தருமபுரியின் பாப்பிரெட்டிப்பட்டி அருகே 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இருளர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த வீடுகளில், மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளன. தொடர் மழையால் வீட்டுக்குள் தண்ணீர் கசிந்துக்கொண்டே இருப்பதால், இரவு நேரங்களில் உறங்குவதற்குகூட மக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த இருளப்பட்டி ஊராட்சியில் இருளப்பட்டி, நாகலூர், பீரங்கி நகர், இந்திரா நகர் உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. இதில் இந்திரா நகர், பீரங்கி நகர் ஆகிய இரண்டு பகுதிகளிலும் சுமார் 300-க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். அன்றாடம் தினக் கூலி வேலை செய்தும், வெளியூர்களுக்கு சென்று கூலி வேலை செய்தும் அவர்கள் தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இந்த மக்களுக்கு கழிவுநீர் கால்வாய் தொடங்கி குடிநீர் வரை எந்த அடிப்படை வசதிகளும் இல்லாததால், அடிப்படை வாழ்வாதாரத்துக்கே தவித்து வருகின்றனர். இந்த இருளர் சமூக மக்களுக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசு இந்திரா நினைவு குடியிருப்பு சார்பில் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன.

image

அன்றைய காலத்தில் சுமார் 100 குடும்பங்கள் மட்டுமே இருந்து வந்தனர். தற்போது 30 ஆண்டுகளில் கிராமம் வளர்ச்சி பெற்று ஒவ்வொரு குடும்பத்திலும் 3 பேர், இரண்டு பேர் என இருந்து வருகின்றனர். போதிய வருவாய் இல்லாத காரணத்தால் இடவசதி இல்லாததால், ஒரே வீட்டில் இரண்டு குடும்பங்கள், மூன்று குடும்பங்கள் வசித்து வருகின்ற நிலை இருந்து வருகிறது. மேலும் 30 ஆண்டுகளுக்கு கட்டப்பட்ட குடியிருப்புகள் என்பதால் மேற்கூரை முழுவதுமாக பெயர்ந்து விழுந்துள்ளது. மழைக்  காலங்களில் இந்த வீடுகளின் மேற்கூரைகள் பெயர்ந்து தூங்குபவர்கள் மீது விழுந்து சிலர் காயமடைந்த சம்பவங்களும் நடந்துள்ளன.

image

போதிய வருவாய் இல்லாத காரணத்தால் இந்த வீடுகளின் மேற்கூரைகளில் புதுப்பித்துக் கொள்ள முடியாத இம்மக்கள், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வீடுகளில் ஏற்பட்ட பழுதுகளை நீக்க அரசு உதவ வேண்டும் என அரசு அதிகாரிகள், அமைச்சர், முதலமைச்சரின் தனிப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு கடந்த 20 ஆண்டுகளாக கோரிக்கை மனு அளித்து வருவதாக தெரிவிக்கின்றனர். அதேபோல் ‘தேர்தல் நேரங்களில் வாக்கு சேகரிக்க வருபவர்களிடம் எங்களுக்குரிய பிரச்சனைகளை எடுத்துச் சொல்லுகின்றபோது வெற்றி பெற்றவுடன் உங்களது தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து தருகிறோம் என்று கூறி வாக்குகளை மட்டும் வாங்கிச் செல்கின்றனர். இதுவரையில் யாரும் திரும்பிப் பார்க்கவில்லை’ என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்கின்றனர்.

image

image

மேலும் இரவு நேரங்களில் வீடு விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் வீட்டில் இருக்கும் இருவர் உறங்கும்போது இருவர் விழித்து இருக்கின்ற சூழல் இருந்து வருகிறது. குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோரை வெளியில் தாழ்வாரத்தின் அருகில் உள்ள கோயிலிலும் தங்கவைத்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வீட்டின் மேற்கூரையை புதுப்பித்து தர வேண்டுமென மனு அளித்து காத்திருக்கின்ற இந்த இருளர் இன மக்கள், தமிழ்நாடு முதலமைச்சர் மீது அதீத நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி: செய்தி எதிரொலி: அடிப்படை வசதிகளால் புத்துயிா் பெறும் இருளர் குடியிருப்பு

image

ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து தமிழக தமிழ்நாடு முதலமைச்சர் இருளர், பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்ட சமூகத்தின் இழிநிலையை கூர்ந்து கவனித்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருவதை சுட்டிக்காட்டி, தங்களுடைய தேவைகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்தில் எடுத்து, இந்த பழுதான வீடுகளை முற்றிலுமாக அப்புறப்படுத்திவிட்டு புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என இருளர் சமூக மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

– சே. விவேகானந்தன்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.