1993… ஜனவரி 7ம் தேதி காது கேளாத, வாய் பேசவியலாத ஒரு சிறுமியோடு முதலமைச்சர் அறையின் முகப்பில் சென்று அமர்ந்தார் மம்தா. மேற்கு வங்கமே பதைபதைப்போடு அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தது. மம்தாவோடு அமர்ந்திருந்த அந்த சிறுமி அதிகாரத்திலிருந்த கயவன் ஒருவனால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டவள். உடனடியாக குற்றவாளியைக் கைது செய்யவேண்டும் என்ற கோரிக்கையோடு முதலமைச்சரைச் சந்திக்க வந்த மம்தாவை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. முதல்வரின் அறைவாசலில் அமர்ந்து தன் எதிர்ப்பைக் காட்டினார் மம்தா. மம்தா அப்போது மத்திய இணையமைச்சர்.

மம்தா பானர்ஜி

முதல்வர் வரும் நேரமாகிவிட்டது. அதிகாரிகள் பதைபதைக்கிறார்கள். மம்தாவிடம் பேசுகிறார்கள். அவர் அங்கிருந்து நகர மறுத்துவிட்டார். உடனடியாக மகளிர் காவலர்கள் திரள்கிறார்கள். மம்தாவையும் பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமியையும் வலுக்கட்டாயமாகத் தூக்கி படிக்கட்டுகளில் இழுத்து வெளியில் தள்ளுகிறார்கள். போராடுகிறார் மம்தா. காவல்துறையின் தலைமை அலுவலகத்துக்குக் கொண்டு செல்கிறார்கள். இந்தக் கலவரத்தில் மம்தாவின் ஆடைகள் கிழிக்கப்பட்டன.

அந்த நொடியில் சொன்னார் மம்தா… “என்னை குப்பையைப் போல தூக்கி எறிந்த காவலர்கள் அதற்குப் பதில் சொல்லவேண்டும். முதலமைச்சராகி இந்த அறையில் அமர்வேன். அதுவரை இந்தக் கட்டிடத்தில்கூட காலடி வைக்கமாட்டேன்” என்றார். 18 ஆண்டுகள் அந்தக் கட்டடத்தின் திசையைக்கூட மிதிக்கவில்லை. 2011, ஆண்டு மே 20ம் தேதி அந்த வரலாற்றுச்சிறப்பு மிக்க சிவப்புக் கட்டடத்துக்குள் முதல்வராக நுழைந்தார் மம்தா.

கம்யூனிஸ்ட்களின் கோட்டையாக இருந்த மேற்கு வங்கத்தை தனி மனுஷியாக போராடி தன்வசப்படுத்திய இரும்புப் பெண்மணி மம்தா. அவமானங்கள், புறக்கணிப்புகள், அலைக்கழிப்புகள் என இந்தப் பயணத்தில் அவர் எதிர்கொண்ட தடைகள் ஏராளம். எல்லாவற்றையும் மன உறுதியால் தகர்த்தெறிந்து மேற்கு வங்கத்தை தன் ஆளுமைக்குள் கொண்டு வந்தார்.

மம்தா பானர்ஜி

அகில இந்திய அளவில் பெரும் தாக்கம் உருவாக்கிய இடதுசாரித் தலைவர் ஜோதிபாசு, தன் ஆயுளில் சந்தித்திராத வலிமைமிக்க ஓர் அரசியல் எதிரியை மம்தா வடிவத்தில் கண்டார். 23 ஆண்டுகள் மேற்கு வங்கம் ஜோதிபாசு சொன்ன திசையில் நடந்தது. ஜோதிபாசு முதல்வராக இருந்த கடைசி 2 வருடங்கள் மம்தா மேற்கு வங்க அரசியலைத் தீர்மானித்தார்.

எவருக்கும் அஞ்சாத நெஞ்சுரம் கொண்டவரான மம்தா, 15 வயதில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிவிட்டார். மாணவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தீவிரமாகச் செயல்பட்டார். அந்த வயதில் காங்கிரஸ் கட்சி கூட்டங்களில் அவர் பேசிய தெளிவான அரசியல் உரைகள், மக்களையும் தொண்டர்களையும் ஈர்த்தன. ஜெயப்பிரகாஷ் நாராயணனை விமர்சிக்கும் வகையில் கார் ஒன்றின்மீது ஏறி நடனமாடிய மம்தாவை ஊடகங்கள் கவனிக்கத் தொடங்கின. அடுத்தடுத்து அவரைப் பதவிகள் தேடி வந்தன. கட்சியில் சேர்ந்து ஆறே ஆண்டுகளில் மாநில மகளிரணிச் செயலாளராக உயர்ந்தார்.

கட்சிக்குள்ளாக இருந்த உள்ளூர் அரசியல் நெருக்கடி அவரை மேற்கு வங்கத்தில் காலூன்றவிடவில்லை. இங்கு இருந்தால் தங்கள் வாய்ப்புகள் பறிபோகும் என்று கருதிய மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் அவரை பாராளுமன்ற உறுப்பினராக்கி டெல்லிக்கு அனுப்பி வைத்தார்கள். 1984-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜாதவ்பூர் தொகுதியில் போட்டியிட்டு அவர் தோற்கடித்தது, பழுத்த இடதுசாரி அரசியல் தலைவரான சோம்நாத் சாட்டர்ஜியை. நாட்டின் இளவயது உறுப்பினர் என்ற தகுதியோடு பாராளுமன்றத்துக்குள் அடியெடுத்து வைத்தார் மம்தா.

மம்தா பானர்ஜி

இடதுசாரித் தலைவர்கள் எப்போதும் வலுவான கொள்கைப்பிடிப்போடும் எவரையும் எதிர்கொண்டு வெல்லும் தைரியத்தோடும் இருப்பார்கள். அதிலும் மேற்கு வங்கத்தில் அவர்களின் ஆதிக்கம் பலமாகவே இருந்தது. ஆனால் மம்தா அவர்களுக்கு சிம்ம சொப்பனமாகத்தான் இருந்தார். டெல்லியில் அமர்ந்துகொண்டு மேற்கு வங்க இடதுசாரி அரசுக்கு எதிராக அவர் தொடுத்த யுத்தம் தேசம் முழுவதும் எதிரொலித்தது.

மம்தா, 1955 ஆம் ஆண்டு இதே நாளில் கொல்கத்தாவின் அஸ்ரா பகுதியில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தார். கொல்கத்தாவில் உள்ள பசந்தி தேவி கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்ற மம்தா, ஜோகேஷ் சந்திர சௌதுரி சட்டக் கல்லூரியில் சட்டமும் பயின்றார்.

மம்தாவின் தீவிரத்தையும் செயல்பாடுகளையும் கவனித்த ராஜிவ் காந்தி, மம்தாவை தேசிய இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளராகத் தேர்வு செய்தார். வெற்றியையும் தோல்வியையும் சரிக்குச் சமமாக எதிர்கொண்ட மம்தாவை நரசிம்மராவ், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக்கினார்.

ஹேமந்த் சோரன் பதவியேற்பு விழாவில் ஸ்டாலின், மம்தா பானர்ஜி, ராகுல் காந்தி

மம்தா டெல்லியிலிருந்தாலும் அவருடைய இலக்கென்பது மேற்கு வங்கமாகத்தான் இருந்தது. இடதுசாரிகளை ஆட்சிக்கட்டிலில் இருந்து இறக்குவதொன்றே அவரது இலக்காக இருந்தது. அதே நேரத்தில் மம்தாவின் வளர்ச்சி காங்கிரஸ் கட்சிக்குள்ளாகவே புகைச்சலைக் கிளப்பியது. படிப்படியாக கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டார். மேற்கு வங்க அரசை எதிர்த்து அவர் நடத்தும் போராட்டங்களுக்கு உள்ளூர் தலைவர்கள் ஒத்துழைப்பு அளிக்கவில்லை.

காங்கிரஸ் கட்சியில் இனிமேல் நமக்கு எதிர்காலம் இல்லை என்று உணர்ந்த மம்தா, 1997-ல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அகில இந்திய திரிணாமூல் காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கினார். 1999-ம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபோது, அதில் இணைந்து ரயில்வே அமைச்சரானார் மம்தா. 2001-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டு 60 இடங்களில் வெற்றி பெற்றது. மம்தா தன் அரசியல் இருக்கையில் நிமிர்ந்து அமர்ந்தார்.

தொடர்ந்து மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த மம்தா, இடதுசாரி அரசை வீழ்த்தி மேற்கு வங்கத்தைக் கையகப்படுத்துவதை இலக்கு வைத்து களத்தில் இறங்கினார்.

மம்தாவின் வேகத்துக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் நந்திகிராம், சிங்குர் பிரச்னை அமைந்தது. 2006-ம் ஆண்டு டிசம்பர் மாதம் டாடா நானோ ஆலையை அமைப்பதற்காக சிங்கூர் தொகுதியில் தொழிற்சாலைகளுக்கு விவசாயிகளிடமிருந்து நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து 25 நாள் போராட்டத்தில் குதித்தார். இப்போராட்டம் மம்தாவை மேற்கு வங்க மக்கள் மனதில் நிலை நிறுத்தியது. தொடர்ச்சியான போராட்டம் காரணமாக சிங்குரில் நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை மாநில அரசு கைவிட்டது. இப்போராட்டத்தில் கிடைத்த செல்வாக்கை 2009-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் மம்தா பானர்ஜி அறுவடை செய்தார்.

மம்தா பானர்ஜி

2011-ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி அவரைத் தேடி வந்தது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிக்கம் செலுத்திய இடதுசாரிகள் தோல்வியைத் தழுவினர். மம்தா சபதம் செய்தபடி முதல்வராக சிவப்பு கட்டடத்துக்குள் போய் அமர்ந்தார்.

மத்திய அமைச்சராக இருந்த காலத்திலும் சரி, முதல்வராக இருந்த காலத்திலும் சரி, வெந்நிற பருத்தியிலான சேலை, ஹவாய் செருப்புடன் சாதாரணப் பெண்மணி போல வீதிகளில் பவனி வரும் மம்தா மக்களுக்கு மிகவும் நெருக்கமாகிப்போனார். அவரது உழைப்பின் வேகத்துக்கு ஈடுகொடுத்து களம்காண, காங்கிரஸிலோ, இடதுசாரிக் கட்சிகளிலோ இளைஞர்கள் இல்லை என்பது அவருக்கு கூடுதல் பலமானது. 2016 தேர்தலிலும் வெற்றிபெற்று மேற்கு வங்கத்தின் முதல்வரானார்.

மேற்கு வங்கத்தில் மிகவும் வலுவாக இருந்த இடதுசாரிகளையும் காங்கிரஸையும் துடைத்தெடுத்து தன் ஆதிக்கத்தை பரப்பிய மம்தாவுக்கு பாரதிய ஜனதா குடைச்சலாக வந்து நின்றது. 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக சற்று அழுத்தமாகவே மேற்கு வங்கத்தில் காலூன்றியது. மம்தாவின் உறுதியைக் குலைக்க பாஜக எல்லா வழிவகைகளையும் கையாண்டது. அவரது நம்பிக்கைக்குரிய தளபதிகளை தன் பக்கம் இழுத்தது. ஆனாலும் மம்தா தளரவில்லை.

மம்தா – சோனியா

2021 சட்டமன்றத் தேர்தலில் மம்தாவிடம் இருந்து மேற்கு வங்கத்தைக் கைப்பற்ற தீவிரமாக செயல்பட்டது பாஜக. தேர்தல் ஆணையம் தேர்தலை 8 கட்டமாக நடத்தியது. இது மறைமுகமாக பாஜகவுக்கு உதவும் என்று அரசியல் நோக்கர்கள் கருதினார்கள். வாக்குப்பதிவின்போது அதுவரை இல்லாத அளவுக்கு வன்முறைகள் வெடித்தன. வழக்கமாக தான் போட்டியிடும் தொகுதியைத் தவிர்த்து தனக்கு அரசியல் வாழ்வளித்த நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா, தம்முடைய நம்பிக்கைக்குரிய தளபதியாக இருந்து பின்னர் பிரிந்து பாஜகவுக்கு சென்ற சுவேந்து அதிகாரியிடம் 1,956 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

ஆனால் திரிணமூல் காங்கிரஸ் கட்சி, 292 தொகுதிகளில் போட்டியிட்டு 213 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்தது. காங்கிரஸோடு கூட்டணி சேர்ந்து களத்தைச் சந்தித்த இடதுசாரிகள் ஒரு இடத்தில்கூட வெற்றிபெறவில்லை என்பது வரலாற்றுச்சோகம். அதேநேரம் பாஜக 77 இடங்களில் வெற்றிபெற்று மம்தாவை மிரள வைத்தது.

தேர்தலில் தோற்றாலும் மூன்றாவது முறை முதல்வராகப் பொறுப்பேற்ற மம்தா, பிறகு பவானிப்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு பெருவெற்றி பெற்றார்.

மம்தா பானர்ஜி

மம்தா கல்லும் முல்லுமான ரணப் பாதைகளைக் கடந்தவர். அவர் சந்திக்காத துரோகமில்லை. தாக்குதல்கள் இல்லை. 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதியன்று லாலு ஆலம் என்பவர் மம்தாவின் தலையில் கட்டையால் தாக்கினார். மண்டை உடைந்து ரத்தம் கொட்டியபோதிலும் தலையில் கட்டுடன், சாலையில் இறங்கிப் போராடினார். அவர் பிழைப்பதே கடினம் என்ற நிலை வந்தது. மீண்டு வந்தார். 2011 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் சிலர் காரில் தள்ளிவிட காலில் காயம்பட்டது. சக்கர நாற்காலியில் இருந்தபடி தேர்தலைச் சந்தித்தார் மம்தா.

எளிமையிலும் எளிமை, போராட்ட குணம், எப்போதும் மக்களுடன் நெருக்கமாக இருப்பது என தனித்துவ அரசியல் செய்யும் மம்தாவின் வாழ்க்கை சரிதம் ‘தீதி: தி அன்டோல்ட் மம்தா பானர்ஜி’ என்ற தலைப்பில் வெளிவந்திருக்கிறது. ‘டிகோடிங் தீதி’ என்ற புத்தகமும் மம்தாவின் ஆளுமையை வெளிக்காட்டுகிறது.

இந்திய அரசியலில் மாற்றத்துக்கான வெளிச்சம் என்று அரசியல் விமர்சகர்களால் கணிக்கப்படுகிற தீதிக்கு, இன்று பிறந்தநாள்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.