சமீபத்தில் நடந்து முடிந்த U-19 உலகக்கோப்பையில் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர். ஐபிஎல் 2022-க்கான மெகா ஏலத்தில், இவரை சென்னை அணி 1.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் வாங்கி இருந்தது. ராஜ்வர்தன் பௌலிங்கில் மட்டுமல்லாமல் ஃபினிஷிங் ரோலையும் செய்ய கூடியவர் என்பதால் சி.எஸ்.கே அணியின் தேர்வு வெகுவாகப் பாராட்டப்பட்டது.

Rajvardhan Hangargekar

இந்நிலையில் ராஜ்வர்தன் வயது முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார் என்ற சர்ச்சை தற்போது எழுந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் விளையாட்டுத் துறை இயக்குநரான ஓம்பிரகாஷ் பகோரியா பிசிசிஐ-யின் செயலாளரான ஜெய் ஷாவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் இதை குறிப்பிட்டுள்ளார்.

“ராஜ்வர்தன் ஹங்கர்கேகரின் இச்செயல் விளையாட்டின் மாண்பையும், நெறிமுறைகளையும் குலைக்கும் வண்ணம் உள்ளது. அவரின் இந்த நேர்மையற்ற செயல், நாட்டின் புகழிற்கு களங்கம் விளைவிக்கக்கூடும். எனவே, இதற்குரிய கண்டிப்பான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன்” என்று அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார் பகோரியா.

Rajvardhan Hangargekar

ராஜ்வர்தன் எட்டாம் வகுப்பு படிக்கையில் அவரின் பிறந்தத் தேதியை அவரின் பள்ளி தலைமை ஆசிரியர் ஜனவரி 10,2001-இல் இருந்து நவம்பர் 10, 2002-க்கு மாற்றியுள்ளதாகத் தெரிகிறது. ஒரு மாணவரின் பிறந்தத் தேதியில் ஏதேனும் மாற்றங்களை செய்யவேண்டுமென்றால் அம்மாவட்ட கல்வி அலுவலரிடம் தக்க அனுமதி வாங்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால் ராஜ்வர்தனின் இந்தத் தேதி மாற்றம் குறித்து எந்த ஒரு தக்க அனுமதியும் வாங்கப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.

இதன்படி பார்த்தால் U-19 உலகக்கோப்பை தொடரின் போது அவரின் வயது 21-ஆக இருந்திருக்கக்கூடும். ஆனால், 2016-17 ஆண்டுகளில் மகாராஷ்டிரா மாநிலத்தின் U-16 அணியில் ராஜ்வர்தன் சேர்க்கப்பட்டபோது வீரர்களின் வயதை அறிய உதவும் TW3 டெஸ்ட்டும் மற்ற அனைத்து ஆவணங்களும் சரியாக உள்ளன. எனவே இக்குற்றச்சாட்டு குறித்தான எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இருக்கிறது பிசிசிஐ.

2019-ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடிய காஷ்மீரின் ராஷிக் சலாம் இதே போன்றதொரு குற்றச்சாட்டில் நிரூபிக்கப்பட்டு பிசிசிஐ-யால் இரண்டாண்டுகள் வரை தடை செய்யப்பட்டார். ராஜ்வர்தன் மீதான இந்தக் குற்றச்சாட்டும் ஒருவேளை நிரூபிக்கப்பட்டால் இதே போன்றதொரு விளைவினை அவரும் சந்திக்க வேண்டிவரும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.