அப்ப வந்த கிளாசிக் படங்களுக்கு இப்ப விடாப்பிடியா சீக்குவல் எடுக்கறேன்னு களத்துல குதிச்சா என்னவாகும்? இதோ இப்படி ஒரு தொடரா வந்து நிக்கும். இனி வார வாரம், ஒரு மாஸான அல்லது கிளாஸான படத்துக்கு மாஸாவும் கிளாஸாவும் மசாலாவாவும் ஒரு செகண்டு பார்ட் எடுப்போம். அதாவது ‘ரெண்டாவது ரவுண்டு’ போலாமா?

விஜய் கரியர்ல மிகப்பெரிய திருப்புமுனைப் படம்னா அது கில்லிதான். தமிழ் சினிமாவுக்குமே ஒரு பெஞ்ச்மார்க் படமாகத்தான் இப்போ வரைக்கும் இருக்கு. அந்தப் படத்துக்கு ஒரு இரண்டாம் பாகம் எழுதிப் பார்த்தே தீரணும்னு எழுதக் குதிச்சாச்சு. அதனால, ஒரு தடவ முடிவு செஞ்சுட்டா என் பேச்ச நானே கேக்க மாட்டேன்கிறதால ‘கில்லி பார்ட் டூ…’

கில்லி

செமி பைனல்ல தோத்தாலும் கூட வேலுவுக்கு தனத்து மேல காதல் இருக்குன்னு எல்லோரும் புரிஞ்சுக்கணும்னு பைனலுக்கு விஜய் டீமை அனுமதிச்சிருப்பாங்க. அங்க வச்சுத்தான் தனத்தை தான் லவ் பண்ணுறோம்கிறதையே வேலு புரிஞ்சுக்குவார். அப்புறம் கடைசியா முத்துப் பாண்டியை அடிச்சு ஜெயிச்சுட்டு தனத்தைக் காப்பாத்தி படத்துக்குச் சுபம் போட்டிருப்பாங்க. நாம அங்க இருந்து தொடரலாம்.

தனத்தை மிஸ் பண்ணிட்டோமேன்னு திரும்ப மதுரைக்கு வர்ற முத்துப்பாண்டி வழக்கம் போலவே தாதாவாகவே தன்னோட வாழ்க்கையைத் தொடரலாம்னு நினைக்கிறார். ஆனா, ஒரு ரௌடி தன்னைத் தானே ரௌடின்னு சொல்லிக்கிறதால ரௌடி ஆகிட முடியாது. நாலு பேரு பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டா அவன் பெரிய மனுசன். அதே நாலு பேரு பார்த்துப் பயந்து ஒதுங்கி நின்னா அவன்தான் ரௌடி. முத்துப்பாண்டியை வேலு அடிக்கிற வரைக்கும்தான் மதுரை முத்துப்பாண்டியோட கோட்டையா இருந்துச்சு. எப்போ வேலு மீனாட்சி அம்மன் கோயிலுக்கு முன்னாடி முத்துப்பாண்டியை பந்தாடிட்டுப் போனானோ அப்பவே முத்துப்பாண்டியோட தாதா இமேஜும் ஷிஃப்ட் டெலிட் ஆகிடுச்சு.

கில்லி

சென்னைல இருந்து தனத்தோட திரும்பியிருந்தா மறுபடியும் அவர் தாதாவா ஒரு ரவுண்டு வந்திருக்கலாம். ஆனா, தனத்தையும் இழந்துட்டு, தன்மானத்தையும் இழந்துட்டு வந்ததால ஊர் மக்கள் எல்லோருமே அவரை நாய் சேகராகத்தான் பார்த்தாங்க. இதுக்கு மேலயும் ஒவ்வொரு வீட்டு முன்னாடியும் போய் ‘நான் ரௌடி வந்திருக்கேன்’னு சொல்லி கரியரை பிக்கப் பண்ற தைரியம் இல்லாததால தன்னோட அப்பாவோட சேர்ந்து அரசியல்ல குதிச்சுடறார். அவுங்க அப்பா பின்னாடி அப்போ தமிழ்நாடே இருந்ததால இவரும் தனக்குப் பின்னாடி மதுரையே இருக்குன்னு சொல்லி, தமிழ்நாட்டுக்குப் பின்னாடி இன்னொரு மதுரையை ஒட்டவச்சு ஓட்டு வாங்கி ஜெயிச்சு எம்.எல்.ஏ ஆகி, மந்திரியாகி… சரி மந்திரியோட நிறுத்துக்குவோம். சிஎம், பிஎம்-லாம் அடுத்தடுத்த பார்ட்டுக்கு வெச்சுக்குவோம்.

இதே சமயத்துல வேலு வெட்டியா இருக்காம ஒரு பக்கம் தனத்து கூட டூயட் பாடி ஒரு பையனைப் பெத்து அவனுக்கு பாலுன்னு பேரும் வச்சிடறார். இன்னொரு பக்கம் கபடி கபடின்னு தமிழ்நாடு கபடி டீமோட தலைவராவும் மாறிடறார். இந்தியாவுலயே தலைசிறந்த கபடி டீம் கோச்சாகவும் இருக்கார். வேலு கிட்ட கபடி கோச்சிங் எடுக்கவே ஒரு க்யூ இந்தியாவைத் தாண்டி, சீனா வரைக்கும் நின்னுட்டு இருக்கு. அவ்வளவு ஃபேமஸ். என்னயிருந்தாலும் ‘பிகில்’ மைக்கேலைவிட, ‘கில்லி’ சரவணவேலுதான பேமஸ்?!

கில்லி

அந்தப் பக்கம் நம்ம முத்துப்பாண்டி சாரும் இன்னொரு பொண்ணைப் பார்த்து, ’செல்லம் ஐ லவ் யூ’ன்னு சொல்லி ஒரு பையனைப் பெத்துக்கிறார். அந்தப் பையனுக்கு பவளப் பாண்டின்னு பேர் வச்சுவிடறார். அவனும் தன்னை மாதிரியே ஒரு ரௌடியா மாறி மதுரையை ஒரு கலக்குக் கலக்குவான்னு பார்த்தா அவன் கபடி கபடின்னு பொடிப்பசங்க கூட விளையாடப் போயிடறான். அப்படியே வளர்ந்துட்டும் இருக்கான். கில்லி படத்துல ஹீரோதானடா கபடி விளையாடுவான், இவன் வில்லனாக வேண்டியவனாச்சேன்னு கன்ஃபியூசன்லயே காலத்தை ஓட்டிட்டு இருக்கார் முத்துப்பாண்டி.

அந்தச் சமயத்துல ஒலிம்பிக்ல கபடி விளையாட்டைச் சேர்த்துக்கப் போறதா ஒலிம்பிக் கமிட்டி அறிவிக்கிறாங்க. இதைப் பார்த்த பவளப்பாண்டி எப்படியாச்சும் இந்தியா சார்பா விளையாடுற டீமுல சேர்ந்தே ஆகணும்னு முயற்சி செய்யுறார்.

பவளப்பாண்டிக்கு கபடின்னா உயிர்ங்கிறதால அவருக்கு சென்னைல இருக்கிற உலகப் புகழ் கபடிக் கோச்சான வேலுவைப் பத்தித் தெரியுது. அவர்கிட்ட சேர்ந்து கோச்சிங் எடுத்துக்கணும்னு முத்துப்பாண்டிகிட்ட சொல்றார். உன் இஷ்டம் போல செய்யுன்னு முத்துப்பாண்டியும் சொல்லிட, பவளப்பாண்டி மதுரைல இருந்து சென்னைக்கு வர்றார்.

கில்லி

தன்னோட பையன் தேடிப் போற வேலுதான் தன்னோட லவ் யூ தனலட்சுமியைத் தன்கிட்ட இருந்து காப்பாத்தின வேலுன்னு முத்துப்பாண்டிக்குத் தெரியாது. அதனால தன்னோட அரசியல் செல்வாக்கு மூலமா தன்னோட பையனை உடனடியாக வேலு அவனோட கோச்சிங்ல சேர்த்துக்கணும்னு போன்ல மிரட்டலாகச் சொல்லுறார். பவளப்பாண்டிக்குமே கூட தன்னோட அப்பா பெரிய அரசியல்வாதிங்கிறதால உடனே வேலுகிட்ட கோச்சிங்ல சேர்ந்துட முடியும்னு வருவார். ஆனா, பிரதமரே வந்து கபடி கத்துக்குடுங்க மாஸ்டர்னு கேட்டாலும் கூட வரிசைல வாங்கன்னு சொல்லி அனுப்புற கண்டிப்பான ஆளு வேலு. அந்த லைன் எவ்வளவு பெரிசுன்னா ‘வலிமை’ படத்துக்கு அப்டேட் கேட்டவங்க லிஸ்டை விட நீளமானது. இதுல நின்னுட்டு இருந்தா ‘கில்லி பார்ட் 5’ வந்த அப்புறம் கூட வேலுவைப் பார்க்க முடியாதுன்னு தோணுது.

இதனால முத்துப்பாண்டியும் பவளப்பாண்டியும் தன்னோட அடியாள் பரிவாரத்தோட வேலு வீட்டுக்கு வர்றாங்க.

”சார், கபடின்னா எனக்கு உயிர் சார். நான் உங்களை அப்ரோச் செய்யுற விதம் தப்பா இருக்கலாம். ஆனால், கபடிதான் என் மூச்சு, பேச்சு எல்லாமே. தயவு செஞ்சு என்னை உங்க கோச்சிங் கிளாஸ்ல சேர்த்துக்கங்க சார்” ன்னு பவளப் பாண்டி வேலுகிட்ட சொல்றார்.

என்னதான் கடுமையான கோபத்துல இருந்தாலும் தன் மகனோட ஆசைக்காக வேலுகிட்ட அதே மிரட்டலோட ”ஒழுங்கா என் மகனுக்கு கபடி கத்துக் குடுத்துரு. ஒரு தடவைதான் நான் விட்டுக் கொடுப்பேன். ஒவ்வொரு தடவையும் விட்டுக் கொடுத்துட்டு இருக்கமாட்டேன் செல்லம்” ன்னு சொல்லிட்டு தனலட்சுமியைப் பார்த்து முறைக்கிறார்.

கில்லி

“ஜெயிச்சுடுவோம்னு தெரிஞ்ச அப்புறம் விலகிக்கிறதுக்குப் பேர்தான் விட்டுக் கொடுக்கிறது. உனக்கு எப்பவுமே அப்படி ஒரு வாய்ப்பு வராது”ன்னு வேலு பஞ்ச் சொல்லிட்டு, “எப்போ அடியாட்களோட வந்து மிரட்டினா நான் சேர்த்துக்குவேன்னு நினைச்சு இவனுங்களைக் கூட்டிட்டு வந்தியோ அப்பவே நீ தோத்துட்ட. இனிமே யார் சொன்னாலும் உனக்கு கபடி சொல்லித் தர முடியாது. கிளம்பலாம்”ன்னு சொல்லிடுறார்.

இந்த அவமானத்துக்காக வேலுவைப் பழி தீர்த்தே தீரணும்னு கடுமையான கோபத்தோட முத்துப்பாண்டியும் பவளப்பாண்டியும் அங்க இருந்து கிளம்பிப் போயிடறாங்க.

முத்துப்பாண்டி விளையாட்டுத் துறை அமைச்சராக இருக்கிறதால அவரும் அவரோட மகனான பவளப் பாண்டியும் கிரிக்கெட் தொடர்பான ஒரு விழாவுல கலந்துக்கிறாங்க. அங்க தமிழ்நாடு பெண்கள் கிரிக்கெட் டீமோட கேப்டனான நம்ம ஹீரோயினைப் பார்த்த உடனே பவளப்பாண்டிக்கு ‘இனிமேல் நாம போக வேண்டிய பாதை கபடி இல்லை கிரிக்கெட்’னு மனசுக்குள்ள ஒரு பந்து உருள ஆரம்பிக்குது.

கில்லி

அவங்களை எப்படியாச்சும் மதுரைக்கு வரவச்சு அவுங்கதான் தன்னோட லவ் யூன்னு சொல்லி, கழுத்துல தாலியைக் கட்டிடனும்னு திட்டம் போடுறார். அதைப் பார்த்த முத்துப்பாண்டிக்கு சந்தோசம் தாங்கல. தன்னோட மகனும் தன்னை மாதிரியே லவ் யூவைத் தூக்கப் பிளான் போட்டதை நினைச்சுப் பெருமைல பூரிச்சுப் போறார். ஹீரோயின் வீரலட்சுமி மதுரைக்கு வர்றாங்க.

மதுரைல வந்து இறங்கினதுமே நம்ம ஹீரோயின் வீரலட்சுமியை பவளப்பாண்டியோட ஆட்கள் ஒரு கார்ல கடத்திட்டுப் போறாங்க. கார் மதுரை மீனாட்சியம்மன் கோயில் வாசல்ல போய் நிக்குது. அங்க நம்ம பவளப்பாண்டி கைல தாலியோட ஒரு ஜிப்சில வந்து இறங்குறார். வீரலட்சுமி கழுத்துல தாலி கட்டுறதுக்காக வரும்போது ஒரு கிரிக்கெட் பந்து வந்து அந்தத் தாலியைப் பிடுங்கிட்டுப் போகுது. என்னடான்னு பவளப்பாண்டியை விட படம் பாக்குற நாம ஷாக்காகிப் பாக்கும் போது அங்க கிரிக்கெட் பேட்டோட வேலுவோட பையன் பாலு நின்னுட்டு இருக்கார்.

வேலுவுக்கு எப்படி கபடி இஷ்டமோ அப்படித்தான் அவரோட பையன் பாலுவும் தன்னோட உயிரைக் கொண்டு போய் கிரிக்கெட்ல வச்சிருந்தார். மதுரைல ஒரு கிரிட்கெட் மேட்ச் விளையாடுறதுக்காக வர்ற பாலு தமிழ்நாடு பெண்கள் கிரிக்கெட் டீமோட கேப்டன் ஒரு கார்ல போறாங்கன்னு தெரிஞ்சுட்டு அவுங்ககிட்ட ஆட்டோகிராப் வாங்குறதுக்காக அந்தக் கார் பின்னாடியே வர்றார்.

கில்லி

அப்படி வந்தவர்தான் பவளப்பாண்டிகிட்ட இருந்து வீரலட்சுமியைக் காப்பாத்தி அவரோட ஜிப்சிலயே வீரலட்சுமியை ஏத்திட்டு பழைய அர்ஜுனரு வில்லு பாட்டையே அனிருத் ரீமிக்ஸ்ல போட்டுட்டு சென்னைக்கு வந்துடறார்.

சென்னை வர்றதுக்கு முன்னாடியே முத்துப்பாண்டிக்கு மேட்டர் தெரிஞ்சுடுது. ஆனா, பாலுவை எங்கே வச்சு எப்படி மடக்குறதுன்னு தன்னோட அடியாட்களோட பேசிட்டு இருக்குற சீக்வன்ஸ்ல பாலு வீரலட்சுமியைத் தன்னோட வீட்டுக்கே கூட்டிட்டு வர்றார்.

இவுங்க யார்னு வீட்டுல கேக்கும் போது, “தமிழ்நாடு பெண்கள் கிரிக்கெட் டீமோட கேப்டன் இவுங்க. நம்ம வீட்டுலயே இருந்து எனக்கு கிரிக்கெட் சொல்லித் தரப் போறாங்க”ன்னு சொல்றார். அமெரிக்கா ப்ளைட்டுக்கு அரைமணி நேரம்தான் இருக்குங்கிற அவசரத்துலகூட காரப் பொறி வேணும்னு கேட்ட தனலட்சுமி இன்னும் வளராம அப்படியே இருக்கிறதால பாலு சொல்றதை உண்மைன்னு நம்பிடறாங்க.

கில்லி

வீரலட்சுமியை எப்படியாச்சும் பவளப்பாண்டிகிட்ட இருந்து காப்பாத்திடனும்னு யோசிச்சுட்டு இருக்கும் போது பாலுவோட போனுக்கு வாட்சப்ல ஒரு வீடியோ வருது. அதுல அவரோட அப்பா வேலுவை ஒரு சேர்ல கட்டிப் போட்டு, நாலஞ்சு ரவுடிக அவரைச் சுத்தி நின்னுட்டு இருக்காங்க. கேமரா வச்சிருக்கிறது தெரியாம குறுக்க வந்த மாதிரி திடீர்னு முத்துப் பாண்டி பேச ஆரம்பிக்கிறார்.

அவரோட மருமகள் வீரலட்சுமியைக் கொண்டு வந்து விட்டுட்டா பாலுவோட அப்பாவை உயிரோட விட்டுடுவேன்னு மிரட்டுறார்.

”எனக்கு இவ யார்னே தெரியாது. என் அப்பா உயிருக்கு எதாச்சும் சேதாரம் நேர்ந்தா இந்தப் பொண்ணோட உயிருக்கு நான் உத்தரவாதம் இல்லை”ன்னு வீரலட்சுமி கழுத்துல கத்தியை வைக்கிறார் பாலு.

“ஒரு தடவை தாண்டா ஏமாறுவான் இந்த முத்துப்பாண்டி. இன்னொரு தடவை அதே மாதிரி ஏமாந்து போறதுக்கு நான் என்ன முட்டாளா? ஏன்டா நீங்க மட்டும் தொடர்ச்சியா எல்லாப் பொண்ணுங்களையும் லவ் யூ பண்ணுவீங்க. நாங்க எப்பவாச்சும் அதுல குறுக்க வந்திருக்கோமா? ஆனா, நாங்க லவ் யூ பண்ணுற பொண்ணுங்களை மட்டும் காப்பாத்த வந்துடுறீங்களேடா! இனி எல்லாம் ஏமாற முடியாது!” ன்னு சொல்லிட்டு, அவ வந்தாலும் வராட்டியும் உங்க அப்பனைக் கொண்டே போடுறேன் பாருன்னு வேலுவோட கழுத்துல கத்தியை வைக்கிறார் முத்துப்பாண்டி.

கில்லி

இப்படி ஒரு யார்க்கர் பாலை எதிர்பார்க்காத பாலு என்ன செய்யுறதுன்னு நினைச்சுட்டு இருக்கும் போது முத்துப்பாண்டியைப் பிடிச்சுக் கீழ தள்ளிட்டு வேலுவோட கட்டுகளை அவிழ்த்துவிட்டுட்டு “என் செல்லத்தை ஒண்ணும் செஞ்சுடாத. நான் என்ன வேணாலும் செய்யுறேன்”னு கெஞ்சுறார் பவளப் பாண்டி.

இதைப் பார்த்த முத்துப்பாண்டி, “நானும் இப்படித் தாண்டா மகனே ஏமாந்தேன்”னு தலைல அடிச்சுக்கிறார்.

”நீ என்னமோ பண்ணுயா, எனக்கு என் செல்லாக்குட்டி வீரலட்சுமி வேணும்”னு முத்துப்பாண்டியை மொறச்சுட்டு பாலுவோட அப்பா வேலுவைப் பத்திரமா அனுப்பி வைக்கிறார் பவளப்பாண்டி.

கடைசியா வீரலட்சுமி பவளப்பாண்டிகிட்ட, ”அடுத்தவாரம் நடக்குற கிரிக்கெட் மேட்ச்ல பாலு டீமை ஜெயிச்சு, கப்பு வாங்கிட்டா நான் உன்னைக் கல்யாணம் செஞ்சுக்கிறேன்”னு சேலஞ்ச் செய்யுறா.

அடுத்தவாரம் மேட்ச் நடக்குது. பாலு டீம் ஜெயிக்குமா இல்ல பவளப்பாண்டி டீம் ஜெயிக்குமான்னு எல்லோரும் டென்சனா பார்த்துட்டு இருக்காங்க. கடைசி ஓவர்ல 4 பாலுக்கு 6 ரன் வேணும்னு பரபரப்பா போயிட்டு இருக்கு. பாலுதான் பந்து வீசிட்டு இருக்கார். பாலு போடுற பாலை கவனமா உத்துப் பாத்து பேட்டைச் சுத்துறார் பவளப்பாண்டி. பால் ஸ்டேடியத்தைத் தாண்டிப் போய் விழுது. பால் போட்ட பாலு பறந்து போற பாலையே வெறிச்சுட்டு இருக்கார். 3 பால் மிச்சம் இருக்கும் போதே பவளப்பாண்டி டீம் ஜெயிச்சுடுது.

எல்லோருமே பயங்கரமான ஷாக்காகிப் பார்த்துட்டு இருக்காங்க. வீரலட்சுமி கூட இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கலை. வீரலட்சுமி கிட்ட வர்ற பவளப்பாண்டி, “போய் கப்பு வாங்கிட்டு வர்றேன். ரெடியா இரு. இனி கனவுப் பாட்டா இருந்தா கூட என் கூடத் தான் டூயட்!”ன்னு சொல்லிட்டுப் மேடையை நோக்கிப் போறார்.

கில்லி

அப்போ, “இந்த மேட்சோட வின்னர் பாலுவை கப்பு வாங்க மேடைக்கு அழைக்கிறோம்”ன்னு அறிவிப்பு வருது. எல்லோருமே ஷாக்காகி அறிவிப்பாளரைப் பார்க்கிறாங்க. பாலுவும் சந்தோஷமா போய் கப்பு வாங்கிக்கிறார்.

”ஜெயிச்சவங்களுக்குக் கப்பு தராம ஏன் தோத்த டீமுக்கு கப்பு தர்றோம்ன்னா, கில்லி பார்ட் ஒண்ணுல செமி பைனல்ல தோத்துட்டு பைனலுக்கு வர்றதா சொல்லியிருப்போம். அந்த மாதிரி இதுல ஹீரோவும் ஹீரோயினும் சேரனும்னா பாலுவுக்குத்தான் கப்பு தந்தாகனும்”னு சொல்லிட்டு சிரிக்கிறார் சிறப்பு விருந்தினர்.

வீரலட்சுமி ஓடிவந்து பாலுவைக் கட்டிப் பிடிச்சுக்கிறாங்க. அங்க முடியுது படம்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.