செப்டம்பர் 15-ம் தேதி மாலை, திருச்சி பொன்மலைப்பட்டி டாஸ்மாக்கிலிருந்து மது வாங்கிவிட்டு வெளியே வந்த சின்ராஜ் என்ற 22 வயது இளைஞர் மர்மக் கும்பல் ஒன்றால் கொடூரமான முறையில் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார். விசாரணையில், கொலையான சின்ராஜின் அண்ணன் சக்திவேலுக்கும், பொன்னேரிபுரம் பகுதியைச் சேர்ந்த ரெளடியான அலெக்ஸ் என்பவருக்கும் இடையே கடுமையான முன்பகை இருந்தது தெரியவந்தது.

சின்ராஜ் கொலை

அதன் காரணமாக, சக்திவேலைக் கொலை செய்ய அலெக்ஸ் அவர் ஆதரவாளர்களுடன் திட்டம் தீட்டியிருக்கிறார். சம்பவத்தன்று சக்திவேலும் சின்ராஜும் பொன்மலைப்பட்டி டாஸ்மாக்குக்கு மது வாங்க வந்திருக்கின்றனர். அதைத் தெரிந்துகொண்ட அலெக்‌ஸ் கோஷ்டி, சக்திவேலைக் கொலை செய்வதாக நினைத்து மாஸ்க் போட்டிருந்ததால் அடையாளம் தெரியாமல் அவருடைய தம்பி சின்ராஜை வெட்டிச் சாய்த்தனர். இதில் அலெக்ஸ் உட்பட எட்டுப் பேர் கைதுசெய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சின்ராஜின் இறப்பைத் தாங்க முடியாத அவருடைய நண்பர்கள், சின்ராஜின் இறப்புக்கு அடித்த கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களில் `மரணமடைந்த சின்ராஜ் அவர்களின் இறுதி ஊர்வலம் 4 மணி அளவில் அவரின், இல்லத்திலிருந்து புறப்படும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்’ என்றதோடு, போஸ்டரில் `விரைவில்’ என்ற வார்த்தையைக் குறிப்பிட்டிருந்தனர். சின்ராஜின் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கிலேயே இந்த `விரைவில்’ என்கிற வாசகத்தை அவர்கள் அச்சிட்டிருப்பதாக அப்போதே அந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது சம்பந்தமாக போஸ்டர் அடித்த ஐந்து பேரை பொன்மலை போலீஸார் கைதுசெய்தனர்.

பெலிக்ஸ் கொலை

இந்த நிலையில், போஸ்டரில் குறிப்பிட்டிருந்ததைப்போலவே சின்ராஜின் இறப்புக்குப் பழிவாங்கும் வகையில், நேற்றிரவு சுமார் 8:30 மணியளவில் பொன்மலைப்பட்டி மாவடிக்குளம் ஏ.கே.அவென்யூ பகுதியில் வைத்து சின்ராஜைக் கொலை செய்த அலெக்ஸின் தம்பி பெலிக்ஸை, 10 பேர் கொண்ட மர்மக் கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்தது. சின்ராஜைக் கொலை செய்த வழக்கில் அலெக்ஸ் திருச்சி மத்திய சிறையிலிருக்கும் நிலையில், அவரைப் பழிவாங்குவதற்காக அவர் தம்பி பெலிக்ஸ் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

இது குறித்து போலீஸாரிடம் பேசினோம். “சின்ராஜின் கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் `விரைவில்’ என்ற வார்த்தை இடம்பெற்றபோதே, பதிலுக்கு இன்னொரு சம்பவம் நிச்சயமாக நடக்கப் போகிறது எனத் தெரியும். அதனால்தான், அப்போதே உடனடியாக சின்ராஜைக் கொலைசெய்தவர்களையும், சின்ராஜ் கொலையைக் கண்டித்து `விரைவில்’ என்ற வார்த்தையுடன்கூடிய போஸ்டர்களை அடித்த ஐந்து பேரையும் கைதுசெய்து சிறையிலடைத்தோம். மேலும், ரெளடிகள் சிலரையும் தொடர்ந்து கண்காணித்துவந்தோம்.

உயிரிழந்த பெலிக்ஸ்

இருந்தபோதிலும் கோபத்தில் இருந்த சின்ராஜ் கோஷ்டி ஸ்கெட்ச் போட்டு, சின்ராஜின் இறப்புக்குப் பழிதீர்க்கும் நோக்கில் சிறையிலிருக்கும் அலெக்ஸை எதுவும் செய்ய முடியவில்லையே என அவர் தம்பி பெலிக்ஸை வெட்டிச் சாய்த்திருக்கின்றனர். நிச்சயமாக பல நாள்கள் திட்டமிட்டுத்தான் இந்தக் கொலையைச் செய்திருக்கின்றனர். முதற்கட்டமாக சந்தேகத்தின் அடிப்படையில் ஐந்து பேரைப் பிடித்து விசாரித்துவருகிறோம். அந்த ஐந்து பேரும் ஏற்கெனவே உயிரிழந்த சின்ராஜின் ஆதரவாளர்கள்தான். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விரைவில் குற்றவாளிகள் அனைவரும் கைதுசெய்யப்படுவார்கள்” என்றார்.

Also Read: திருச்சி: ஓடும் காரில் நகைக்கடை ஊழியர் கொலை! – உடலைக் காட்டில் புதைத்த கும்பல் சிக்கியது எப்படி?

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.