கிறிஸ்மஸ் – மகிழ்ச்சியின் பண்டிகை. உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்கள் கொண்டாடும் திருநாள். இறைமகனான இயேசுபிரான் மக்களின்மீது கொண்ட பேரன்பின் காரணமாக பூமியில் அவதரித்த தினம். எனவே அந்த நாளை கிறிஸ்தவப் பெருமக்கள் பெருமகிழ்வுடன் கொண்டாடுவது வழக்கம்.

டிசம்பர் மாதம் தொடங்கியதுமே உற்சாகமும் தொடங்கிவிடும். வீடுகளை சுத்தம் செய்வது, வண்ண விளக்குகளால் அழகு படுத்துவது. இறைமகன் ஏசுவின் வாழ்வினைப் பேசும் குடில்கள் அமைப்பது, நட்சத்திரங்கள் தொங்கவிடுவது, நள்ளிரவில் இறைமகனின் வருகையைச் சொல்லி கேரல் ரௌண்ட்ஸ் என கிறிஸ்மஸ் தாத்தாவோடும் அவர் தரும் இனிய பரிசுகளோடும் குதூகலிப்பது என்று மகிழ்ச்சி மார்கழியின் பனிபோல உள்ளும் புறமுமாய் பரவத் தொடங்கிவிடும்.

கிறிஸ்மஸ் பொருள்கள்

இவற்றில் வீட்டை அலங்கரிக்கும் பணி அதிக ஈடுபாட்டோடு செய்ய வேண்டிய ஒன்று. எவ்வளவுதான் பழைய அலங்காரப் பொருள்கள் இருந்தாலும் புதிதாக வாங்கி அந்த ஆண்டு சேர்ப்பது பலரின் வழக்கம். அப்படி கிறிஸ்மஸ் மரம் முதலிய அலங்காரப் பொருள்கள் வாங்குவதற்கு என்று இருக்கும் இடம் சென்னை பாரிமுனை மலையப்பெருமாள் கோயில்தெரு.

இந்தத் தெருவிலும் அதற்கு அடுத்ததாக உள்ள சில தெருக்களிலும் நிறைந்திருக்கின்றன கிறிஸ்மஸ் அலங்காரப் பொருள்கள் விற்கும் கடைகள். வண்ண வண்ன நட்சத்திரங்கள், தோரணங்கள், குடில் வைக்கத் தேவையான பொருள்கள், பொம்மைகள் என அனைத்தும் இங்கே ஒரே இடத்தில் கிடைக்கும். விலையும் அனைத்துத் தரப்பு மக்களும் வாங்கும் வகையில் பல தரங்களில் உள்ளது. இதுகுறித்து அங்கு பல ஆண்டுகளாகக் கடை நடத்திவருபவரோடு பேசினோம்.

“போன வருடம் கொரோனா அச்சம் காரணமாக வியாபாரம் பெரிய அளவில் இல்லை. மக்களிடமும் காசு புரளாத காரணத்தால் பொருள்கள் வாங்க, அவர்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. இந்த வருடம் கொஞ்சம் பரவாயில்லை, கொரோனாவால் ஏற்பட்ட மன அழுத்தத்தைக் குறைக்கவே இந்த ஆண்டு கிறிஸ்மஸை சிறப்பாகக் கொண்டாட விரும்புகிறார்கள். அதுக்காகவே நிறைய பேர் வராங்க.

கிறிஸ்மஸ்

பொதுவாக பால்ஸ் மல்டி கலர் கொண்டுதான் வரும், ஒரே நிறத்தில் வருவது அரிது. ஆனால் இந்த வருடம் ஒரே நிறத்தைக் கொண்ட பால்ஸ்கள் வந்துள்ளன. எப்போதும் கிறிஸ்மஸ் மரங்கள் என்றால் பச்சை நிறத்தில் தான் என்று மனத்தில் பதிந்திருக்கும், ஆனால் இந்த வருடம் வெள்ளை நிறத்தில் பனி படர்ந்தது போல் இருக்கும் மரங்கள் வந்துள்ளன. வெறும் அட்டை, பிளாஸ்டிக் பொருள்களால் செய்யப்பட்டு வந்த நட்சத்திரங்கள் இப்போது எல். ஈ. டி லைட் பொருத்தி வந்துள்ளன. சீரியல் லைட்கள் நட்சத்திர வடிவிலும், பூக்கள் வடிவிலும் வந்துள்ளன.

சான்டா கிளாஸ் உடைகள் மக்களின் கவனத்தை ஈர்க்கும், இந்த முறை இன்னும் கண்ணை கவரும் வகையில் வெல்வெட் மற்றும் சைனிங்கை அதிகரித்து விற்கபடுகிறது. குடிலில், வைக்கோல் போன்றவை வைக்கப்பட்டிருக்கும், இப்போது அதில் சிறுசிறு காளான்கள் முளைத்தது போல் சிவப்பு நிறத்தில் அழகிய கிளி போலவும், செர்ரி பழம் போன்றும் விற்க படுகின்றன. கிறிஸ்மஸ் தாத்தா பொம்மைகள் பல சிறிதும் பெரிதுமாக பல வகையில் விற்பனைக்கு வந்துள்ளன. மரத்தில் தொங்க விட பைன் கோன், சிறிய நட்சத்திரம், சிறிய தேவதைகள் போன்றவை மக்கள் பலரால் விரும்பி வாங்க படுகின்றன. வீட்டின் முன் தொங்க விட ரீத், பேப்பர் ஸ்டீமர்ஸ் , மரத்தில் செய்த குடில், அட்டையில் செய்த குடில் போன்றவை அதிகம் வரவேற்பு பெற்றுள்ளன” என்றார்.

மக்கள் அவற்றை ஆசையோடு வாங்கிச் செல்வதைக் காணமுடிந்தது.

கொரோனாவால் சென்ற ஆண்டு வியாபாரம் பாதிக்கப்பட்டிருந்தாலும் நிரந்தரமான பெரிய கடை வைத்திருப்பவர்களைப் பொறுத்தவரை இந்த ஆண்டில் வருவாயைச் சரி செய்துவிடலாம் என்னும் நிலை உள்ளது. ஆனால் சாலையோர வியாபாரிகளின் நிலை வழக்கம்போலக் கவலைப்படும் விதத்திலேயே உள்ளது.

அந்தத் தெருவில் பாதையோரம் கடை நடத்தும் மைக்கேல் வீரம்மாள் தம்பதியோடு பேசினோம்.

பாரிமுனை நடைபாதை வியாபாரிகள்

“போன வருடமும் சரி, இந்த வருடமும், பெரிய அளவில வியாபாரம் இல்லை. கிறிஸ்துமஸ் நேரத்துலதான் குடில் கட்டுவது, சிலை விக்கிறது மாதிரியான வேலைகளைச் செய்வோம். பல வருடங்களாகக் கடலூர்ல இருந்துதான் பொம்மைகளை வாங்குவோம். கொஞ்சமா லாபம் வச்சி வித்துடுவோம். ஏன்னா எங்களுக்கு குடோன் எல்லாம் கிடையாது. அதனால் பொம்மைகளைப் பாதுகாக்குறது ரொம்பக் கஷ்டம். இது எல்லாமே களி மண்ணால் செய்வது. அதனால் மழை காலத்துல பல பொம்மைகள் கரைஞ்சே போய்டும். வாங்கினதைத் தேக்கி வைக்காம வந்த விலைக்கு வித்துடுவோம். இல்லைன்னா மழைல கரைஞ்சி வீணாத்தான் போகும். போன மாசம் பெய்த மழையில்கூடப் பல பொம்மைகள் கரைஞ்சி போச்சு. என்ன செய்றது… இதை எல்லாம் கடந்துதான் வியாபாரம் பண்ண வேண்டியிருக்கு” என்றார் மைக்கேல்.

பிரச்னைகளைச் சொல்லும்போது முகம் வாடினாலும், மற்ற நேரங்களில் அந்தத் தம்பதியின் முகத்தில் புன்னகை மாறாமல் இருந்தது. கிறிஸ்மஸ்ப் பண்டிகை அவர்களுக்கு லாபகரமான ஒன்றாக அமையட்டும் என்று வாழ்த்திப் புறப்பட்டோம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.