திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், எலப்பநாயுடுப்பேட்டை ஊராட்சியில் அமைந்திருக்கிறது காந்தி கிராமம். இந்த கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். கனமழை காரணமாக கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால், ஆற்றிலிருந்து வரும் கால்வாய் காந்தி கிராமத்தின் வழியே சென்று பூண்டி ஏரியில் சென்று சேருகிறது.

மழை பாதிப்பு

இதனால் கிராமத்துக்கு வரும் சாலையில் இடுப்பளவு தண்ணீர் செல்கிறது. அதன் காரணமாக, அந்த வழியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆபத்தை உணராமல் ஊர் சிறுவர்கள் அதில் நீச்சலடித்து விளையாடி வருகின்றனர்.

மருத்துவமனை, நியாயவிலைக்கடை, வங்கி என அத்தியாவசிய தேவைகளுக்காகச் செல்வதற்குக் கூட ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு வெள்ளநீரைக் கடந்து செல்லும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர். வெள்ள நீர் காந்தி கிராம மக்களின் வசிப்பிடங்களுக்குள் புகுந்து விட்டதால், மக்கள் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு சில தன்னார்வ அமைப்பினர் உணவு பொட்டலங்கள், வழங்கியும் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்தும் உதவி வருகின்றனர்.

மழை பாதிப்பு

அதன் காரணமாக, ஒரு சில குடும்பங்கள் தெருவில் தார்ப்பாய் போட்டு, தற்காலிக கூடாரம் அமைத்து குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர்.

மழை வெள்ள பாதிப்பு குறித்து நம்மிடம் பேசிய அந்த கிராமத்தைச் சேர்ந்த கஸ்தூரி – பலராமன் தம்பதி, “ஆடு மேய்த்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் தான் எங்கள் குடும்பத்தை நடத்தி வருகிறோம். இந்த நிலையில், இந்த மழையால் நாங்கள் வளர்த்து வந்த ஆடுகளில் 20-க்கும் மேற்பட்ட ஆடுகள் வெள்ளநீரில் அடித்துச் சென்றும், நோய்த்தாக்கியும், பல ஆடுகள் தீவனம் இல்லாமலும் இறந்து விட்டன.

காந்தி கிராம மக்கள்

எங்களுக்கு இந்தத் தொழிலை விட்டால் வேறு தொழில் தெரியாது. அதனால், எங்களால் வேறு தொழிலுக்கும் செல்லமுடியாது. எனவே, மழையால் பாதிக்கப்பட்ட எங்களுக்கு அரசு உதவ வேண்டும்” என்று கண்ணீர் மல்கத் தெரிவித்தனர்.

காந்தி கிராம மக்கள்

“வருடந்தோறும் ஏற்படும் இந்த வெள்ள பாதிப்பிலிருந்து, மீண்டு வர ஒரே வழி புதூர் கிராமத்தின் வழியே எங்களுக்குச் சாலை அமைத்துத் தருவது மட்டும் தான்” எனக்கூறும் காந்தி கிராம மக்கள், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்திருக்கிறார்கள்.

– ஏ.சூர்யா

(மாணவப் பத்திரிகையாளர்)

Also Read: திருவள்ளூர்: ரெட் அலர்ட்; தரைப்பாலத்தின் மேலேயே கரைபுரண்டு ஓடும் வெள்ளம்! – வேதனையில் மக்கள்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.