“மாலை மரியாதை” – இந்த வார்த்தையை நாம் கேட்காமல் இருந்திருக்க முடியாது. குறிப்பாக, பூமாலை இல்லாமல் நம் வாழ்வில் எந்த சடங்குகளும் நடப்பதில்லை. சுப, துக்க காரியங்கள் எதுவாக இருந்தாலும் பூமாலைக்குதான் முதலிடம். ஒருவரை கௌரவிக்க வேண்டும் என்று சொன்னால், அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது என்கிற பண்பாடு நம்முடைய வாழ்வில் கலந்த ஒரு மரபாகவே இருந்து வருகிறது.

image

பூமாலை அணிவித்து மரியாதை செலுத்துவது, வழிபடுவது உள்ளிட்ட வழக்கம் எந்த நூற்றாண்டிலிருந்து தொடங்கியது என்ற ஆராய்ச்சிக்கெல்லாம் போக வேண்டாம். நம் வாழ்வில் ஏற்படும் அனைத்து சுப நிகழ்வுகளுக்கும் பூ, பூமாலை இல்லாமல் நடைபெறுவது கிடையாது என்பது மட்டும் தெளிவு. உயிர் மூச்சு நின்ற பிறகும் நம்மை கௌரவிக்கும் ஒரு பொருள் எது என்று சொன்னால், அது பூமாலைதான். இப்படி எல்லா நிலைகளிலும் நம் வாழ்நாளில் ஒன்றிப்போயிருக்கும் பூமாலை தொடுப்பவர்களை பற்றிதான் இந்த அத்தியாயத்தில் நாம் பார்க்கப் போகிறோம்.

விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் சுற்றி உள்ள பகுதிகளில் பூக்கடைகள் ஏராளம். அதிலும் பெரும்பாலும் துக்க நிகழ்வுகளுக்கு செல்வதற்கு மட்டும்தான் பூமாலை எப்போதும் தயாராகவே இருக்கும். கோயில் திருவிழாக்கள், திருமணம், புதுமனை புகுவிழா என எவ்வளவோ நிகழ்வுகள் இருந்தாலும், துக்க நிகழ்வுக்குதான் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

image

மாலை தொடுப்பது என்பது ஒரு கலை. பெரும்பாலும் பூக்கள் கட்டுவது பெண்கள்தான் என்று பலரும் கருதக் கூடும். ஆனால், பூக்கள் கட்டுவது, மாலை கட்டுவதில் பெண்ணுக்கு நிகராக ஆண்கள் இருந்து வருவதுண்டு. அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ஜெயமுருகன்.

“சொந்த ஊர் விழுப்புரம் பக்கத்துல தாங்க. நகரத்துக்கு வரணும்னா பத்து கிலோமீட்டர் தூரம் வரைக்கும் வரணும். பிளஸ் டூ படிச்சேன். அதுக்கப்புறம் எல்லோரையும் போல பசங்களோட ஊர் சுத்திட்டு இருந்தேன். அங்க இங்கன்னு வம்பு வாங்கிவிட்டு சுத்திக்கிட்டு கிடந்ததை பார்த்த சில பேர், என்னைக் கொண்டுவந்து விழுப்புரத்தில் ஒரு பூமாலை கட்டுற கடையில் வேலைக்கு சேர்த்துவிட்டாங்க. இது ஒண்ணும் எங்களுக்கு பரம்பரை பரம்பரையாக செய்யுற தொழிலில் இல்லீங்க. அடங்காம சுத்திட்டு இருந்த எனக்கு ஒரு பொறுப்பு வரணும்னு கொண்டுவந்து வேலைக்கு சேர்த்தாங்க.

image

அப்போ தினமும் கடையை திறந்து பெருக்கி, சுத்தம் பண்ணி வைக்கிறதுதாங்க வேலை. கிட்டத்தட்ட ஒரு வருஷம் கடை திறக்கவும் பெருக்கவும் மட்டும் தாங்க இருந்தேன். அப்போ அந்தக் கடையில ஐந்தாறு பேரு வேலை செஞ்சிட்டு இருந்தாங்க. திருவண்ணாமலை, திண்டிவனம், ஓசூர் பஸ்ல பூ மூட்டை வரும். அதைக் கொண்டு போய் கடையில் வைக்கணும். அப்புறம் வாழமட்ட நாரெடுத்து பதமா பிடிச்சு கட்டு கட்டி வைக்கணும். ஏன்னா, வாழை நாரில்தான் மாலை கட்டுவாங்க. அதுதான் சுலபமா இருக்கும். இப்பதான் கம்பி ஊசி கயிறு எல்லாம் வந்துடுச்சு.

90களில் ஒரு கிலோ சம்பங்கி பூ 20 ரூபாய்க்கும், ஒரு கிலோ ரோஜா பூ 25 ரூபாய்க்கும், சாமந்தி 15 ரூபாய்க்கும் வித்துச்சு. ஆனா இன்னைக்கு நிலைமை அப்படி இல்லை. சாதாரணமா சாமந்தி பூ ஒரு கிலோ 100 ரூபாய்; ரோசாப்பூ 150 ரூபாய்; மல்லி 700 ரூபாய் வரைக்கும்கூட விக்கிறாங்க. அப்படி வாங்கிட்டு வர்ற பூவுல மாலை கட்டி, அதுதான் இங்க தொங்கவிட்டு விற்பனை பண்றோம்.

அன்னைக்கு 20 ரூபாய், 30 ரூபாய்க்கு வித்த மாலை இன்னிக்கு 100 ரூபாய், 150-க்கும், 200 ரூபாய் வரை விக்கும். அப்பல்லாம் 20 ரூபாய் எனக்கு ஒரு நாளைக்கு கூலி. 15 ரூபாயிலிருந்து 20 வரைக்கும் கூலியை தருவாங்க. அதே மாலை கட்டுற பெரிய வேலைக்காரர்கள் இருந்தால் 100 ரூபா தருவாங்க. அப்போ விலைவாசி எல்லாம் இப்போ இருக்கற மாதிரி இல்லைங்க. ரொம்ப கம்மி. சாதாரணமா சொல்லணும்னா கூலி கொடுக்குற 25 ரூபாய வச்சுக்கிட்டு ஒரு குடும்பமே நடத்தலாம். ஆனா, இப்போ நினைச்சு கூட பாக்க முடியல.

image

பூமாலையை துக்க நிகழ்ச்சிக்கு வாங்கிட்டுப் போறவங்கதான் அதிகம். இதுவும் ஒரு வகையில் நிரந்தர வருமானம்னு கூட சொல்லலாம். ஒரு நகரத்தில் தினமும் ஒரு நாளைக்கு குறைந்தது ஐந்து பேராவது இறப்பாங்க. நிறைய நேரம் நம்ம சொல்ற விலையும், வாங்க வர்றவங்க கிட்ட பேசுற பேரமும் நிறைய வித்தியாசப்படும். ஒரு மாலைக்கு 200 ரூபாய்னு சொன்னா, அவரு 50 ரூபாயிலிருந்து ஆரம்பிப்பார். அப்படி இப்படின்னு ஒரு வழியா 150 ரூபாய் கிட்ட வந்து நிக்கும். பெருசா வருமானம் அப்படின்னு சொன்னா, இறந்து போனவர்களுக்கு பாடை கட்டறத்தில் தாங்க கிடைக்கும். 90-களில் 1000 ரூபாய், 1500 ரூபாய்க்கு பாடை கட்டுவோம். ஆனா, இப்போ 15,000 ரூபாய் தொடங்கி 1 லட்சம் லட்சம் வரைக்கும் ஆகும். சில பேர் இறந்து போனவர்களுக்கு பாடை கட்டுவாங்க. அது கூட இப்பெல்லாம் இல்லைங்க. இப்ப எல்லாம் நிறைய ஆம்புலன்ஸ், சவ ஊர்வலம் வண்டி-ன்னு வந்துடுச்சு. அதனால பாடை கட்டுற வேலையே இல்லாம போயிடுச்சு.

அங்க இங்கன்னு வேலை செஞ்சு சொந்தமா இப்ப நானே ஒரு கடை வச்சுட்டேன். ஒரு நாளைக்கு 10,000 ரூபாய் முதலீடுக்கு வச்சாதான் 1000 ரூபாய் சம்பாதிக்க முடியும். என் கடையில 10 பேர் வேலை செய்யறாங்க. ஒரு ஆளுக்கு 600 ரூபாயிலிருந்து சம்பளம் கொடுக்கிறேன். ஏதாவது நல்ல வியாபாரம் இருந்தா பரவாயில்லை… மழை, அது இது-ன்னு வருஷத்தில் ஒன்றரை மாசம் வேலை இல்லாமதான் கிடப்போம். பூ விலை ஏறிடுச்சுன்னா மாலை விக்கிறது ரொம்ப சிரமம்ங்க. பூ… ஒருநாள், அதிகபட்சம் இரண்டு நாள்தான் தாங்கும். அதுக்கு மேல கீழதான் கொட்டணும். அப்படியும் நிறைய நஷ்டம் எங்களுக்கு வந்து கொண்டேதான் இருக்கும். என்ன… ஒரு திருப்தி. வாழ்வோ சாவோ, அதுல நாங்க கட்டுற மாலை முதலிடத்தில் இருக்குது. அவ்வளவுதாங்க” என்றார் ஜெயமுருகன்.

image

பூ வியாபாரம் எல்லா ஊர்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒவ்வொரு ஊருக்கும் வித்தியாசப்படுவது உண்டு. போக்குவரத்து செலவுதான் பூ விலையை நிர்ணயிக்கும் என்கின்றனர் பூ வியாபாரிகள்.

பூ உற்பத்தியும் ஒரு வகை விவசாயம்தான். மழைக்காலங்களில் பூ உற்பத்தி எல்லா நாட்களைப் போலவும் இருப்பதில்லை. அப்படி உற்பத்தி குறையும்போது விலை அதிகமாகிறது. இயற்கைதான், குறிப்பாக பூமாலையை ரசித்துப் பார்க்கிற ஓர் இடம் என்றால், அது திருமண விழாக்கள்தான். இரவு வரவேற்புக்கு ஒருவிதமாகவும், காலையில முகூர்த்தத்துக்கு வேறொரு மாதிரியாகவும் புதுப்புது வடிவமைப்புகளில் திருமண மாலை செய்யும் வெங்கடாசலத்திடம் பேசினேன்.

“பள்ளிப் படிப்பு முடிக்கும்போது அப்பா சைக்கிள்ல பூ விக்கிற வேலைதான் செஞ்சிட்டு இருந்தார். கொஞ்சம் கொஞ்சமா காசு பணம் சேர்த்து சொந்தமா ஒரு கடை வைத்திருந்தார். அப்போ அப்பாவுக்கு உதவியா நானும் வேலைக்கு போவேன். திருமண மாலை கட்டுறதான் எங்க ஸ்பெஷல். சாதாரணமா ஒரு திருமண நாள் இரவு பொண்ணு அழைப்புக்கு மாலை, ஜடை, கை செண்டு… காலையில் முகூர்த்தம் மாலை, மாத்து மாலை அப்படின்னு குறைந்தபட்சம் 1000 ரூபாய் ஆகும். அதுவே, கொஞ்சம் பெரிய கல்யாணம் அப்படின்னா 15,000 ரூபாய் வரைக்கும் செய்து கொடுப்போம்.

image

ஆனா, இப்ப எல்லாம் புதுப்புது டிசைனில் மாலை வந்துடுச்சு. கடைக்காரர்களுக்கு பெருசா லாபம்னு ஒண்ணும் சொல்ல முடியல. சாதாரணமா ஒரு ஜோடி கல்யாண மாலை செய்வதற்கு கூலி 700 ரூபாய். மாலை விலை 3,000 ரூபாய். இதுல பூ, ஜரிகை அப்படின்னு அது கொஞ்சம் காசு போயிடும். எல்லாம் போக மீதி கடைக்காரர்களுக்கு கிடைக்கும். நிறைய பேர் இப்ப வேலைக்கு வர்றாங்க. ஆனா கூலிதான் எங்களால கொடுக்க முடியல. அப்பல்லாம் கல்யாண வேலை அப்படின்னா இரவு பகலாக கட்டுவோம். ஒரு கல்யாண வேலைக்கு 6 பேர் வேலை செய்வோம். இப்ப எல்லாமே நவீனமயமாகிப் போயிடுச்சு.

எங்களுக்கு மதுரை, திருச்சி, சேலம், ஆத்தூர்… இந்தப் பக்கத்தில் இருந்துதான் பெரும்பாலும் பூ வரும். விரிச்சி, கோழிக்கொண்ட பூ, சாமந்தி இதுபோல பூக்கள் பக்கத்துல இருக்கு ஊர்களில் கிடைக்கும். இன்னைக்கு ஒரு கிலோ மல்லி பூ 600 ரூபாய்; ஒரு கிலோ சாமந்தி பூ 140 ரூபாய்; ஒரு கிலோ சம்பங்கி பூ 140 ரூபாய்; பன்னீர் ரோஜா இருந்தா 150 ரூபா; பட்டன் ரோசா இருந்தா 140 ரூபாய். ஆனா நாங்க கட்டிக் கொடுக்கிற மாலையை 200 ரூபா அப்படின்னு சொன்னா, வாங்குறவங்க மேலையும் கீழையும் பார்ப்பாங்க. பூ விக்கிற விலை அவங்களுக்குத் தெரியாது.

இந்த ஊர்ல மட்டும் 500 குடும்பம் மாலை கட்டுற வேலையை நம்பி இருக்குது. காலம் மாற மாற தொழில்நுட்பம் கூடிக்கிட்டே போய் புதுசு புதுசா வேலை வந்திருச்சு. எப்படியோ ஒரு மாலை செஞ்சு கொடுத்துட்டு, அந்தத் திருமண தம்பதி நல்லா இருக்குறதைப் பார்க்கும்போது நமக்கு ஒரு பெரிய சந்தோஷம். இப்படியேதான் ஒவ்வொரு தம்பதிகளுக்கும் மாலை செய்து கொடுத்துவிட்டு நாங்களும் நிம்மதியா வாழ்ந்து கொண்டிருக்கிறோம்: என்றார் வெங்கடாசலம்.

– ஜோதி நரசிம்மன்

முந்தைய அத்தியாயம் > எளியோரின் வலிமைக் கதைகள் 5 – “இப்போ கம்மியான செய்கூலிதான் வருது; சேதாரம் தர்றதே இல்லை!”

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.