50 ஆண்டுகளாக தொடர்ந்து எரிந்துகொண்டிருந்த அமர் ஜவான் ஜோதி, தேசிய போர் நினைவுச்சுடருடன் ஐக்கியமாவதாக தெரிவித்திருக்கிறது மத்திய அரசு.

முதல் உலகப்போரின்போது உயிர்நீத்த சுமார் 84,000 ராணுவ வீரர்களின் நினைவாக டெல்லியில் திறக்கப்பட்டது 42 மீட்டர் உயரமுள்ள இந்தியா கேட். 1971ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் போருக்குப்பிறகு வங்கதேசம் தனி நாடாக உருவானது. இந்தப் போரில் உயிரிழந்த 3,843 ராணுவ வீரர்களின் நினைவாக அதே இடத்தில் 1972ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி அமர் ஜவான் ஜோதியானது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் நிறுவப்பட்டது. நாட்டுச்சேவைக்கு பணியாற்ற வரும் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்த அமர் ஜவான் ஜோதிக்கு மரியாதை செலுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று, பிரதமர் இந்த இடத்தில் ராணுவ வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துவதும் வழக்கம்.

image

அரசாங்கத்தின் அனைத்து அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளிலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமர் ஜவான் ஜோதியின், நான்கு பக்கங்களிலும் தங்கத்தில் “அமர் ஜவான்” என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளதுடன், கல்லறையுடன் கூடிய பளிங்கு பீடமும் அமைந்துள்ளது. இங்கு ஒரு L1A1 சுய தீபம் ஏற்றும் துப்பாக்கியும், அதன் பீப்பாய் மீது வைக்கப்பட்டு ஒரு சிப்பாயின் தலைக்கவசத்தால் மூடப்பட்டிருக்கும். பீடத்தைச் சுற்றி நான்கு கலசங்கள் வைக்கப்பட்டிருக்கும். இந்த கலசங்களில் ஒன்றில் 1971 முதல் சுடர் எரிந்துகொண்டே இருக்கிறது. நான்கு கலசங்களில் ஒவ்வொன்றும் ஒரு சுடர். ஆனால் நான்கு சுடர்களில் ஒன்று மட்டுமே ஆண்டு முழுவதும் எரிந்துகொண்டே இருக்கிறது. நான்கு சுடர்களும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தில் மட்டும் ஏற்றப்படுகின்றன. அமர் ஜவான் ஜோதிக்கு இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் இந்திய கடற்படை வீரர்கள் இரவு பகலாக பாதுகாப்பு அளித்து வருகின்றனர். எரியும் இந்த சுடரைப் பராமரிக்க ஊழியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் வளைவின் கீழ் ஒரு அறையில் வசிக்கின்றனர்.

தேசத்தைப் பாதுகாப்பதில் உயிர் தியாகம் செய்த அனைத்து இந்திய வீரர்களின் நினைவாக நரேந்திர மோடி அரசாங்கத்தால் தேசிய போர் நினைவுச்சின்னம் கட்டப்பட்டது. இந்த தேசிய போர் நினைவகம் 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி பிரதமர் மோடியால் திறக்கப்பட்டது. இந்தியா கேட் அருகே தேசிய போர் நினைவகம் திறக்கப்பட்ட பிறகு, குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் உட்பட ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் அனைத்து அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளும் அமர் ஜவான் ஜோதியில் இருந்து புதிய சுடர் தளத்திற்கு மாற்றப்பட்டது. 40 ஏக்கர் பரப்பளவிலான இந்த புதிய நினைவிடத்தில் 25,942 வீரர்களின் பெயர்கள் கிரானைட் பலகைகளில் தங்க எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளன.

image

வரலாற்று சிறப்புமிக்க அமர் ஜவான் ஜோதி இப்போது தேசிய போர் நினைவுச் சுடருடன் இணைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. குடியரசு தினத்திற்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், இரண்டு சுடர்களும் ஒன்றிணைக்கப்படும் தகவல் வெளியாகி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.