ாஜக “தமிழக அரசு, மாணவி தற்கொலை விவகாரத்தில், மெளனமாக உள்ளது. ஏன் மெளனமாக உள்ளது என்பது தெரியவில்லை ஒருதலைபட்சமாகவும் செயல்படுகிறது. முதல்வர் மெளனமாக இருப்பதை பார்த்தால்,எங்களுக்கு சந்தேகம் வருகிறது. மாணவியின் தந்தை 25 ஆண்டாக தி.மு.க-வில் தொண்டனாக இருப்பவர் என்பது குறிப்பிடதக்கது” என தஞ்சாவூர் வந்த பாஜக சார்பில் அமைக்கப்பட்ட குழுவை சேர்ந்த விஜயசாந்தி தெரிவித்தார்.

மாணவி தற்கொலை விவகாரத்தில் பாஜக சார்பில் அமைக்கப்பட்ட குழுவினர்

தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டி, துாய இருதய மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த அரியலுார் மாவட்டம் வடுகபாளையம் கிராமத்தை சேர்ந்த,17 வயது மாணவி ஒருவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 19-ம் தேதி உயிரிழந்தார். மாணவியின் தற்கொலைக்கு அவர் தங்கி படித்த ஹாஸ்டல் வார்டன் மதம் மாற சொல்லி கட்டாயப்படுத்தியதே காரணம் என சர்ச்சை எழுந்தது.

இது தொடர்பாக இறப்பதற்கு முன்பு அந்த மாணவி பேசிய இரண்டு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. மதம் மாற சொல்லி அழுத்தம் கொடுத்து வந்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டார் என பாஜக மற்றும் விஷ்வ இந்து பரிஷத் இதனை கையில் எடுத்து போராட்டமும் நடத்தினர். மாணவி விவகாரத்தில் இரு வேறு விதமான கருத்துக்கள் நிலவி வரும் நிலையில், அதனை விசாரித்து உண்மை நிலையை கண்டறிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா நான்கு பேர் கொண்ட குழு அமைத்து உத்தரவிட்டார்.

தற்கொலை செய்து கொண்ட மாணவி படித்த பள்ளி

இதனை தொடர்ந்து மைக்கேல்பட்டி கிராம மக்கள், `பள்ளியில் இதுவரை மதமாற்றம் எதுவும் நடைபெறவில்லை. கிறிஸ்தவர்களால் நடத்தப்படும் பாரம்பர்யமான பள்ளியில் 60 சதவீதத்துக்கு மேல் இந்து மதத்தை சேர்ந்தவர்களே படித்து வருகிறார்கள். எங்க ஊரில் மத வேறுபாடுகள் இல்லாமல் இருந்து வருகிறோம். பாஜக உள்ளிட்ட எந்த குழுவும் எங்க ஊருக்கு வந்து விசாரிக்க வேண்டாம்’ என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதனிடையே, மாணவியின் தற்கொலை வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய குழுவினரும் 20-க்கும் மேற்பட்ட தரப்பினரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

Also Read: அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு: தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விசாரணையில் நடந்தது என்ன?

இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அமைத்த குழுவை சேர்ந்த மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி., சந்தியா ரே, முன்னாள் எம்.பியும், நடிகையுமான தெலங்கானாவை சேர்ந்த விஜயசாந்தி, மகாராஷ்டிராவை சேர்ந்த சித்ரா தாய் வாக், கர்நாடகா கீதா விவேகானந்தா ஆகியோர் மாணவி தற்கொலை குறித்து விசாரிக்க தஞ்சாவூர் வந்தனர். அக்குழுவினர் மைக்கேல்பட்டி கிராமத்துக்கு செல்வதற்கு போலீஸார் அனுமதிக்க வில்லை. இதனால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மைக்கேல்பட்டி அருகே உள்ள செந்தலை கிராமத்தில் உள்ள பாஜக நிர்வாகி ஒருவர் வீட்டிற்கு குழுவினர் செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியானதால் அங்கும் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

பி.ஜே.பி குழுவை சேர்ந்த விஜயசாந்தி

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை சந்தித்த பாஜக குழுவினர், கலெக்டரிடம் 10 நிமிடம் மாணவி தற்கொலை தொடர்பாக தங்கள் விளக்கத்தையும், அதன் பின்னர் அது குறித்த விபரங்களையும் கேட்டறிந்தனர். பின்னர் விஜயசாந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்த ஒரு மாணவிக்கு நடந்தது போல, மற்ற மாணவிகளுக்கு நடக்க கூடாது. மிகவும் கஷ்டமாக உள்ளது. மதமாற்றம் சட்டத்தை இன்னும் வலுப்படுத்த வேண்டும். மாணவிக்கு நல்ல நீதி கிடைக்கவேண்டும்.

மதமாற்றம் தொடர்பாக என்று மட்டும் இல்லை, வேறு எந்த விஷயமாக இருந்தாலும், மாணவிகள் தற்கொலை செய்துக்கொள்ளவது தவறானது. தைரியமாக எந்த விஷயமாக இருந்தாலும் சந்திக்க வேண்டும். பெற்றோர் உங்கள் மீது எவ்வளவு ஆசை வைத்து இருப்பார்கள். நீங்கள் தற்கொலை செய்துக்கொண்டு இறப்பது ஒரு நிமிடத்தில் முடிந்தும் விடும், வாழ்நாள் முழுவதும் உங்கள் பெற்றோர்கள் கஷ்டப்படுவார்கள். வாழ்வில் போராட வேண்டும்.

Also Read: அரியலூர் மாணவி தற்கொலை விவகாரம்: அதி தீவிரம் காட்டும் அண்ணாமலை! – என்ன காரணம்?

தமிழக அரசு மாணவி விவகாரத்தில், மிகவும் மெளனமாக உள்ளது. ஏன் மெளனமாக உள்ளது என தெரியவில்லை. தமிழக அரசு ஒருதலைபட்சமாக செயல்படுகிறது. இதுவரை மாணவியின் குடும்பத்திற்கு யாரும் ஆதரவு அளிக்கவில்லை. பாஜக சார்பில் 10 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு கோடி ரூபாய் மாணவியின் குடும்பத்திற்கு அரசு கொடுக்க வேண்டும். பாஜக இதில் அரசியல் செய்யவில்லை. மதமாற்றத்திற்காக கட்டாயப்படுத்தியாக அந்த மாணவியே கூறியிருக்கிறார்.

முதல்வர் மெளனமாக இருப்பதை பார்த்தால், எங்களுக்கு சந்தேகம் வருகிறது. தவறு செய்வதவர்களுக்கு ஆதரவு அளிக்கிறார். இறந்தவருக்கு ஆதரவு அளிக்க மறுப்பதாக தெரிகிறது. இது போன்ற விஷயம் மற்ற மாணவிகளுக்கு நடக்காமல் இருக்க முதல்வர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த மாணவியின் தந்தை 25 ஆண்டாக தி.மு.க.-வில் தொண்டனாக உள்ளார். அவர் கட்சியில் இருப்பவருக்கே இந்த நிலைமை வந்ததுள்ளது.

தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் பி.ஜே.பி குழுவினர்

ஆனால் முதல்வர் என்ன நடவடிக்கை எடுத்தார் என தெரியவில்லை. முதல்வரே, ப்ளீஸ் உங்கள் மனநிலையை மாற்றிக்கொள்ளுங்கள். தி.மு.க., பற்றி எங்களுக்கு தெரியும். எனவே, மக்களுக்கு நல்லது செய்யுங்கள்” என்றார்.

`நீட் தேர்வு விவகாரத்தில் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். அப்போது நீங்க வரவில்லையே..?’ என செய்தியாளர்கள் தரப்பில் கேள்வி எழுப்பபட்டதற்கு, `தற்போது தற்கொலை செய்து கொண்ட மாணவிக்காக வந்திருக்கிறோம். அதை பற்றி மட்டுமே பேசுவோம்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.