நெல்லை மாநகர கட்டுப்பாட்டிலிருக்கும் பாளை பஸ் நிலையம் அருகே வேய்ந்தான் குளம் அமைந்திருக்கிறது. இந்தக் குளத்தில் ஒரு பகுதி புதிய பஸ் நிலையமாகச் செயல்படுகிறது. இந்த சுற்றுவட்டாரப் பகுதியின் நிலத்தடி நீருக்கு உதவிய இந்த குளம், கடந்த பல ஆண்டுகளாகப் பராமரிப்பின்றி தூர் வாரப்படாமல் இருந்து வந்தது. அதனால், குளம் மண் மேடாகி குப்பை கொட்டும் இடமாக மாறியது.

வேய்ந்தான் குளம்

இந்த நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஷில்பா பிரபாகர் சதீஷ் கலெக்டராக இருந்தபோது இந்த குளம் உட்பட மாநகரிலிருக்கும் பத்து குளங்கள் குடிமராமத்து திட்டத்தின் கீழ் பல்வேறு பொதுநல அமைப்புகளின் நிதி பங்களிப்புடன் தூர்வாரப்பட்டது. அதன் பலனாக பத்து குளங்களும் மீண்டும் உயிர்பெற்றன. குடிமராமத்து பணியால், இந்தக் குளத்தின் மணல் திட்டுகளிலிருந்த மரங்களில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பறவைகள் அதிக அளவில் முகாமிட்டன.

அதைத் தொடர்ந்து, மழைநீர் பாதுகாப்பு அமைப்பினர், மாவட்ட கலெக்டர் விஷ்ணு, மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன் ஆகியோருடன் இணைந்து, இந்த குளத்தில் முகாமிடும் பறவைகள் குறித்த விளக்கப் பதாகைகளைக் குளத்தின் முகப்பில் வைத்தனர். இதனால் பொதுமக்களும் இங்கு வரும் பறவைகளைப் பார்த்துச் சென்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த குளத்துக்கு மழைக்காலங்களில் போதிய அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இருப்பினும், குளம் நிரம்பி மறுகால் பாயாத நிலைமை நீடித்து வந்தது. இந்த நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மீண்டும் குளத்தைத் தூர்வாரும் பணி நடந்தது. அப்போது, குளத்தின் மையப்பகுதி 8 அடி அளவுக்கு ஆழப்படுத்தப்பட்டது.

வேய்ந்தான் குளம்

அதைத் தொடர்ந்து, தற்போது குளத்தின் கரைகளில் நடைப்பயிற்சி பாதை, சிறுவர் பூங்கா, படகு குழாம் ஆகியவற்றை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தீவிரமடைந்திருக்கும் வடகிழக்கு பருவமழையால், நேற்று முன் தினம் பல வருடங்களுக்குப் பிறகு, வேய்ந்தான் குளம் முழுமையாக நிரம்பி, மறுகால் பாயத் தொடங்கியிருக்கிறது. எனவே விரைவில் இங்குப் படகு குழாம் அமைக்கப்பட வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

அதனால், வேய்ந்தான் குளம் சுற்றுவட்டார மக்கள் உற்சாக மிகுதியில் இருக்கிறார்கள்.

– ஜெ.ரோ.ஜெரோஷ் கார்த்திக்

Also Read: 2K kids: குத்திரபாஞ்சான் அருவி! – நெல்லை மாவட்டத்தில் ஒரு மினி குற்றாலம்…

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.