69 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் டாடா குழுமத்துக்கு வந்திருக்கிறது. கடந்த 27-ம் தேதி டாடா குழுமம் வசம் ஒப்படைக்கப்பட்டது. டாடா குழுமம் வசம் ஏற்கெனவே விஸ்தாரா மற்றும் ஏர் ஏசியா இந்தியா ஆகிய நிறுவனங்கள் இருப்பதால் ஏர் இந்தியாவையும் சேர்த்து ஒரே நிறுவனமாக இணைக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது ஏர் இந்தியா நிறுவனத்துக்கு புதிய தலைமைச் செயல் அதிகாரியை டாடா குழுமம் நியமனம் செய்திருக்கிறது.

image

டர்கிஷ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி Ilker Ayci தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இயக்குநர் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மறு நியமனம் செய்யப்பட்ட டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரனும் இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். பலரை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட ஏர் இந்தியா இல்கர் ஐசி-யை (Ilker Ayci) தலைமைச் செயல் அதிகாரியாக நியமனம் செய்திருக்கிறது.

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் 1971-ம் ஆண்டு பிறந்தவர். பில்கெண்ட் பல்கலைக்கழகத்தில் பொலிடிக்கல் சயின்ஸ் (அரசியல் அறிவியல்) படித்தவர். இஸ்தான்புல்-ல் உள்ள மர்மரா பல்கலைக்கழகத்தில் முதுகலைபடிப்பு முடித்தவர். டர்கிஷ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை 2015-ம் ஆண்டு முதல் தலைமையேற்று நடத்தியவர்.

image

விமான போக்குவரத்து துறையில் அனுபவம் மிக்க பலர் இருக்கும் போது இவரின் நியமனம் சந்தையில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பொதுத்துறை நிறுவனம், காப்பீட்டு நிறுவனம். இதன் பிறகு துருக்கி அரசின் முதலீட்டு மேம்பாட்டு பிரிவின் தலைவராக இருந்தார். இதுபோல பல பொறுப்புகளுக்கு பிறகே 2015-ம் ஆண்டு டர்கிஷ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்புக்கு வந்தார்.

வெளிநாட்டவர் ஏன்?

விமான போக்குவரத்து துறைக்கு சர்வதேச அனுபவம் தேவை என்பதால் பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றியவர்களை தலைவராக நியமனம் செய்யும் பழக்கம் இருக்கிறது. கோஏர், இண்டிகோ, ஏர் ஏசியா மற்றும் ஜெட் ஏர்வேஸ் ஆகிய நிறுவனங்களில் வெளிநாட்டவர்கள் தலைமை பொறுப்பை ஏற்றிருக்கிறார்கள். விஸ்தாரா குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி சிங்கப்பூரை சேர்ந்தவர்.

இவரது காலத்தில் டர்கிஷ் ஏர்லைன் நிறுவனம் நல்ல வளர்ச்சி அடைந்திருக்கிறது. 2014-ம் ஆண்டு 249 விமானங்கள் இருந்தன. தற்போது 372 விமானங்கள் உள்ளன. அதேபோல செயல்படும் நகரங்களின் எண்ணிக்கையும் உயர்ந்திருக்கிறது.

image

டாடா குழுமத்தை பொறுத்தவரை அனுபவம் வாய்ந்த அதே சமயம் அதிக பணி ஆண்டுகள் இருக்ககூடியவர் தலைவராக இருந்தால் மட்டுமே ஏர் இந்தியா போன்ற நிறுவனத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல முடியும் என்பதால் இவரை நியமனம் செய்திருக்கிறது.

கோவிட்டுக்கு பிறகு சர்வதேச அளவில் விமான நிறுவனங்களை நடத்துவது என்பது சவாலான பணிதான். ஆனால் ஏர் இந்தியாவை கையாளுவது என்பது மேலும் சிக்கலான பணி. அரசு நிறுவனத்தில் இருந்து தனியாருக்கு இப்போதுதான் மாறி இருக்கிறது. பணியாளர்கள் மனநிலையில் இருந்து பெரிய மாற்றங்கள் செய்ய வேண்டும். மேலும் யூனியன், அதிக பணியாளர்களை கையாளுவது, கடனை அடைப்பது, லாபம் ஈட்டுவது என பல சவால்கள் காத்திருக்கின்றன.

image

டாடா குழுமத்தின் விஸ்தாரா மற்றும் ஏர் ஏசியா இந்தியா ஆகிய நிறுவனங்கள் இன்னும் லாபம் ஈட்டத் தொடங்கவில்லை. அதனால் ஏர் இந்தியா எப்படி செயல்படபோகிறது என்னும் எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் இருக்கிறது.

நடப்பு நிதி ஆண்டு இறுதிக்குள் ஏர் இந்தியாவின் தலைமை பொறுப்பை Ilker Ayci ஏற்பார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இமாலய இலக்காக இருக்கபோகிறது என்பது மட்டும் நிச்சயம்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.