வேலூரில், கூலிப்படை கலாசாரத்தை வேரூன்றச்செய்த பிரபல ரௌடிகள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், 18 வயதுக்கு உட்பட்ட சிறார் குற்றவாளிகள் கேங்ஸ்டர்களாக உருவெடுத்து, மக்களை நடு நடுங்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். சட்டென்று கத்தியை எடுத்து எதிராளியின் வயிற்றில் சொருகிவிடுகிறார்கள். மாநகரத்திலிருக்கும் ஓல்டுடவுன், சலவன்பேட்டை, சைதாப்பேட்டை, தோட்டப்பாளையம், கஸ்பா, விருதம்பட்டு பகுதிகளிலிருந்துதான் புதிது புதிதாக ரெளடிகள் முளைத்துவருகிறார்கள். அவர்களில் பலரும் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் என்கிறது வேலூர் போலீஸ். சமீபத்தில், வேலூரில் அடுத்தடுத்து நிகழ்ந்த கொடூரக் கொலைகள், பொதுமக்களை அச்சமடையச்செய்தன. இந்தச் சம்பவங்களைச் செய்தவர்களும் 17 முதல் 25 வயதுக்குள்ளான சிறுவர்கள், இளைஞர்கள் என்பதுதான் அதிர்ச்சிக்குக் காரணம்.

கொலை (சித்தரிக்கப்பட்ட படம்)

வேலூர் தோட்டப்பாளையத்தைச் சேர்ந்த 20 வயதான பாலமுருகனை `அக்டோபர் 28-ம் தேதியிலிருந்து காணவில்லை’ என்று அவரின் தாய் போலீஸில் புகார் கொடுத்தார். பெண் விவகாரம் தொடர்பாக, நண்பர்களே பாலமுருகனைக் கொன்று புதைத்தது, நவம்பர் 10-ம்தேதி தான் தெரியவந்தது. இதுதொடர்பாக 17, 18, 19 வயதுடைய மூன்று சிறுவர்கள் கைதுசெய்யப்பட்டனர். அதேபோல், காட்பாடி வண்டறந்தாங்கலைச் சேர்ந்த 20 வயது இளைஞர்கள் நேசகுமார், விஜய் இருவரையும் நவம்பர் 10-ம்தேதியிலிருந்து காணவில்லை. ஐந்து நாள்களுக்குப் பிறகே கஞ்சா போதையில் இருவரின் கதையும் முடிக்கப்பட்டது போலீஸாருக்குத் தெரியவந்தது. இது தொடர்பாக விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்த 17 சிறுவன் உட்பட ஐந்துபேர் கைதுசெய்யப்பட்டனர்.

இந்தநிலையில், பட்டாக் கத்தியைக் காட்டி வழிப்பறியில் ஈடுபட்டுவந்த சிறுவர்கள் இருவர் உட்பட மூன்று பேரை வேலூர் மாவட்ட எஸ்.பி செல்வகுமார் தலைமையிலான போலீஸார் துப்பாக்கி முனையில் விரட்டிப் பிடித்து கைதுசெய்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

எஸ்.பி செல்வகுமார் நேற்று மதியம் ஒரு மணியளவில், சத்துவாச்சாரியிலிருக்கும் தனது அலுவலகத்திலிருந்து வீட்டுக்குக் காரில் சென்றுக்கொண்டிருந்தார். வேலூர்-காட்பாடி சாலையில் செல்லும்போது, சிறுவர்கள் உட்பட மூன்றுபேர் ஸ்கூட்டரில் வேகமாக சென்று கொண்டிருந்தனர். வண்டியை ஓட்டியவர் தலையில் குரங்கு குல்லாவும், முகத்தை மறைத்தபடி மாஸ்க்கையும் அணிந்திருந்தார். பின்னால் அமர்ந்திருந்த மற்ற இருவரின் கையிலும் பட்டாக் கத்திகள் இருந்தன.

ஸ்கூட்டரில் சென்ற வழிப்பறி சிறுவர்கள்

இதனை காரில் இருந்து கவனித்த எஸ்.பி செல்வகுமார் சந்தேகமடைந்து, அந்த இருசக்கர வாகனத்தை மடக்கிப் பிடிக்க முயன்றார். ‘சைரன் வைத்த போலீஸ் அதிகாரியின் கார் நம்மைதான் துரத்துகிறது’ என்பதை சுதாரித்துக்கொண்ட சிறுவர்கள் வேகத்தைக் கூட்டினர். எஸ்.பி-யின் கார் இருசக்கர வாகனத்தை முந்தி, ‘சறுக்’ என்று பிரேக் அடித்து குறுக்கே நின்றது. டோரைத் திறந்து எஸ்.பி இறங்கியபோது, இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த இரண்டுபேர் கீழே இறங்கி, அருகிலுள்ள சி.எம்.சி மருத்துவமனை வளாகத்துக்குள் தலைத்தெறிக்க ஓடினர். வண்டியை ஓட்டிய நபரும் சிக்காமல், வண்டியுடனேயே ‘எஸ்கேப்’ ஆகிவிட்டார். கீழே விழுந்த தனது தொப்பியை எடுத்து, தலையில் அணிந்த எஸ்.பி செல்வகுமார், சி.எம்.சி-க்குள் ஓடிய இருவரையும் துப்பாக்கி முனையில் பிடிக்க தனது கன்மேனுக்கு உத்தரவிட்டார்.

கைத்துப்பாக்கியுடன் பாய்ந்தோடிய கன்மேன், மருத்துவமனையிலிருந்த பாதுகாவலர்களின் உதவியுடன் இருவரையும் மடக்கிப் பிடித்தார். கத்தியுடன் சிறுவர்களையும், துப்பாக்கியுடன் போலீஸையும் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியில் பதற்றமடைந்தனர். விசாரணையில், ஓல்டு டவுன் உத்திரமாதா கோயில் தெருவைச் சேர்ந்த 20 வயதான கிஷோர், சலவன்பேட்டை திருக்குமரன் தெருவைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரின் 18 வயது மகன் எனத் தெரியவந்தது. இவர்களை வைத்து, தப்பி ஓடிய சிறுவனும் சில நிமிடங்களுக்குள் பிடிக்கப்பட்டார். 18 வயதான அச்சிறுவனும் ஓல்டு டவுன் உத்திரமாதா கோயில் தெருவைச் சேர்ந்தவர்தான். விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

அகரம்சேரியைச் சேர்ந்த நாடோடியின இளைஞர் சதீஷ், வேலூரிலிருக்கும் தி.மு.க மத்திய மாவட்ட அலுவலகம் அருகில் சாலையோரம் அமர்ந்து, ‘டாட்டூ’ போடும் தொழிலைச் செய்கிறார். அவரிடம் சென்ற மேற்கண்ட மூன்றுபேரும், ‘டாட்டூ போடுவதற்கு எவ்வளவு?’ என்று கேட்டிருக்கிறார்கள். அவரும் நாகரிகமான முறையில், ‘ஒரு எழுத்துக்கு 30 ரூபாய் ஆகும்’ என்று கூறியிருக்கிறார்.

துப்பாக்கி முனையில் பிடித்த போலீஸ்

‘காசெல்லாம் கொடுக்க முடியாது. இது எங்க ஏரியா. அதிலும் நாங்க ரௌடிகள்’ என்று அறுவறுக்கத்தக்க வகையில் பேசியதுடன் இடுப்பில் சொருகியிருந்த பட்டாக் கத்தியையும் எடுத்து குத்த முயற்சித்துள்ளனர். நாடோடியின இளைஞர் அச்சமடைந்து கதறிய நிலையில், அவரிடமிருந்த 12,000 ரூபாய் மதிப்பிலான செல்போன் மற்றும் 1,200 ரூபாய் பணத்தைப் பறித்துக்கொண்டு தப்பினர். இப்படியொரு சம்பவம் நடந்திருக்கிறது என்பது முன்கூட்டியே எஸ்.பி-க்குத் தெரியாது. இவர்களின் கையில் இருந்த கத்திகளைப் பார்த்து எதேச்சையாக மடக்கியபோதுதான், வழிப்பறி விவகாரம் தெரியவந்தது. ஒருவேளை எஸ்.பி கவனிக்காமல் சென்றிருந்தால், நாடோடியின இளைஞரிடம் பணம் பறிக்கப்பட்ட விவகாரமே வெளியில் வந்திருக்காது.

பிடிபட்ட சிறுவர்களிடமிருந்து செல்போன், பணம், இரண்டு பட்டாக் கத்திகள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், அவர்கள்மீது வழக்கு பதிவு செய்து சிறையிலும் அடைத்தனர். இதுதொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகின்றன. சினிமா படத்தில் வரும் ‘த்ரில்லர்’ காட்சிகளைப்போல அந்த காட்சிகள் இருப்பதைப் பார்த்து, வேலூர் மக்கள் அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.