இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணுவுக்கு இன்று 97ஆவது பிறந்த நாள். சுதந்திர போராட்டம் முதல் மக்களுக்கான உரிமை போராட்டம் வரை 80 ஆண்டுகால பொது வாழ்வில் அவர் கடந்து வந்த பாதையை சற்றே திரும்பிப் பார்க்கலாம்.
 
வரலாற்றில் பின்னோக்கி பார்த்தால் சுதந்திர போராட்ட வீரர்; நிகழ்கால செயல்பாடுகளில் சமரசமற்ற களப் போராளி; தமிழக அரசியல் கட்சிகளின் ஏற்ற இறக்கங்களை அறிந்த மூத்த தலைவர்; வயது பேதமின்றி அனைவராலும் தோழர் என்றழைக்கப்படுபவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு. 1924 ஆம் ஆண்டு பிறந்த நல்லகண்ணுவுக்கு அப்போது ஸ்ரீவைகுண்டம்தான் சொந்த ஊர். மகாகவி பாரதியாரின் புரட்சிப் பாடல்களினாலும், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் இயக்கத்தின் வாயிலாகவும் சுதந்திர வேட்கை கொண்ட நல்லக்கண்ணு, மாணவப் பருவத்திலேயே பல போராட்டங்களில் பங்கேற்றவர்.
 
image
18 வயதில் தன்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்ட அவர், சொந்த ஊரில் நெல் மூட்டை பதுக்கலுக்கு எதிரான போராட்டத்தில் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கினார். அந்த வயதிலேயே போராட்ட பயணத்தை தொடங்கி, 97 வயது வரை மக்களின் உரிமை சார்ந்த போராட்டங்களில் மனம் தளராமல் களத்தில் நின்று வருகிறார், நல்லக்கண்ணு. கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்த கால கட்டத்தில் அனுபவித்த 7 ஆண்டுகால சிறைவாசம், நெல்லை சதி வழக்கில் காவல்துறையின் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டது எல்லாம் நல்லக்கண்ணுவின் வாழ்வில் மறையாத வடுக்கள் என விவரிக்கிறார்கள் இடதுசாரி கட்சியினர்.
 
image
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக 13 ஆண்டுகள். விவசாயிகள் சங்கத்தில் தலைவராக 25 ஆண்டுகள். தேசிய நிர்வாகக் குழுவின் உறுப்பினர் என பல முக்கிய பதவிகளை வகித்தவர், நல்லக்கண்ணு. ”நாங்குநேரி வானாமலை கோயிலில் ஆலய நுழைவு போராட்டம். சாதி ஆணவ படுகொலை எதிர்ப்பு. மணல் கொள்ளையை தடுக்க நீதிமன்றம் வரை சென்று போராடியது எல்லாம் நல்லக்கண்ணுவின் சமரசமற்ற போராட்ட குணத்துக்கான சான்றுகள்” என்கிறார் மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.
 
image
அரசு ஒதுக்கிய வீட்டை காலி செய்ய நோட்டீஸ் கொடுத்தபோதும், எவ்வித எதிர்ப்போ, கோரிக்கையோ முன்வைக்காமல் வீட்டை காலி செய்ததோடு, கட்சி சார்பில் வழங்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் நிதியை கட்சியின் வளர்ச்சிக்காக திருப்பி வழங்கியது என பண்பு நிறைந்த செயல்களால் மாற்று கட்சியினர் மத்தியிலும் அவருக்கான மரியாதையை அதிகரிக்கச் செய்தது. கொண்ட கொள்கையில் உறுதியாய். இளைஞர்களுக்கான உத்வேகமாய். அரசியல் களத்தில் ஓய்வின்றி சுழன்று கொண்டிருக்கும் நல்லக்கண்ணு போன்ற போராளிகளுக்கு வயது என்பது வெறும் எண்கள் மட்டுமே.
 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.