உத்தரப்பிரதேச ஷியா வக்ஃபு வாரியத்தின் முன்னாள் தலைவர் வாசிம் ரிஸ்வி இன்று இஸ்லாத்தை விட்டு இந்து மதத்துக்கு மாறினார். காஜியாபாத்திலிருக்கும் தஸ்னா தேவி கோயிலின் தலைமை பூசாரி சுவாமி யதி நரசிங்கானந்த் என்பவர் முன்னிலையில் ரிஸ்வி இந்து மதத்துக்கு மாறினார்.

மத மாற்றத்துக்கு பிறகு ரிஸ்வியின் புதிய பெயர், `ஜிதேந்திர நாராயண் சிங் தியாகி’ என்று நரசிங்கானந்த் கூறினார். இந்து மதத்துக்கு மாறிய பிறகு ரிஸ்வி, இந்துத்துவா மற்றும் இந்துக்களின் முன்னேற்றத்துக்காக மட்டுமே பாடுபடுவேன் என்று கூறினார்.

மதம் மாறிய ரிஸ்வி

இது தொடர்பாக, அகில இந்திய இந்து மகாசபாவின் தேசிய தலைவர் சுவாமி சக்ரபாணி மகராஜ் கூறுகையில், “இந்து சனாதன தர்மத்தை ஏற்கும் முன்னாள் முஸ்லீம் மதகுரு வசீம் ரிஸ்வியின் முடிவு வரவேற்கத்தக்கது. அகில இந்திய இந்து மகாசபை மற்றும் சாந்த் மகாசபை அவரின் முடிவை வரவேற்கிறது. வசீம் ரிஸ்வி சாஹாப் தற்போது, இந்து சனாதன் தர்மத்தின் ஒரு அங்கமாக இருக்கிறார். அவருக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்’’ என்றார்.

இஸ்லாமியர்களின் புனித நூலான குர் ஆனில் இருந்து வன்முறையைப் போதித்ததாகக் கூறி, சில வசனங்களை நீக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்ததை அடுத்து, வசீம் ரிஸ்விக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவரின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

முகமது நபியை மோசமாக சித்தரித்ததாகக் கூறப்படும் புத்தகத்தை அவர் வெளியிட்டதும் அவருக்கு மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது.

ரிஸ்வி

இந்த சர்ச்சைகள் மற்றும் அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து, இந்து மதத்துக்கு மாறிய ரிஸ்வி, தான் இறந்து விட்டால் தன் உடலை இந்து முறைப்படி தகனம் செய்ய விரும்புவதாகவும், அடக்கம் செய்யக்கூடாது என்றும் அவர் கூறியிருக்கிறார். கடந்தாண்டு நவம்பர் மாதம் ரிஸ்வி ஒரு வீடியோவில், “என்னுடைய உடலை என் இந்து நண்பரான தஸ்னா கோயிலின் சமய நெறியாளர் மஹந்த் நரசிங்கானந்த் சரஸ்வதியிடம் ஒப்படைக்க வேண்டும். அவர் தனது தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும்” என்று பேசியிருந்தார். இந்த நிலையில், அவர் தற்போது இந்து மதத்துக்கு மாறியிருக்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.