மேகாலயாவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் சங்மா உள்பட12 எம்எல்ஏக்கள், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்திருப்பதன் பின்னணியில் ஐபேக் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்த பின்னணி அரசியல் சற்றே விரிவாகப் பார்ப்போம்.

மேற்கு வங்க மாநிலத்தை கடந்து வடகிழக்கு மாநிலங்களிலும் கட்சியை வளர்க்க திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் காரணமாக திரிபுராவில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதாவுக்கும், திரிணாமூல் காங்கிரஸுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.

தற்போது திரிபுராவை அடுத்து மேகாலயா மாநிலத்திலும் திரிணாமூல் காங்கிரஸைப் பலப்படுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஏற்கெனவே, கட்சியின் உயர் பொறுப்புக்கு தன்னை நிராகரித்துவிட்டதால் மன வருத்தத்தில் இருந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், மேகலாயா சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான முகுல் சங்மா தலைமையில் 12 எம்எல்ஏக்கள் திரிணாமூல் காங்கிரஸில் ஐக்கியமாகி இருக்கின்றனர்.

வழக்கமாக, பதவியில் இருக்கும் எம்எல்ஏ ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு தாவினால் கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க முடியும். அதுவே, மொத்தமுள்ள எம்எல்ஏக்களில், மூன்றில் இரு பங்கு பேர் வேறு கட்சிக்கு தாவினால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது.

தற்போது மேகாலயாவில் காங்கிரஸுக்கு இருக்கும் 17 எம்எல்ஏக்களில், மூன்றில் இரண்டு பங்கு 12 எம்எல்ஏக்கள் திரிணாமூல் காங்கிரஸில் ஐக்கியமாகி இருப்பதால் அவர்களைத் தகுதி நீக்கம் செய்ய முடியாது என கூறப்படுகிறது. இதனால், திரிணாமூல் காங்கிரஸ் தற்போது பிரதான எதிர்க்கட்சியாக உருவெத்திருக்கிறது.

காங்கிரஸில் இருந்து விலகியதற்கான காரணங்களை பட்டியலிட்டு பேசிய முன்னாள் முதல்வர் முகுல் சங்மா, “ஜனநாயகத்தில் சமநிலை இருக்க வேண்டும். குறிப்பாக திறமையான எதிர்க்கட்சி இருக்க வேண்டும். ஆனால், மேகாலயாவில் அப்படி நடக்கவில்லை. காங்கிரஸ் ஒரு திறமையான எதிர்க்கட்சியாக செயல்படுவதில் தோல்வி அடைந்துவிட்டது. இதை டெல்லியில் தலைமையிடம் பல முறை தெரிவித்துவிட்டோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை” என்று வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

image

பின்னணியில் பிரசாந்த் கிஷோர்!

12 எம்எல்ஏக்கள் இப்படி மொத்தமாக திரிணாமூல் காங்கிரஸில் ஐக்கியமானதன் பின்னணியில் பிரபல ஐபேக் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் இருக்கிறார். திரிணாமூல் கட்சியில் இணைந்த பிறகு முகுல் சங்மா தனது பேட்டியின்போது, “எனது நல்ல நண்பரான பிரசாந்த் கிஷோர்-ஜியைச் சந்தித்தேன். அவர் நல்ல நண்பர் மட்டுமல்ல… மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவரும் கூட. யாரால் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை யோசித்துதான் அவரை சந்தித்தோம். சந்திப்பின்போது நாங்கள் இருவரும் ஒரே நோக்கத்தைப் பகிர்ந்துகொண்டோம்” என்று இதனை ஒப்புக்கொண்டார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது மேற்கு வங்கத்தில் பாஜக எழுச்சி கண்டதை அடுத்து, பாஜகவை சமாளிக்கவும், சட்டப்பேரவைத் தேர்தலில் வெல்லவும் பிரசாந்த் கிஷோர் மூலம் காய்களை நகர்த்தினார் மம்தா பானர்ஜி. அதற்கு கைமேல் பலன் கிடைக்க, தொடர்ந்து பிரசாந்த் கிஷோர் மூலமாக வியூகங்களை வகுத்து வருகிறார். தேசிய அளவில் திரிணாமூல் காங்கிரஸை வலுப்படுத்தும் முயற்சிக்கு பிரசாந்த் கிஷோரை தலைமை தாங்குகிறார்.

குறிப்பாக, பாஜக ஆளும் மாநிலங்களை டார்கெட் செய்து அங்கே முகாம் அமைத்து வரும் மம்தாவின் முயற்சிக்கு செயல் வடிவம் கொடுத்து வருகிறார் பிரசாந்த். அதன்படி அசாம், திரிபுரா, கோவா மாநிலங்களை அடுத்து மம்தா இப்போது மேகாலயா மாநிலத்திலும் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறது இவர்கள் கூட்டணி. இதன் பின்னணியில்தான் தற்போது காங்கிரஸின் 12 எம்எல்ஏக்களை தங்கள் வசம் கொண்டுவந்துள்ளது.

வரவிருக்கும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சியின் முகமாக தன்னை முன்னிறுத்தும் வேலைகளில் பிரசாந்த் கிஷோர் மூலமாக கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார் மம்தா பானர்ஜி. இதற்கு முதல்படியாக அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் மாநிலங்களில் கால்பதிக்க முயற்சிக்கிறது திரிணாமூல். அசாம், திரிபுரா, கோவா, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் திரிணாமூல் கட்சியின் சமீபத்திய அரசியல் செயல்பாடுகள் இந்த பின்னணியில் இருந்துதான் வந்துள்ளன. இதில் லேட்டஸ்ட்டாக இணைந்திருப்பதுதான் மேகாலயா.

அசாம், திரிபுராவை மட்டும்தான் குறிவைக்கப்பதாக நினைத்த நிலையில் தற்போது மேகாலயாவில் காங்கிரஸை கவிழ்த்து பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்திருப்பதன் மூலம் பிற வடகிழக்கு பகுதிகளும் திரிணாமூல் பட்டியலில் இருப்பது தெளிவாகியுள்ளது. 2023-ம் ஆண்டு மேகாலயா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலுக்கு திரிணாமூல் காங்கிரஸை தயார்படுத்துவதற்காக பிரசாந்த் கிஷோரின் தேர்தல் வியூகக் குழு மேகாலயாவின் தலைநகர் ஷில்லாங்கில் முகாமிட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது.

செப்டம்பரில் கோவா முன்னாள் முதல்வர் லூயிசின்ஹோ ஃபலேரோ, திரிணாமூல் காங்கிரஸில் இணைந்த பிறகு பேசியவர், “அகில இந்திய காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், ஜெகன்மோகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் என மொத்தம் நான்கு காங்கிரஸில் மோடிக்கும் கடும் கடும் போட்டியைக் கொடுத்தவர் மம்தா மட்டுமே. சட்டசபை தேர்தலில் பாஜகவை தோற்கடித்து தேசிய அரங்கில் முக்கிய தலைவராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார் மம்தா தீதி. மம்தா பானர்ஜியை மேற்கு வங்கத்துக்கான ஒரு தலைவராக மட்டுமில்லாமல், ஒரு பான்-இந்தியத் தலைவராக பார்க்கிறேன்” என்று கூறியிருந்தார்.

ஃபலேரோ கூறியது போல், தன்னை ஒரு பான்-இந்தியத் தலைவராக நிலைநிறுத்த முயன்று வருகிறார் மம்தா. அதன் தொடர்ச்சியாக இந்த ‘அரசியல்’ சம்பவங்கள் நடக்கத் தொடங்கியுள்ளன என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

– மலையரசு

தொடர்புடைய செய்தி: மேகாலயா: திரிணாமுல் காங்கிரஸில் இணைந்த காங்கிரஸின் 12 எம்.எல்.ஏக்கள்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.