உலகையே அச்சுறுத்தி வருகிறது கொரோனா தொற்று நோயின் ‘ஒமிக்ரான்’ திரிபு. தென் ஆப்பிரிக்க நாட்டில் முதன் முதலில் அடையாளம் காணப்பட்ட இந்த திரிபு கவலை அளிக்கும் விதமாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.  

image

இந்திய அரசு அந்தந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்திருந்தது. அதன்படி தமிழ்நாடு அரசு மாநிலத்தில் உள்ள நான்கு சர்வதேச விமான நிலையத்திலும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 

இந்த உருமாறிய கொரோனா தொற்றுக்கு எதிராக தற்போது பயன்பாட்டில் உள்ள, மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்ற கொரோனா தடுப்பூசியின் செயல்திறன் எப்படி இருக்கும்? அது குறித்து விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? என்பதை பார்ப்போம்.

image

ஆண்ட்ரூ பொல்லார்ட் , இயக்குனர் – ஆக்ஸ்போர்டு தடுப்பூசி குழுமம்

“இதனை ஆரம்ப கட்டத்திலேயே சொல்லிவிட முடியாது. 2 முதல் 3 வார காலம் வரை போனால் தான் தடுப்பூசியின் செயல்திறன் எப்படி இந்த புதிய திரிபுக்கு எதிராக எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள முடியும். இப்போதைக்கு இந்த உருமாறிய கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி நிச்சயம் செயல்படும் என்ற நம்பிக்கை உள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மக்களிடையே மீண்டும் கொரோனா தொற்று பரவும் என்பதற்கு சாத்தியமில்லை” என தெரிவித்துள்ளார். 

image

கேலம் செம்பிள் (Calum Semple), பிரிட்டன் அரசாங்கத்தின் அவசர நிலைகளுக்கான அறிவியல் ஆலோசனைக் குழு நுண்ணுயிரியலாளர்

“தடுப்பூசி மூலம் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி கொரோனா தொற்றின் மிகக் கடுமையான பாதிப்பிலிருந்து தடுக்கக் கூடியது. லேசான அறிகுறிகள் இருக்கலாமே தவிர மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவிற்கு பாதிப்புகள் இருக்காது. இந்த உருமாறிய தொற்றின் பரவல் வேகமாக இல்லாமல் இருந்தால் அதில் கிடைக்கும் நேரத்தின் மூலம் விஞ்ஞானிகளால் இந்த வைரஸ் கவலை தரும் வகையில் இருக்கிறதா என்பதை புரிந்து கொள்ள முடியும்” என தெரிவித்துள்ளார். 

image

பால் பர்டன், தலைமை மருத்துவ அதிகாரிModerna Inc. 

“இந்த உருமாறிய கொரோனா தொற்று தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளின் செயல்திறனில் இருந்து தப்பிக்க கூடும் என்ற சந்தேகம் உள்ளது. அடுத்த இரண்டு வாரங்களில் அது தெரிந்துவிடும். அது நடந்தால் வரும் புத்தாண்டுக்குள் மறுசீரமைக்கப்பட்ட தடுப்பூசி டோஸ்கள் தயாராகிவிடும். இது ஆபத்தான வைரஸாக இருந்தாலும் அதனை முறியடிப்பதற்கான தற்காப்பு ஆயுதங்கள் நம்மிடம் உள்ளன” என தெரிவித்துள்ளார். 

image

ரன்தீப் குலேரியா, எய்ம்ஸ் தலைவர்

“உருமாறிய புதிய கொரோனா தொற்றான ஒமிக்ரான் வைரஸில் ஸ்பைக் புரதத்தில் மட்டுமே 30க்கும் மேற்பட்ட பிறழ்வுகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த ஸ்பைக் புரதத்திற்கு எதிராக நோய் தடுப்பாற்றலை கொடுக்கின்ற பணியை தான் பெரும்பாலான கொரோனா தடுப்பூசிகள் செய்து வருகின்றன. ஆனால் அந்த தடுப்பூசியின் செயல்திறனை ஒமிக்ரான் வைரஸில் உள்ள அதிக அளவிலான ஸ்பைக் புரதங்கள் குறைக்க வாய்ப்புகள் உள்ளன. 

வரும் நாட்களில் இந்த புதிய தொற்றுக்கு எதிராக தடுப்பூசியின் செயல்திறனை மதிப்பீடு செய்ய வேண்டி உள்ளது. மக்கள் அனைவரும் நோய் தடுப்பு பாதுகாப்பு கவசங்களை தொடர்ந்து அணியுமாறு கேட்டுக் கொள்கிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

image

சமிரன் பாண்டா, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தொற்றுநோயியல் மற்றும் தொற்று நோய்கள் பிரிவு தலைவர்

“mRNA வகை தடுப்பூசிகள் தான் ஸ்பைக் புரதத்தை சார்ந்து இயங்குகின்றன. அதனால் அந்த வகை தடுப்பூசிகள் தான் மாற்றியமைக்கப்பட வேண்டி உள்ளது. ஆனால், இந்த விதி எல்லா தடுப்பூசிகளுக்கும் பொருந்தாது. கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் என இரண்டும் நோய் எதிர்ப்பு செயல்திறனை வேறு வகையில் வழங்குகின்றன” என தெரிவித்துள்ளார். 

கோவிஷீல்ட் – Live-attenuated Vaccine வகையை சார்ந்தது. இது பாதிப்புகளை ஏற்படுத்தாத செயல் திறன் குன்றிய வீரியமில்லாத கொரோனா வைரஸை கொண்டு உருவாக்கப்பட்ட தடுப்பூசி. 

கோவாக்சின் – Inactivated Vaccine வகையை சார்ந்தது. இது உயிர் நீக்கப்பட்ட கொரோனா வைரஸ்களை கொண்டு உருவாக்கப்பட்ட தடுப்பூசி. 

இப்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகள் பகுதி அளவில் தான் புதிய திரிபுக்கு எதிராக செயல்படும் என தெரிவித்துள்ளார் முன்னாள் ஐசிஎம்ஆர் விஞ்ஞானி ராமன் கங்காகேத்கர். மறுபக்கம் தென் ஆப்பிரிக்க சுகாதார அமைச்சர் இந்த புதிய திரிபுக்கு எதிராக தடுப்பூசிகள் செயல்திறன் நன்றாகவே உள்ளதாக தெரிவித்துள்ளார். 

இவர்கள் அனைவரும் சொல்வதை வைத்து பார்த்தால் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை காட்டிலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு தான் பாதிப்பு அதிகம் இருக்கும் என தெரிகிறது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.