமுக எதிர்ப்பை காத்திரமாக செய்யவில்லை அல்லது அப்படி செய்தாலும்கூட அது மக்களிடம் எடுபடவில்லை என்று அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

image

இந்த சூழலில் திமுக எதிர்ப்பை பலமாக பதிவு செய்துவரும் பாஜகவின் செல்வாக்கு கணிசமாக உயரத்தொடங்கியுள்ளது. பாஜக மட்டுமின்றி நாம் தமிழர், அமமுக, மநீம உள்ளிட்ட பல கட்சிகளும் திமுக எதிர்ப்பை பலமாக பதிவு செய்வதால், அதிமுகவுக்கான ஆதரவு ஒருமுகப்படுவதில் சிக்கல்கள் உள்ளன. கடந்த காலங்களிலும் திமுகவை எதிர்க்கும் பல கட்சிகள் இருந்தாலும், அது ஜெயலலிதா ஒற்றை நபர் ஆளுமையில் இருந்த அதிமுகவுக்கு பலவீனத்தை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை. மகாராஷ்டிராவில் சிவசேனா, பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட மாநில கட்சிகளுடன் இருந்துகொண்டே அவர்களை விடவும் பெரிய கட்சியாக வளர்ந்தது பாஜக. அதே பாணியில் அதிமுகவையும் சரித்து பாஜக மேலே எழுவதற்கு நிச்சயமாக முயற்சி செய்யும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

“அதிமுகவில் குழப்பம்தான் மிஞ்சும்”:

இது குறித்து பேசும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம், “ஒற்றைத் தலைமை பற்றி தேர்தல் தோல்வி ஏற்படும்போது அதிமுக அவ்வப்போது பேசி வருகிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமியா அல்லது பன்னீர் செல்வமா அது யார் என்பதுதான் கேள்வியாக உள்ளது. அதுபோல சசிகலாவை மீண்டும் சேர்க்கலாமா என்பது போன்ற கேள்விகளுக்கு அதிமுகவில் ஒருமித்த கருத்து இல்லை. டிடிவி தனிவழி கண்டுவிட்டார் இனி அவர் அதிமுக திரும்பப் போவதில்லை, மேற்கண்ட இந்த கேள்விகளுக்கு விடை கிடைக்காத வரை அதிமுகவில் குழப்பம் தான் மிஞ்சும்.

image

தற்போது உண்மையான எதிர்க்கட்சியாக பாஜகவே செயல்படுகிறது என பேசப்படுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை, அண்ணா திமுக ஓட்டு வங்கி சுமார் 25% இப்போதும் விழுந்திருக்கிறது, பாரதிய ஜனதா மைனர் பார்ட்னராக இருக்கலாம், மேஜர் பார்ட்னராக மாறமுடியாது அல்லது 2014 மாதிரி பாஜக தனி கூட்டணி அமைக்கலாம். தற்போது பல்வேறு விவகாரங்களில் பாரதிய ஜனதா எதிர்ப்பு என்கிற சக்கரம் சுழல்வதால், அண்ணா திமுக கூட்டணியில் அவர்களை சேர்ந்தாலும் இப்போதைக்கு பின்னடைவுதான் ஏற்படும். ஆனால், திமுக சார்பாக வெற்றி பெற்றுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் கெட்ட பெயர் ஏற்படுத்தினால் இந்த நிலைமை மாறும், எனவே முதலமைச்சர் கையில் சாட்டை சுழன்று கொண்டே இருக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்

தற்போதைய சூழலில் இபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா ஆகிய மூவருமே உள்ளூர ஒற்றைத் தலைமையை ஆதரிக்கும் மனநிலையிலேயே இருப்பார்கள். ஆனால் அந்த மூவருமே தாங்கள்தான் அந்த ஒற்றைத் தலைமையாக இருக்கவேண்டும் என நினைப்பதுதான் தற்போதைய அதிமுகவின் சிக்கல்களின் ஆணிவேராக உள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.