‘கனா காணும் காலங்கள்’ டாஸ்க்கை ‘வீணா போன ஓலங்கள்’ என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த சீசன்களில் இது எத்தனை சுவாரஸ்யமாக இருந்தன?! ‘நெட்டைக் கொக்கு’ பழமொழியை தாமரை சொன்னபோது உங்களுக்கு சட்டென்று யாருடைய நினைவு வந்தது?! (க்யூட்ல?!). ராஜூவை ஆசிரியராக நியமித்ததால், அவர் தன்னை மேலும் அடக்கி வாசிக்க ஆரம்பித்துவிட்டார். மாறாக அவரையும் மாணவராகப் போட்டிருந்தால், இமானின் கூட்டணியோடு மேலும் பல சுவாரசியமான தருணங்கள் வந்திருக்கக்கூடும்.

இன்னும் ஒரு வைல்ட் கார்ட் என்ட்ரி. நிகழ்ச்சித் தொகுப்பாளரின் தோரணையில் சஞ்சீவ் உள்ளே வந்தார். மூன்று நிகழ்ச்சி தொகுப்பாளர்களை ஒரு வீடு தாங்குமா? போன சீசனில் சிம்புவின் நண்பர் மஹத். இப்போது விஜய்யின் நண்பர். “விஜய் பிக்பாஸ் பார்க்கிறாரா?” என்று சிபி ஆவலுடன் கேட்டபோது சஞ்சீவ் தந்த டெரர் லுக் சுவாரசியம். “அவரென்ன அத்தனை வெட்டியாவா இருக்கிறார்?!” என்பது போலவே இருந்தது.

ஒவ்வொரு போட்டியாளரைப் பற்றியும் சஞ்சீவ் தந்த ரிப்போர்ட் கார்டும் ஏறத்தாழ கச்சிதம். குறிப்பாக ராஜூவின் மீட்டரில் சூடு வைக்க வேண்டிய நேரத்தைப் பற்றி சொன்னது சுவாரஸ்யமான கமென்ட். ‘கரெக்ட்டான மீட்டரை ராஜூ பிடிச்சிருக்கான்” என்று முன்னர் அபிஷேக் சொன்னதற்கு நல்ல கவுன்ட்டர் கமென்ட்டாக இது இருந்தது.

சஞ்சீவ்

எபிசோட் 54-ல் என்ன நடந்தது?

“டாஸ்க் முடியப் போகுது. நீங்க பண்ண சேட்டையையெல்லாம் நீங்களே வந்து ஒத்துக்கங்க” என்று வார்டன் சிபி கேட்டதும் மாணவர்கள் பயங்கர அமைதியுடன் இருந்தார்கள். இந்தச் சமயத்தில் ராஜூ ஓர் உபாயம் செய்தார். தங்களின் வீட்டுச்சுவரில் யாரும் சிறுநீர் கழிக்கக்கூடாது என்பதற்காக உரிமையாளர்கள் ஒரு வழிமுறையைக் கையாள்வார்கள். கடவுள் படங்களை அங்கு ஒட்டி வைத்து விடுவார்கள். (மும்மதங்களை ஒன்றாக இணைத்து வைக்கும் மதநல்லிணக்க புத்திசாலிகளும் உண்டு). இந்த உத்தியைப்போல, கள்ள மெளனம் சாதிக்கும் மாணவர்களிடமிருந்து உண்மையை வரவழைப்பதற்காக “தாய்நாட்டின் மீது ஆணையாக கூறுகிறேன்” என்று ராஜூ சொல்லச் சொன்ன உபாயம் நன்கு வேலை செய்தது. “மேப்ல கூட இந்தியாவைக் காட்டிக் கொடுத்தது இல்லடா” என்கிற அளவிற்கு தேசப்பற்றுள்ள மாணவர்கள் ஒவ்வொருவராக வந்து உண்மையை ஒப்புக் கொண்டார்கள்.

பிரம்பை ஒளித்து வைத்த பாவனி அதை எடுத்து வந்து கொடுத்தார். இந்தக் குற்றத்தைப் பார்த்தும் நிர்வாகத்திடம் சொல்லாமல் விட்டவர்கள் இமான், பிரியங்கா மற்றும் அபிஷேக். விசிலை எடுத்ததை மட்டும் முதலில் ஒப்புக் கொண்ட ஐக்கி, பின்னர் தான் உருவாக்கிய கலக ஓவியங்கள், புரட்சி வாக்கியங்கள் போன்றவற்றையும் தனிமையில் ஒப்புக் கொண்டார். சேட்டை செய்தவர்களுக்கு வெளியே படுக்கும் தண்டனை கிடைத்தது. ஆனால் இந்தத் தண்டனை மாணவர்களுக்கா அல்லது வார்டனுக்கா என்று தெரியவில்லை. விடிகாலை நேரத்தில் சிபி எழுந்து ஒவ்வொரு மாணவரையும் எழுப்பி ‘உள்ளே படுங்க’ என்று தாயுள்ளத்துடன் சொல்லிக் கொண்டிருந்தார்.

சேட்டை மாணவர் லிஸ்டில் எப்படியாவது இடம்பிடித்து விட வேண்டும் என்கிற ஆவேசத்துடன் செயல்பட்டார் அபினய். (எனக்காடா சமர்த்துப் பிள்ளை பேட்ஜ் தர்றீங்க?!). ஆசிரியர்களின் ஷூக்களின் மீது க்ரீம் கொண்டு ‘ஹார்ட்’ சிம்பலை வரைந்து வைத்தார். (குறும்புலயும் ரொமான்ஸ் போகலை!).

அபினய்

Also Read: `கமலுக்கு பதில்…’ முடிவெடுத்த பிக்பாஸ் டீம்!

‘அடியே.. அடியே.. இவளே.. என் வாழ்க்கை பாழாக்க பொறந்தவளே’ என்னும் கருத்துள்ள பாடல் காலையில் ஒலித்தது. தங்களின் ஷூக்களில் மார்க் போட்ட மாணவர்களின் குறும்பைப் பற்றி ஆசிரியர்கள் கவலையுடன் பேசிக்கொண்டனர். ராஜூவின் ஷூ அவருடைய சொந்த பிராப்பர்ட்டி என்பதால் அதிகம் கவலைப்பட்டார். “நெயில் பாலிஷ் போட்டா கறை போயிடும்” என்று வில்லேஜ் விஞ்ஞானி பாவனி ஐடியா தர, அதை வைத்து ஷூவைத் துடைத்து பிராயச்சித்தம் செய்தார் அபினய். என்றாலும் கூட ராஜூவின் வருத்தம் போகவில்லை. அது திருமணத்தின் போது வாங்கிய ஷூவாம்.

புதுவரவு அமீர் எங்கே இருக்கிறார் என்று தேடிக் கொண்டிருந்தோம். ஆனால் ‘டம் டம்’ பாடலுக்கு டான்ஸ் சொல்லித் தருவதின் மூலம் தன் இருப்பை அழுத்தமாக நிரூபித்து விட்டார். 1,2,3,4 என்று இயல்பான அசைவுகளை வரிசைப்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு பகுதியாக அவர் சொல்லித் தந்த போது கூட நமக்கு ஒன்றும் தெரியவில்லை. ஆனால் பாடல் ஒலிக்க ஆரம்பித்து. எல்லோரும் ஒத்திசைவுடன் நடனம் ஆடிய போதுதான் அமீரின் உழைப்பு புரிந்தது. ஏறத்தாழ சினிமாவில் வரும் க்ரூப் டான்ஸ் போலவே அந்த நடனம் கச்சிதமாக அமைந்து பிரமிப்பை ஏற்படுத்தியது. ‘டான்ஸ் மாஸ்டர்’ என்னும் கூட்டியிலேயே தங்கி விடாமல் அமீர் வெளியே வர வேண்டும்.

பின்னர் நடந்த பள்ளி விழாவில் ‘சிறந்த மாணவி’யாக தாமரை தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது உரையின்போது “இமானை போல ஒரு சேட்டைக்காரனை பார்த்ததில்லை. அவன் நல்ல பையனே அல்ல” என்று தாமரை ‘கெட்ட’ சான்றிதழ் வழங்கியபோது விறைப்பாக இமான் நின்றது சுவாரஸ்யம்.

‘நா பிறழ் சொற்கள்’ என்னும் தலைப்பில் ‘Tongue Twisting Words’-ஐ சொல்லித் தந்தார் தமிழ் ஆசிரியர் ராஜூ. இதில் இமான் சிறப்பாக செயல்பட்டு அனைவரின் பாராட்டையும் பெற்றார். பிரியங்கா கடைசி வரை ‘கிழவி’யை கெழவி என்றே சொல்லிக் கொண்டிருந்தார். வருண் சொன்னது என்னவென்று அவருக்கே புரிந்திருந்தால் சரி. பாவனி ரோடு ரோலரை தமிழின் மீது ஏற்றிக் கொண்டிருந்தார். தனக்குத் தந்த வாக்கியத்தை பாடலாகவே ஐக்கி பாடியது சிறப்பு. “உங்களுக்காக உயிரைக் கொடுத்து தமிழ் சொல்லித் தரும் தமிழாசிரியர் ஐயா பற்றி நீங்கள் சிறப்பாக ஏதாவது சொல்லலாம்” என்று சந்தடி சாக்கில் தன்னைப் பற்றிய பெருமையை ராஜூ பறைசாற்ற நினைத்தபோது ‘பெல் அடித்து’ அந்த ஆசையில் மண்ணைப் போட்டார் பிக்பாஸ்.

அக்ஷரா

அடுத்ததாக கடிதம் எழுதும் டாஸ்க். ‘கிளாஸ்மேட்டுக்கு எழுதலாமா?” என்று ரொமான்ஸ் குறையாமல் கேட்டார் அபினய். கடிதத்ததில் ‘அ’ எழுத ஆரம்பிக்கும் போதே அக்ஷராவிற்கு கண்ணீர் வர ஆரம்பித்து விட்டது. (நல்ல சீரியல் ஆர்டிஸ்ட்டா வருவாங்க). இவரை அணைத்து ஆறுதல் சொன்னார் பிரியங்கா. அக்ஷரா தன் கடிதத்தை படிக்கும் போது ‘உங்க little princess’ எழுதறேன்’ என்று ஆரம்பித்த போதே தெரிந்து போயிற்று. எத்தனை செல்லமாக அவர் வளர்ந்திருப்பார் என்று. “இங்க அப்பப்ப ஸ்ட்ரெஸ் ஆயிடறேன். அண்ணா…. எல்லா முடிவையும் நீதான் எடுத்திருக்கே” என்று அக்ஷரா எழுதிய கடித வரிகளின் மூலம் அவர் மற்றவர்களைச் சார்ந்தே வளர்க்கப்பட்டிருக்கிறார் என்பது நன்கு தெரிகிறது. குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு சுயமுடிவுகளை எடுக்கும் தன்னம்பிக்கையுடன் குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்பதற்கான உதாரணம் அக்ஷரா.

பிரியங்கா

அம்மாவிற்கு எழுதிய கடிதத்தை நிரூப் வாசிக்கும்போது பிரியங்காவின் கண்களில் நீர். தன் அப்பாவிற்கு கடிதம் எழுதியிருந்தார் வருண். “நீ சொல்லிக் கொடுத்த விஷயம்லாம் எவ்வளவு உபயோகம்னு இங்க வந்துதான் தெரியுது” என்று அம்மாவை நினைத்து உருகினார் பிரியங்கா. மனைவி மகளுக்கு பிரியத்துடன் எழுதியிருந்தார் அபினய்.

பரிசு வழங்கும் விழா. ‘சிறந்த மாணவனாக’ நிரூப் தேர்ந்தெடுக்கப்பட்ட போது “இவன் நல்ல பையனா?” என்று பிக்பாஸிற்கே தலை சுற்றியிருக்கும். ‘தமிழ் வகுப்பில்’ சிறப்பாக செயல்பட்ட இமானிற்கும் கோப்பை கிடைத்தது. நடனத்தில் சிறந்த மாணவியாக ஐக்கி தேர்ந்தெடுக்கப்பட்டதில் ஆச்சரியமில்லை. விளையாட்டில் வருண் கில்லியாம்.

‘அங்காடி தெரு’ திரைப்படத்தில், தன்னைக் கொடுமைப்படுத்திய சூப்பர்வைசரை, பணியாளர்கள் கற்பனையில் பழிவாங்கும் பாடலைப் போன்று, இந்த டாஸ்க் முடிந்ததும் ஆசிரியர்களை மாணவர்கள் பழிவாங்கத் தொடங்கினார். அவர்களைக் கட்டிப் போட்டு ராஜூவிற்கு கிச்சுகிச்சு மூட்டி, சிபியின் தலையில் பவுடரைக் கொட்டி (ஒரு டப்பா என்ன விலை தெரியுமா?!). அந்த இடத்தையே நாசம் செய்தார்கள். மற்ற ஆசிரியர்களுக்கு தண்டனை சரி. தலைமறைவாகவும் சமர்த்தாகவும் உலவிக் கொண்டிருந்த அமீருக்கும் ஏன் இந்த தண்டனை என்று தெரியவில்லை.

‘சும்மா இருடா டேய்’ என்று மற்றவர்களை அதட்டினார் இமான். அடுத்து வரும் டாஸ்க்கின் பெயர் அதுதான். அந்த வீட்டில் என்ன நடந்தாலும் போட்டியாளர்கள் ரியாக்ட் செய்யவே கூடாதாம். அப்படி செய்பவர்கள் எவிக்ஷன் பட்டியலில் நேரடியாக இடம்பெறுவார்களாம். இப்படியாக பிக்பாஸின் அறிவிப்பு “வீட்ல இருக்கறதையெல்லாம் வந்து எடுத்துட்டு போவாங்க. நாம ரியாக்ட் பண்ணாம இருக்கணும்” என்று ஆளாளுக்கு பேசிக் கொண்டிருந்தார்கள். “உங்க மேக்கப் பொருட்களையெல்லாம் கூட எடுத்துக்கிட்டு போயிடலாம்” என்று அபினய் டெரராக பயமுறுத்தினார்.

ராஜூ

இடி, மின்னல் எபெக்ட்டையெல்லாம் போட்டு போட்டியாளர்களை பயமுறுத்த முயன்றார் பிக்பாஸ். ‘நாங்க பயப்படலையே’ என்று காண்பித்துக் கொள்வதற்காக மக்கள் ஓவர் ஆக்ட் உற்சாகத்துடன் பேசிக் கொண்டிருந்தார்கள். ராஜூ, பிரியங்கா, அபிஷேக் ஆகியோர் டாஸ்க்கின்போது பேசிய வசனங்களும் ஒலித்தன. மக்கள் ஓரக்கண்ணால் இவற்றைக் கவனித்தாலும் கவனிக்காததுபோல திறமையாக நடித்தார்கள். பிக்பாஸ் மெயின் டோரைத் திறந்து பாடலைப் போட்டாலும்கூட மக்கள் திறமையாக அடக்கி வாசித்ததால் “உங்களின் கடமையுணர்ச்சியைப் பாராட்டுகிறேன். டாஸ்க் முடிந்தது’ என்று ஜோக் அடித்தார் பிக்பாஸ். (இந்த சீசன்ல பிக்பாஸோட நகைச்சுவையுணர்ச்சி வெளியே வரவேயில்ல!).

“அம்மா.. பூச்சாண்டி.. பூச்சாண்டி வர்றான்” என்று அலறுகிற குழந்தை மாதிரி “யாரோ வர்றாங்க. யாரோ வர்றாங்க” என்று அலறியடித்துக் கொண்டு மெயின் டோர் பக்கம் ஓடிய பிரியங்காவை அமைதிப்படுத்திய மக்கள், “இரும்மா.. ஏன் இப்படி பதர்றே” என்று உட்கார வைத்தார்கள். திறந்து வைத்திருந்த கதவின் வழியாக ஸ்டைலாக நுழைவதாக நினைத்துக் கொண்டு ஓரமாக நுழைந்தார் சஞ்சீவ்.

ஒவ்வொருவரையும் அணைத்து விட்டு “அண்ணாச்சி வந்தாதான் நான் உள்ளே வருவேன்’ என்று அங்கேயே அமர்ந்து விட்டார் சஞ்சீவ். “என்னதிது சத்திரத்தை திறந்து விட்டது போல ஒவ்வொருத்தனா. உள்ளே வரானுக’ என்று வைல்ட் கார்ட் என்ட்ரி மீது அண்ணாச்சிக்கு கோபமோ என்னமோ?! சஞ்சீவை பார்க்காதது போலவே அவர் நெடுநேரம் நடித்தார். டாஸ்க்கில் பிஸியாக இருக்கிறாராம். இதனால் நொந்து போன சஞ்சீவ் “அண்ணாச்சி.. முழிச்சுக்கங்க.. டாஸ்க் முடிஞ்சிருச்சி” என்ற அவரை உலுக்கியெடுத்த பிறகே “அடடே.. எப்ப வந்தே.. நல்லாயிருக்கியா. ஊர்ல மழையா..?” என்று தன் ஃபர்பாமன்ஸை திறமையாக செய்தார் இமான்.

“இதுக்கு முன்னாடி இருந்த சீசன்கள் போலவே இந்த சீசனும் சூப்பரா போயிட்டிருக்கு. உங்களுக்கு வெளியில் பிரகாசமான வருங்காலம் காத்திருக்கு” என்று கமலே தோற்று விடும்படியாக அள்ளி விட்டார் சஞ்சீவ். பிறகு மக்களை சுற்றி அமர வைத்து அவர்களின் ரிப்போர்ட் கார்டை தந்தார்.

ஐக்கி

முதலில் சற்று டம்மியாக இருந்தாலும் பிறகு ஹீரோவாக மாறி விட்டாராம் வருண். அக்ஷரா புரியாத புதிராம். சிபி பயங்கரமாக கவனிக்கிறாராம். ஆனால் வெறுமனே கவனித்துக் கொண்டிருந்தால் போதாதாம். அண்ணாச்சி கிட்ட ஏதோவொரு சூட்சுமம் இருக்காம். இதுவரைக்கும் அந்த வயது கேட்டகிரியில் யாரும் ஐம்பது நாட்களைத் தாண்டவில்லையாம். இதைக் கேட்டதும் குதூகலத்தில் சிரித்தார் இமான். “சில பேரு இருக்காங்க. நான் எக்ஸாமிற்கு படிக்கவேயில்லப்பா –ன்னு கதறி அழுவாங்க. ஆனா அவங்கதான் அப்புறம் முதல் மார்க் எடுப்பாங்க” என்று தாமரை பற்றி சொல்லப்பட்ட போது பெருமிதத்தில் வெட்கத்துடன் சிரித்தார் தாமரை. ‘

நிரூப்பு நெருப்பு. டோன்ட்கேர் மாஸ்டரு. அமீர் இப்பத்தான் வந்திருக்காரு. போகட்டும். அபினய் எப்படியாவது உள்ளே புகுந்து வந்துடணும்னு ஆவேசமா இருக்காரு. பாவனி – பாவம் நீ.. இந்தம்மாவை ஜட்ஜ் பண்ணவே முடியலை. எந்தச் சமயத்துல என்ன செய்வாங்கன்னே தெரியல. ராஜூ நல்ல என்டர்டெயினர். ஒரு சரியான மீட்டரை பிடிச்சிருக்கார். ஆனா அந்த மீட்டர்ல சூடு வெச்சாதான் இனி வேலைக்காகும். ஐக்கி எல்லோரும் சந்தோஷமா இருக்கணும்னு நெனக்கற நல்ல ஆத்மா. ஆனா இது எப்பவுமே செல்லுபடியாகாது.

தாமரை

அபிஷேக்கிற்கு திறமை இருக்கறதாலதான் மறுபடியும் கூப்பிட்டிருக்காங்க. ஆனா நம்ம திறமையால மத்தவங்களுக்கு என்ன உபயோகம்ன்றதை பொறுத்துதான் அந்த திறமைக்கு மதிப்பு. பிரியங்கா என்னை மாதிரியான காரெக்ட்டர். கொஞ்சுனா. கொஞ்சுவாங்க. மிஞ்சினா மிஞ்சுவாங்க. இந்த வீட்டில் சிரிப்பு சத்தம் கேட்க காரணமா இருக்கறவங்க” என்று தன் கணிப்புகளை சொல்லி முடித்தார் சஞ்சீவ்.

‘ஊருக்கெல்லாம் ஜோசியம் சொல்லுமாம் பல்லி. தான் போய் கழனிப்பானைல விழுமாம்’ என்று ஒரு பழமொழி இருக்கிறது. அதைப் போல் மற்றவர்களை கணித்த சஞ்சீவ், தான் எப்படி செயல்படுவார் என்பதை இனிதான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.