‘காதலே காதலே’ என 96 படத்தில் நம்மை உருகச் செய்தவருக்கு தீராத காதல் புத்தகங்கள்மீது. புத்தகக் கண்காட்சிக்கு சென்று வந்த களைப்பிலும் `புத்தகம்’ பற்றிக் கேட்கத் தொடங்கியதும் உற்சாகமாக நம்மிடையே பேச ஆரம்பித்தார் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா.

“ புத்தகக் காட்சி உங்களுக்கு என்னவாக இருக்கிறது…?”

“ஒரு குழந்தை நம்ம வீட்டுக்குள்ள பிறந்தா எப்படி இருக்குமோ அப்படித் தான் புத்தகக் கண்காட்சி எனக்கு. அந்தத் திருவிழாவுக்குள்ள போறது என்பது காதல் பூத்த தருணம் மாதிரி. பாடல்கள் எழுதும்போது வீட்டிலிருந்தேதான் எழுதுவேன். பாடல் பதிவில்கூட பெரும்பாலும் கலந்துகொள்வதில்லை. ஆனால் புத்தகத் திருவிழா நடக்கிறது என்றால் அங்க போயிடணும்ன்னு நினைப்பேன். புத்தகத்தைத் தேடுற கண்கள் எனக்கு, அந்த மக்கள் திரளுக்குள் கரைஞ்சுடணும்னு நினைப்பேன். சொந்த ஊருக்குச் சென்று திரும்பி வந்த உணர்வு புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்”

ஜே.கிருஷ்ணமூர்த்தி

“முதல் புத்தகக் காட்சி அனுபவம் பற்றி…”

“சென்னைக்கு வந்த புதிதில் பச்சையப்பாவில் நடந்த புத்தக திருவிழாவுக்குப் போனேன். அப்போ என் புத்தகங்கள் எதுவும் வெளிவரவில்லை. `கடலைக் குடித்த அகத்தியன்’ என்று சொல்வாங்கள்ல, அந்த மாதிரி எல்லாத்தையும் படிச்சுடணும்கிற வெறியோட இருந்த காலம் அது. எதை வாங்கணும் எதை விடணும் என்பது இல்லாமல் நிறைய வாங்குவேன். எப்போதும் குறைஞ்சபட்சம் 5 நாள்களாவது அங்கப் போயிடுவேன். இந்த பெருநகரத்தின் தனிமையில் மாட்டிக்காம இருப்பதற்கு வருடத்திற்கு குறைந்தது 5 நாள்களாவது கிடைக்கிற வாய்ப்பு புத்தகக் கண்காட்சி”

“உங்க புத்தகத் தேர்வு எப்படி இருக்கும்…”

“மரபு மீது தான் காதல். தமிழ் மரபு என்றில்லாமல் ஒட்டுமொத்த உலகின் மரபுகள் மீது நாட்டம். அது தான் முதலில் கண்ணை உறுத்தும். ஜெர்மன் கவிஞர் கதே புத்தகம் கிடைச்சா அங்கேயே உட்கார்ந்து விடுவேன். ஒவ்வொரு முறையும் திருவள்ளுவரையும் பாரதியாரையும் வாங்கிவிடுவேன். யாருடைய தெளிவுரை என்பது பற்றி எல்லாம் கவலைப்படாமல் இருவரையும் வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருவேன். எவ்வளவு படித்தாலும் சலிக்காத புத்தகங்கள் அவை இரண்டும். அதேபோல சங்க இலக்கியங்களும். சங்க இலக்கியத்தின் ஒரு பாடலை வாசித்தால் அடுத்த 10 நாட்களுக்கு அது மண்டைக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். என்னுடைய மனநிலை என்பது நாவல் படிக்குமளவிற்கு நீளமாக போகக் கூடியதில்லை. நான் சாரத்தை மட்டுமே எடுத்துக் கொள்ளக்கூடியவன். ஒரு நாவல் படிக்க ஒரு மாதம் இரண்டு மாதம்கூட எனக்கு ஆகலாம். ஒரு கவிதைத் தொகுப்பு என்பது 3 மணி நேரம் அப்படியே கட்டி வச்சு வாசிக்கச் செய்துவிடும். என்னுடைய தாகம் கவிதைகள்தாம்.”

ஜெர்மன் கவிஞர் கதே

“சில புத்தகங்களைப் பரிந்துரைக்க முடியுமா…”

“நிச்சயமாக. நான் எப்போதும் சொல்லக் கூடியது பாரதியும் வள்ளுவரும். அவர்கள் சொல்வது மாதிரி வாழ முடியலையே என்கிற குற்றவுணர்ச்சி இருந்துட்டே இருக்கு. அதன் பிறகு ஜெர்மன் கவிஞர் கதே. தமிழில் குறைவாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறார். தமிழில் முழுவதுமாக கதேவை கொண்டு வந்தால் எனக்குமே நன்றாக இருக்கும். ஷேக்ஸ்பியரின் ஸோனட்கள். ஜப்பானிய இகிகாய் புத்தகம். வி. அமலன் ஸ்டான்லி எழுதிய ‘ஆர்கானிக் இன்டெலிஜென்ஸ்’ – நுண்ணறிவைப் பற்றி ரொம்ப கூர்மையாக பேசுகிற புத்தகம். அவசியம் படிக்க வேண்டிய ஒன்று. அப்புறம் `ரீதிக்கால ஹிந்தி கவிதைகள்’ என க.மோகனரங்கன் மொழிபெயர்த்த புத்தகம். இப்போது கிடைக்கிறதா எனத் தெரியவில்லை, நானுமே அதைத் தேடிக் கொண்டிருக்கிறேன். ஜே.கிருஷ்ணமூர்த்தி எழுதிய புத்தகங்களைப் பரிந்துரைப்பேன். தமிழில் பிரமிள் மொழிபெயர்த்திருக்கிறார். சமீபத்தில் மண்டை முழுக்கவே மரபும் தத்துவமும் ஓடிக்கொண்டு இருப்பதால் இப்போதைக்கு இவ்வளவு தான் சொல்ல முடிகிறது.”

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.