விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தின் கூட்டுப் பயிற்சி முகாம் 2021-22 சென்னையில் நவம்பர் 27, 28 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றது. பயிற்சியின் ஒரு பகுதியாக மாணவர்கள் 7 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு தலைமைச் செயலகம், பிராட்வே, வானிலை ஆராய்ச்சி மையம், மெட்ரோ ரயில் நிலையம், அறப்போர் இயக்க அலுவலகம், படப்பிடிப்பு எனப் பல்வேறு இடங்களுக்கு ஸ்பாட் விசிட் செய்தனர். அதில் ஒரு குழுவினர் நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்புவை நேர்காணல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஜெமினி ஹவுஸில் நடந்தது அந்தச் சந்திப்பு. மாணவ நிருபர்களைப் பார்த்ததும் அவ்வளவு உற்சாகம் குஷ்புவின் முகத்தில். எந்த ஊர், என்ன படிக்கிறீர்கள் என ஒவ்வொருவரையும் தனித்தனியாக அக்கறையுடன் விசாரித்த பிறகு, உரையாடல் ஆரம்பமானது.

“வருஷம் 16-ல பார்த்ததுபோல அப்படியே இருக்கீங்களே… எப்படி?’’

“நான் பொதுவாவே ஹேப்பியான பர்சன். எந்தப் பிரச்னை வந்தாலும், `இதுவும் கடந்து போகும்’னு போயிடுவேன். பிரச்னைகளை நினைச்சு தூங்காமலோ, சாப்பிடாமலோ இருந்ததே கிடையாது. நேரத்துக்கு சாப்பிட்ருவேன். படுத்த ரெண்டு நிமிஷத்துல தூங்கிடுவேன். என்னுடைய மகிழ்ச்சியான வாழ்க்கைதான் காரணமாக இருக்கலாம்.’’

“சுந்தர்.சி சார் உங்ககிட்ட புரபோஸ் பண்ணும்போது எப்படி ஃபீல் பண்ணீங்க… அதை நீங்க எதிர்பார்த்தீங்களா?’’

“சத்தியமா இல்லை. எதிர்பாராத சூழல்லதான் அவர் என்கிட்ட புரபோஸ் பண்ணாரு. பிப்ரவரி வந்தா அவர் என்கிட்ட புரபோஸ் பண்ணி 28 வருஷம் ஆகப்போகுது. அவர் புரபோஸ் பண்ண உடனே நான் ஓகே சொல்லிட்டேன். தைரியத்தோட எடுக்கிற முடிவு சிறந்த முடிவா இருக்கும்னு சொல்லுவாங்க. என் விஷயத்துல அது சரியா இருக்கு. அப்போ அவர் ஒரு படம்தான் பண்ணியிருந்தார். அவரோட எதிர்காலம் எப்படி இருக்கும்… என்னோட எதிர்காலம் எப்படி இருக்கும்… எதுவும் தெரியாது. ஆனா, உள்ளுக்குள்ள ஏதோவொரு தைரியம் இருந்தது. ஓ-கே சொல்லிட்டேன். இப்போவரைக்கும் ஹேப்பியா இருக்கோம்!”

“ரஜினி கட்சி ஆரம்பிச்சிருந்தா அதுல சேர்ந்திருப்பீங்களா?”

“நிச்சயமா சேர்ந்திருக்க மாட்டேன். ஏன்னா, நான் ஏற்கெனவே பி.ஜே.பி-யில இருக்கேன். கமல் சார் என்னுடைய நெருங்கிய நண்பர்தான். அவர் கட்சிக்கே நான் போகலையே. அரசியல் வேற, நட்பு வேற!”

“சுயமரியாதை ரொம்ப முக்கியம்னு சொன்னீங்க பா.ஜ.க-வில் யாராவது தப்பு பண்ணினா நீங்க கேள்வி கேட்பீங்களா, இதுவரை கேட்ருக்கீங்களா?’’

“பி.ஜே.பி-யில யாருமே அந்த மாதிரி தப்பு பண்ணது இல்லை. அதிகப்படியான பெண் தலைவர்களை நீங்க பி.ஜே.பி-யிலதான் பார்க்க முடியும். இங்க குடும்ப அரசியல் கிடையாது. யார் வேணாலும் எங்கிருந்து வேணாலும் வரலாம். கீழே இருந்து உழைப்பால மேல வந்தவங்க தப்பு பண்ண வாய்ப்பு இல்லை. நான் காங்கிரஸ் கட்சியில இருந்தப்போ பெங்களூருல ஒரு கூட்டத்துல என் இடுப்புல கை வெச்சுட்டாங்க. ஓங்கி அறைஞ்சுட்டேன். அதுதான் என் குணம். கட்சிக்காக என் குணத்தை மாத்திக்க மாட்டேன். என்கிட்ட யார் தவறா நடந்துகிட்டாலும் என்னோட உடனடி ரியாக்‌ஷன் அதுவாத்தான் இருக்கும்!’’

குஷ்பு

“ஆண் அரசியல்வாதியைக் காட்டிலும் ஒரு பெண் அரசியல்வாதி கட்சி மாறும்போதுதான் அதிக விமர்சனங்கள் வருதுன்னு நினைக்கிறீங்களா?”

“ஆண், பெண்ணுன்னு இல்ல. குஷ்பு கட்சி மாறினாதான் அதிக விமர்சனங்கள் வருது. அது ஏன்னு தெரியல. ஒருவேளை என் மேல அதிக எதிர்பார்ப்பு இருக்கலாம். இவங்க இப்படி பண்ணிட்டாங்களான்ற எண்ணம் இருக்கலாம். ஆனா, எல்லோருடைய ஒப்பீனியனையும் எடுத்துக்கிட்டு வாழ ஆரம்பிச்சுட்டா… நீங்க உங்க வாழ்க்கையை வாழ முடியாது.”

“முதல்வர் மு.க.ஸ்டாலினின் 200 நாள் ஆட்சியைப் பற்றி உங்க கருத்து?’’

“ஆறு மாசத்தை வெச்சு கருத்து சொல்ல முடியாது. ஓர் அரசு புதுசா பொறுப்பேற்கும்போது முதல் ஆறு மாசம் ஹனிமூன் காலம் மாதிரி. அதைவெச்சு எதுவும் சொல்ல முடியாது. இனிமேதான் நிறைய கேள்விகளும் விமர்சனங்களும் வரும். முதல்வர் தொகுதியிலயே முட்டி அளவு மழைத் தண்ணீர் தேங்கி இருக்கு. அதையே இன்னும் சரி பண்ணலயே.’’

“கலைஞர் கருணாநிதிதான் என் அரசியல் வழிகாட்டின்னு சொல்லி இருக்கீங்க… அவரையும் பிரதமர் மோடியையும் ஒப்பிட்டுச் சொல்லுங்களேன்?’’

“நீங்க அப்படி ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாது. மோடி இப்போ நாட்டின் பிரதமரா இருக்கார். அதுக்கு முன்னால குஜராத் முதலமைச்சரா இருந்தார். ஆனா, கலைஞர் 14 வயசுல இருந்து சாகுற வரைக்கும் பொது வாழ்க்கையிலதான் இருந்தார். கலைஞரை யாருடனும் ஒப்பிட முடியாது. ஒரு மாநிலத்தோட முதல்வரையும் நாட்டின் பிரதமரையும் ஒப்பிட்டுப் பார்க்குறது ரொம்ப தப்பா இருக்கும்!”

“பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரிச்சுகிட்டிருக்கு. தடுக்க என்ன வழி?’’

“நாம இதைப் பத்தி பேசிகிட்டேதான் இருக்கோமே ஒழிய மாற்றங்கள் நடக்க மாட்டேங்குது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை விரைவா விசாரிச்சு உடனடியா தீர்ப்பு வழங்கணும். அதுக்கேற்ற பிரத்யேக விரைவு நீதிமன்றங்களை அமைக்கணும். குற்றவாளிகளுக்கு கடுமையான உச்சபட்ச தண்டனைகள் வழங்கப்பட்டாதான் இப்படியான குற்றங்களை நிறுத்த முடியும்.”

“ யாரோட பயோபிக்ல நடிக்க ஆசை?”

“நான் பயோகிராபி புக்ஸ்கூட படிக்க மாட்டேன். நான் பக்கா கமர்ஷியலான ஆள். எனக்கு மசாலா படங்கள் கொடுத்தா ஹேப்பி!”

குஷ்பு

“உங்களுக்கு ஆளுநர் ஆகுற வாய்ப்பு கிடைச்சா எந்த மாநிலத்தைத் தேர்ந்தெடுப்பீங்க?”

“ஒருநாளும் அந்தமாதிரி நான் யோசிச்சதே கிடையாது!”

“ஒரு கட்சியிலிருந்து வேறு கட்சிக்கு மாறும்போது உங்க கொள்கைகள் மாறாதா?”

“நிச்சயமா மாறாது. எல்லா கட்சிகளுக்கும் அடிப்படையான கொள்கை ஒண்ணுதான். நாடு நல்லா இருக்கணும், மாநிலம் நல்லா இருக்கணும். அதுதானே அப்புறம் எப்படி கொள்கை மாறும்.”

“ஜெம்பீம் படம் பாத்துட்டீங்களா?”

“துரதிர்ஷ்டவசமா இன்னும் பார்க்கலை. என் பொண்ணுங்க பார்த்துட்டு படம் நல்லா இருக்குன்னு சொன்னாங்க.”

“உங்க இன்ஸ்பிரேஷன்னு யாரைச் சொல்வீங்க?’’

“நடிகை ஹேமாமாலினிதான் எனக்குப் பெரிய இன்ஸ்பிரேஷன். என் சின்ன வயசுலேருந்து அவங்களைப் பார்த்திருக்கேன். அவங்க வீட்டுக்கு அடிக்கடி போவேன். ஒரு பெண் எப்படி மரியாதையா, கௌரவமா வாழணும்னு அவங்களைப் பார்த்துதான் தெரிஞ்சுகிட்டேன். அவங்க செட்டுக்கு வரும்போது அமிதாப் பச்சன்ல இருந்து வினோத் கண்ணா வரைக்கும் எழுந்து `குட்மார்னிங் ஹேமா ஜி’னு விஷ் பண்ணுவாங்க. நான் சினிமாவுல இருக்கறதுக்கு அவங்கதான் காரணம். அவங்கதான் என்னை சினிமாவுல அறிமுகப்படுத்துனாங்க.”

“காங்கிரஸ் கட்சியின் தொடர் தோல்விக்கான காரணம்னு எதை நினைக்குறீங்க?”

“அவங்களைத் தவிர வேறு யாரா இருக்க முடியும்? அவங்க தோல்விக்கு காரணம் அவங்களேதான்.”

“நீங்கள் தொகுத்து வழங்கின `நிஜங்கள்’ நிகழ்ச்சி ரொம்ப பிரபலமா பேசப்பட்டது. அதுபோல ஒரு ஷோ மறுபடி பண்ணுவீங்களா?’’

“அந்த நிகழ்ச்சி நிறைய பேரோட வாழ்க்கையில மாற்றத்தை ஏற்படுத்துச்சு. ஆனா, திரும்ப அதுமாதிரி ஒரு ஷோ பண்ண மாட்டேன். ஏன்னா அந்த ஷோ முடிச்சுச்சு வீட்டுக்கு வந்தும் அதைப்பற்றிய சிந்தனைதான் ஓடிக்கிட்டிருக்கும். நிறைய கோபம் வரும். அது என்னோட வீட்டுச் சூழலைப் பாதிச்சது. என்னைப் பொறுத்தவரைக்கும் வீடு தனி. வேலை தனி. எங்க வீட்ல நாங்க வாங்கின ஷீல்டோ சினிமா சார்ந்த புகைப்படங்களோகூட இருக்காது, எல்லாம் ஆபீஸ்லதான் இருக்கும். இப்படி இருக்கிற நான் வீட்டுக்குப் போகும்போது மன பாரத்தோடவே போற சூழலை விரும்பல.’’

அண்ணாமலை

Also Read: “2026 தேர்தலில், 150 இடங்களில் தாமரை மலரும்!” – அண்ணாமலை முழக்கத்தின் பின்னணி என்ன..?

“பா.ஜ.க தமிழக தலைவர் அண்ணாமலை 2026 தேர்தல்ல தமிழ்நாட்டுல பா.ஜ.க 150 இடங்களைப் பிடிக்கும்ன்னு சொல்லிருக்காரு… அப்படி வெற்றி பெற்றா யார் முதல்வர்?”

“முதல்வர் வேட்பாளர் யார் என்பதை கட்சிதான் முடிவு பண்ணணும். என்னைப் பொறுத்தளவில் அண்ணாமலை சரியான நபரா இருப்பார். மக்களுக்கு நிறைய நல்லது பண்றார். நல்ல பேர் இருக்கு. தலைமைப் பண்பு இருக்கு. நல்லா படிச்சவர். சட்டம் தெரிஞ்சவர். அதனால என்னோட சாய்ஸ் அண்ணாமலைதான். ”

“வெள்ள பாதிப்புகளைப் பார்வையிடச் சென்ற தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை போட்டோ ஷூட் நடத்தினதா விமர்சனங்கள் வந்ததை எப்படிப் பார்க்கறீங்க?”

“அது போட்டோ ஷூட் கிடையாது. அண்ணாமலைக்கு பின்னால ரெண்டு பேர் நின்னா அந்தத் தெருவுல எவ்வளவு வெள்ளம் இருக்குன்னு தெரியாது. பார்க்குறவங்க கவனம் பின்னால நிற்கிறவங்க மேலதான் இருக்கும். அதனாலதான் பின்னால இருக்குறவங்களை தள்ளச் சொல்லி வீடியோ எடுத்திருக்காங்க. எதிரணியில இருந்துகிட்டு விமர்சனம் பண்றவங்க பண்ணிட்டுப் போகட்டும். அண்ணாமலை நல்லது பண்றாரு!”

“பிரதமர் மோடி மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் வாங்குனதுக்கான காரணம் என்ன?’’

“அந்த மூணும் விவசாயிகளோட நலனுக்காகக் கொண்டு வந்த‌ திட்டங்கள். ஆனா, புரிஞ்சிக்காம போராடினாங்க. நடுவுல இருக்கிறவங்க பிரச்னை பண்ணாங்க. இந்தப் போராட்டங்களால விவசாயிகள்தான் பாதிக்கப்படுறாங்க. அவங்க பாதிக்கப்படக் கூடாதுன்னுதான் வாபஸ் வாங்கிருக்காங்க.’’

“உள்ளாட்சித் தேர்தல்ல நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் நிறைய இடங்கள்ல வெற்றி பெற்றதை எப்படிப் பார்க்குறீங்க?’’

“விஜய் ரொம்ப நல்லவரு. அவர் சார்பா தேர்தல்ல நின்னவங்க ஜெயிச்சிருக்காங்க. அந்த வெற்றி சந்தோஷமா இருக்கு. யாரும் ஆசைப்படாலும் அரசியலுக்கு வரலாம். ஆசைப்படுறவங்க தயவு செஞ்சு வாங்கன்னுதான் நான் சொல்லுவேன்.’’

“உங்க கணவர், சீமானுக்கு பணம் கொடுப்பதா ஒரு சர்ச்சை வெளியாச்சே?’’

“அப்படியா? இங்கு பல பேர் ஏதோ பக்கத்துல இருந்து பார்த்த மாதிரியே பேசுவாங்க. ரெண்டு பேரும் ரொம்ப நல்ல நண்பர்கள். அதை நான் மறுக்கலை. ரெண்டுபேருமே மணிவண்ணன் சார்கிட்ட அசிஸ்டன்டா இருந்தவங்க… சீமான் என் கணவருக்கு சீனியர். நான் என் கணவருக்கு அறிமுகமாகுறதுக்கு முன்னாடியே என் கணவரைப் பத்தி சீமானுக்கு நல்லா தெரியும். இதுபோன்ற வதந்திகள் சீமானைத்தான் காயப்படுத்தும்.”

சுந்தர் சி

Also Read: “வெளிப்படையாப் பேசுறதை குஷ்பு குறைச்சுக்கணும்!”

“அரசியல்ல ஆண்- பெண் ஏற்றத்தாழ்வு இருக்குன்னு நினைக்கிறீங்களா?”

“நிச்சயமா இருக்கு. ஒரு பெண் சொல்வதை ஆண் கேட்கக் கூடாதுங்கிற ஆணாதிக்க மனநிலை இன்னமும் இருக்கு. அந்த மனப்பான்மையை ஜெயலலிதா அம்மாவால மட்டும்தான் உடைக்க முடிஞ்சது. மத்தபடி இன்னும் ஆணாதிக்கம் இருந்துட்டுதான் இருக்கு. அதையெல்லாம் தாண்டிதான் நாம வரணும்.”

“அரசியல்ல பிடிச்சது, பிடிக்காதது?’’

“நம் கருத்துகளை வெளிப்படுத்தவும் மக்களுக்கு நல்லது செய்யவும் பெரிய களம்னா அது அரசியல்தான். அது எனக்குப் பிடிச்சது. பிடிக்காததுன்னா மக்கள் ரொம்ப ஜட்ஜ்மென்டலா இருக்கிறது.’’

“நீங்க குஷ்பு இட்லி சாப்பிடிருக்கீங்களா?’’

“எனக்கு இட்லியே பிடிக்காது. என்னைப் பொறுத்தவரைக்கும் இட்லின்னா உடம்பு சரி இல்லாதப்போ சாப்பிடற ஓர் உணவு. அதனாலேயே அது பிடிக்காம போயிருச்சு. ஹைதராபாத்ல மட்டும் குறிப்பிட்ட ஒரு கடைல இட்லி கேட்டு வாங்கிச் சாப்பிடுவேன்.”

“இப்போதைய இளம் ஹீரோக்கள்ல யார் கூட நடிக்க ஆசைப்படுறீங்க, யாரை ரொம்ப பிரமிப்பா பார்க்கறீங்க?’’

விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன்.

“காரணம்?”

“தெரியலை. சிவகார்த்திகேயன் ரொம்ப சிம்பிள். பர்சனலா பிடிக்கும். அதேபோல விஜய்சேதுபதி நடிப்புக்கு நான் பெரிய ஃபேன். அதை அவர்கிட்டயே நிறையமுறை சொல்லியிருக்கேன். சமீபத்துல டாக்டர் படம் பார்த்துட்டு சிவகார்த்திகேயனுக்கு மெசேஜ் பண்ணேன். ரொம்ப பிடிச்சிருந்தது. விஜய் சேதுபதி ஏதாவதொரு ஃப்ரேம் வந்தாலும் பார்த்துட்டு மெசேஜ் அனுப்பிருவேன். நல்ல படம் வித்தியாசமான கேரக்டர் இருந்தா சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதிகூட நடிப்பேன். தனுஷ், சிம்பு ரெண்டுபேருமே என்னுடைய பெரிய ஃபேன்ஸ். அதைக் கேட்கும்போது சந்தோஷமா இருக்கும். ஆனா, இப்போ காலங்கள் மாறுதில்லையா? நான் அவங்களுடைய ஃபேன் ஆகிட்டேன். தனுஷுக்கு ரெண்டாவது முறையா நேஷனல் அவார்டு வந்தபோது நான் அவ்வளவு சந்தோஷப்பட்டேன். அது ஈஸி கிடையாது. தனுஷ் சிறந்த நடிகர். அவரை சின்ன வயசுல இருந்து தெரியும். அவங்க அப்பா படத்துல நடிச்சிருக்கேன். அதனால தனுஷ் என்னோட ஃபேவரைட் ஆக்டர்னு சொல்றதில்லை… ஏன்னா அவர் எங்க வீட்ல ஒருத்தரா இருக்கார். சிம்புவும் அதே மாதிரிதான்!”

விகடன் மாணவப் பத்திரிகையாளர்கள் கேட்ட இன்னும் சுவாரஸ்ய கேள்விகளையும், அவற்றுக்கு குஷ்பு அளித்த அசத்தல் பதில்களையும் நாளை வெளிவரும் அவள் விகடன் இதழில் விரிவாகப் படிக்கலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.